உறை கிணறு

"நீரின் றமையாது உலகு' என்று நீரின் இன்றியமையாமை பற்றி எடுத்துரைத்தார் திருவள்ளுவர். மனிதனுக்குப் பெரிதும் உபயோகப்படக் கூடிய நீர் நிலைகளில் ஒன்று "கிணறு'. கல்வி அறிவிற்கு
உறை கிணறு

"நீரின் றமையாது உலகு' என்று நீரின் இன்றியமையாமை பற்றி எடுத்துரைத்தார் திருவள்ளுவர். மனிதனுக்குப் பெரிதும் உபயோகப்படக் கூடிய நீர் நிலைகளில் ஒன்று "கிணறு'. கல்வி அறிவிற்கு இதை ஒப்பிடுகிறார் (தொட்டனைத்தூறும் மணற்கேணி) திருவள்ளுவர்.
 கிணற்கை "கேணி' எனவும் அழைப்பதுண்டு. கிணறுகளில் பலவகை உள்ளன. ஆழிக் கிணறு (கடல் அருகில் உள்ள கிணறு, கூவம், நடைகேணி (படிக்கட்டுகள் உடைய கிணறு), தொடுகிணறு (ஆற்றில் நீர் வரத் தோண்டுவது) பிள்ளக் கிணறு (ஏரியின் நடுவில் உள்ள கிணறு பூட்டைக் கிணறு) விவசாயத்திற்கு கமலை நீர்பாய்ச்சும் அமைப்புடைய கிணறு எனப்படும்.
 தமிழகத்தில் கிணறுகள் தோண்டப்பட்டதையும், அவற்றிலிருந்து நீர் எடுத்தலைப் பற்றியும் சங்க இலக்கியங்களான அகநானூறும் (அகம் 79-3-4), பெரும்பாணாற்றுப்படையும் (பெரும்- 97-98) கூறுகின்றன.
 இவற்றில் ஒருவகை "உறை கிணறு' என்பதாகும். சுடுமண்ணாலான வளையங்களைக்கொண்டு அமைக்கப்பட்ட கிணறு "உறைகிணறு' எனப்படும். பொதுவாகக் கடற்கரை அருகிலும், மணற்பாங்கான இடத்தில் பக்கங்களிலிருந்து மண் சரிந்துவிடாமல் இருப்பதற்காக உறை கிணறுகள் அமைக்கப்படுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் வானகிரி, நெய்தவாசல், பெருந்தோட்டம் முதலிய பகுதிகளில் உறைகிணறுகள் காணப்படுகின்றன.
 கடற்கரை அருகில் உறை கிணறுகள் இருந்ததாகப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. "உறை கிணற்றுப் புறச்சேரி' என்ற ஒரு பகுதி (பட்-76) அழைக்கப்படுகிறது. நல்ல தண்ணீருள்ள கிணறு பற்றியும் பட்டினப்பாலை (பட்- 51-52) குறிப்பிடுகிறது.
 தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் பல இடங்களில் உறை கிணறுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கொற்கை, அரிக்கமேடு, மாமல்லபுரம், வசவசமுத்திரம் (மாமல்லபுரம் அருகில்), மாளிகைமேடு, செங்கமேடு, மாங்குடி(நெல்லை), காஞ்சிபுரம், படைவீடு, பெரியபட்டினம் முதலிய இடங்களிலும் அண்மையில் கீழடி (சிவகங்கை) பட்டரைப் பெரும்புதூர் (திருவள்ளூர்) போன்ற இடங்களிலும் உறை கிணறுகள் வெளிப்படுத்தப்பட்டன.
 இவை இரண்டு வகையாக இருக்கும். ஒரே உயரம் அளவு உடையதாக வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண்பூச்சு இருக்கும். சில இடங்களில் வளையத்தின் நடுவே சிறு துவாரம் இருக்கும். இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும்.
 மற்றொரு வகையில் உறை கிணற்றின் மேற்பகுதியின் விட்ட அளவு, கீழ்பகுதியைவிடக் குறைவாக இருக்கும். அதனால், ஒரு வளையத்தின் மேல் இன்னொரு வளையம் வைக்கும்பொழுது மேலே வைக்கப்படும் வளையத்தின் கீழ்ப்புற விட்ட அளவு அதிகமாக இருப்பதால் அது கீழே உள்ள வளையத்தில் நன்றாகச் செருகிக் கொள்ளும்.
 சில இடங்களில் - குளம், கண்மாய் போன்ற இடங்களிலும் உறைகிணறுகள் காணப்படும். கோடைகாலத்தில் நீர் வற்றிவிட்டாலும், இக்கிணற்றிலிருந்து தேவையான நீரை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக மனிதன் வாழும் "வாழ்விடங்களில்' இத்தகைய உறை கிணறுகள் காணப்படுகின்றன.
 
 -கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com