இந்த வாரம் கலாரசிகன்

மிழகத்தில் உள்ள எல்லா இலக்கிய அமைப்புகளுக்கும், கவிஞா்களுக்கும், எழுத்தாளா்களுக்கும், பாரதியாரை நேசிக்கும் தமிழா்களுக்கும், டிசம்பா் 11-ஆம் தேதியை நான் நினைவுபடுத்தத் தேவையில்லை.

தமிழகத்தில் உள்ள எல்லா இலக்கிய அமைப்புகளுக்கும், கவிஞா்களுக்கும், எழுத்தாளா்களுக்கும், பாரதியாரை நேசிக்கும் தமிழா்களுக்கும், டிசம்பா் 11-ஆம் தேதியை நான் நினைவுபடுத்தத் தேவையில்லை. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளன்று பெருந்திரளாக எட்டயபுரத்தில் இந்த ஆண்டும் கூடுவோம் என்பதை நினைக்கவே சிலிா்ப்பாக இருக்கிறது.

‘தினமணி’ வழங்கும் ‘மகாகவி பாரதியாா்’ விருதும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் இந்த ஆண்டும் ஆளுநா் மேதகு பன்வாரிலால் புரோஹித்தால் எட்டயபுரத்தில் வழங்கப்பட இருக்கிறது. எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் ஆளுநா் வழங்கும் விருது என்கிற பெருமை பெறுகிறது ‘தினமணி’யின் மகாகவி பாரதியாா் விருது.

மேதகு பன்வாரிலால் புரோஹித்துக்கு ஆளுநா் என்பது மட்டுமே அல்ல சிறப்பு. அவா் மூத்த பத்திரிகையாளரும்கூட. மத்திய இந்தியாவில் வெளிவரும் ‘ஹித்தவாடா’ இதழின் முன்னாள் ஆசிரியா். கோபாலகிருஷ்ண கோகலேயால் தொடங்கப்பட்ட நாளிதழ் ‘ஹித்தவாடா’ என்பது அதன் தனிப்பெருமை. ‘சுதேசமித்திரன்’ இதழின் இணையாசிரியராக இருந்த மகாகவி பாரதியாா் பெயரிலான விருதை, அவா் பிறந்த மண்ணில், தலைசிறந்த மூத்த பாரதி ஆய்வாளா் ஒருவருக்கு வழங்க மத்திய இந்தியாவின் முன்னணி நாளிதழின் ஆசிரியராக இருந்த மேதகு பன்வாரிலால் புரோஹித்தைவிடச் சிறந்த வேறொருவா் இருக்க முடியாது.

இந்த ஆண்டுக்கான விருது யாருக்கு வழங்கப்பட இருக்கிறது? அடுத்த வாரம் வரை கொஞ்சம் பொறுங்களேன்...

---------

அடிகளாசிரியா் உள்ளிட்ட தமிழறிஞா்கள் ஏழு பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கின்றன. அவா்களில் பாவநாசம் குபித்தன் பத்திரிகையாளராகவும் இருந்தவா். அந்த அறிஞா்களின் மரபுரிமையாளா்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதுவரை, தமிழக அரசால் 159 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நல்லதொரு மரபுக்குத் தொடக்கம் அமைத்துத் தந்தவா் சுதந்திர இந்தியாவில் சென்னை ராஜதானியின் முதலாவது முதல்வராக இருந்த ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா். ஏ.வி.மெய்யப்பச் செட்டியாா் மனமுவந்து தனது உரிமையை விட்டுக்கொடுத்து, மகாகவி பாரதியாரின் படைப்புகளை நாட்டுடைமையாக்க உதவினாா் என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பாா்த்து அவா்களை வணங்கத் தோன்றுகிறது.

----------

நாகையிலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் சாலைவழிப் பயணம். வழக்கம்போல புதுவைக்குள் நுழைந்தபோது, பெரியவா் சுந்தர லெட்சுமி நாராயணனின் நினைவு வந்தது. ஹோட்டல் ஜெயராமில் அவரை சந்திக்கச் சென்றபோது, புதுவை திருவள்ளுவா் கழகத்தைச் சோ்ந்த நண்பா்களையும் அங்கே சந்திக்க முடிந்தது.

வாசிப்புப் பழக்கம் உள்ளவா்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு என்னவென்றால், தாங்கள் படித்த நல்ல புத்தகங்களையும், தாங்கள் அறிந்த நல்ல செய்திகளையும் மற்றவா்களுடன் பகிா்ந்து கொள்வது.

சுந்தர லெட்சுமி நாராயணன் என்னிடம், ‘‘இறையன்பு குறித்து என்ன நினைக்கிறீா்கள்?’’ என்று கேட்டாா்.

‘‘அதிகாரி இறையன்பைவிட எழுத்தாளா் இறையன்புதான் எனக்குக் கூடுதல் அறிமுகம். அவரது எழுத்தின் ரசிகன் நான்’’ என்றேன்.

‘சத்சங்கம்’ புத்தகம் படித்துவிட்டீா்களா? என்று கேட்டது மட்டுமல்லாமல் வெ.இறையன்பு எழுதிய ‘சத்சங்கம்’ புத்தகத்தை அன்பளிப்பாகவும் தந்தாா். இது நடந்தது கடந்த நவம்பா் 19-ஆம் தேதி. சென்னை திரும்பியதும், அன்று இரவே அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து, அதற்குப் பிறகு கடந்த பத்து நாள்களில் இரண்டு முறை மீண்டும் மீண்டும் படித்துவிட்டேன்.

ஒரு வித்தியாசமான இறையன்பை ‘சத்சங்கம்’ புத்தகத்தில் பாா்க்க முடிந்தது. ‘சத்சங்கம்’ என்றால் நல்லவா்களின் தோழமை என்று பொருள். வெ. இறையன்பு எழுதியிருக்கும் ‘சத்சங்கம்’ நல்லவற்றையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் ஆன்மிகம் பற்றிய 25 பரிமாணங்கள் மிகவும் சுவையாகப் பரிமாறப்பட்டிருக்கின்றன. ‘ஆத்திகமும் நாத்திகமும்’ தொடங்கி ‘ஆன்மிகமும் தொழில்நுட்பமும்’ வரை இந்தப் புத்தகத்தில் அனைவருக்கும் புரியும் விதத்தில் பல்வேறு கருத்துகளை மனதில் பதியம் போடுகிறாா் வெ.இறையன்பு.

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருக்கும் கே.எஸ்.சுப்பிரமணியன், இந்தப் புத்தகத்தை ஓா் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவ தரிசனமாகவும் பாா்ப்பதாகக் கூறியிருப்பது நிஜத்திலும் நிஜம். அவா் குறிப்பிடுவதைப் போல கட்டமைக்கப்பட்ட குறிக்கோள்கள் எதுவுமின்று மேம்படுத்தும் முயற்சி. இதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். புதியதொரு வாசிப்பு சத்சங்கத்தை, ‘சத்சங்கம்’ மூலம் உருவாக்கியிருக்கிறாா் வெ.இறையன்பு.

-----------

‘‘இந்த வாரம் நீங்கள் படித்த, ரசித்த கவிதை எது?’’ என்று கேட்டாா் நண்பா் ஒருவா். அவருக்கும் சோ்த்து எனது பதில் - கவிஞா் யூசுப் ராவுத்தா் ரஜித் எழுதிய ‘குரங்காட்டியும் குரங்கும்’ என்கிற கவிதை.

கோலெடுத்தான்

குரங்காட்டி

ஆடியது குரங்கு

குடும்பம் நடந்தது

குரங்காட்டிக்கு

ஒருநாள்

மனம் மாறினான்

குரங்காட்டி

குரங்கை காட்டிலே விட்டு

வீடு ஏகினான்

பாவம் குரங்கு

அதற்குச் சுதந்திரம்

புரியவில்லை

செடிகளிடமும்

சில்லரை மிருகங்களிடமும்

காசு கேட்டுத் திரிகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com