இந்த வாரம் கலாரசிகன்

நாளை மாலை நாகூரில் "ஈகைப் பெருநாள் மலர்' வெளியீட்டு விழா. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தினமணியின் சார்பில் "ஈகைப் பெருநாள் மலர்' கொண்டுவரப்படுகிறது.
இந்த வாரம் கலாரசிகன்

நாளை மாலை நாகூரில் "ஈகைப் பெருநாள் மலர்' வெளியீட்டு விழா. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தினமணியின் சார்பில் "ஈகைப் பெருநாள் மலர்' கொண்டுவரப்படுகிறது.
 உலக மக்களால் பின்பற்றப்படும் மதங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இஸ்லாமின் சிறப்புகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கி வெளிவருகிறது இந்த மலர். இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் இஸ்லாம் குறித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை வெளிக்கொணர்கிறோம். தீபாவளி மலர் போல, ஈகைப் பெருநாள் மலரும் கவிதைகள், சிறுகதைகள் முதலியவற்றை உள்ளடக்கிய, அனைவரும் படித்து மகிழும் ஒன்றாக வெளிவருவதுதான் இதன் தனித்துவம்.
 மலர் வெளியீட்டுக்காக நாகூர் நோக்கிப் பயணிக்கிறேன்.
 
 தில்லியில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்புக்காக சென்றிருந்தபோது, எடுத்துச் சென்ற புத்தகம் ரவிக்குமாரின் "ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்'. "நிகழ்காலத்தோடான உரையாடல்' என்கிற விளக்கத்துடன் பல்வேறு இதழ்களில் ரவிக்குமார் எழுதிய 38 கட்டுரைகளின் தொகுப்பு இது.
 விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான தனது தேர்தல் பிரசாரத்தை ரவிக்குமார் தொடங்கியபோது முதல் வாழ்த்தைத் தெரிவித்தவன் நான்தான். அடுத்து "விரைவிலேயே தில்லியில் உங்களை மக்களவை உறுப்பினராகச் சந்திக்கிறேன்' என்று நான் உளப்பூர்வமாகவே வாழ்த்தினேன். அந்த வாழ்த்தும் எனது வாக்கும் பலித்திருப்பதில் மகிழ்ச்சி.
 "ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்' தொகுப்பிலுள்ள 38 கட்டுரைகளும் ரவிக்குமாரின் தனிப்பட்ட பார்வையையும், பரந்துபட்ட புரிதலையும், தெளிவான சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன. இலக்கியம், சினிமா, மொழியியல், அரசியல், சமுதாயம், உலகளாவிய போக்கு என்று அவரது பார்வை "360 டிகிரி' கோணத்தில் சுற்றிச் சுழல்கிறது. கலங்கரை விளக்கத்தின் ஒளிக் குவியலைப் போல அவர் கையாண்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் அசத்தலான அலசல்!
 இந்தக் கட்டுரைத் தொகுப்பில் "சொல்லைத் தத்தெடுங்கள்', "கா.சிவத்தம்பியை நினைவிருக்கிறதா?'. "தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு உதவப்போவது யார்?', "பொருந்தலில் கிடைத்த நெல்', "கூகுளைசேஷன் என்ற அபாயம்' ஆகிய ஐந்து கட்டுரைகளும் அற்புதமான பதிவுகள். அந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது, இவை தினமணியின் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளிவரவில்லையே என்கிற ஆதங்கம் என்னுள் ஏற்பட்டதை நான் மறைக்க விரும்பவில்லை.
 தமிழில் முதன்மை பெற்றுத் திகழ்ந்த சொற்கள் வழக்கொழிந்து போகாமல், அவற்றை நாம் இயன்றவரை பயன்படுத்தி பழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துகிறது "சொல்லைத் தத்தெடுங்கள்' கட்டுரை. தமிழில் மிகப்பெரிய ஆளுமையாக இலங்கையின் எல்லையைத் தாண்டிப் போற்றப்பட்ட கா.சிவத்தம்பியின் அருமை புரியாமல் நாம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது "கா.சிவத்தம்பியை நினைவிருக்கிறதா?'.
 தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நமது வம்சாவழியினர் தங்களது குழந்தைகளுக்குத் தமிழ்ப் பயிற்றுவிக்க விரும்புவதை சுட்டிக்காட்டுகிறது "தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு உதவப் போவது யார்?'. தமிழ் பிராமி எழுத்து குறித்தும், முக்கியமான கல்வெட்டுகள் சிதைந்தும், அழிந்தும் போவது குறித்தும் விசனப்படுகிறது "பொருந்தலில் கிடைத்த நெல்'. குளோபலைசேஷன் என்கிற உலகமயமாதலை பின்னுக்குத்தள்ளும் அச்சுறுத்தலாக, உலகையே கண்காணிக்கும் சக்தியைப் பெற்று நம்மை விழுங்குகிறது கூகுள், என்று எச்சரிக்கை விடுக்கிறது "கூகுளைசேஷன் என்ற அபாயம்'.
 ரஜினி என்கிற நடிகர், ரவிக்குமாரில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அவர் குறித்த ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதிலிருந்து தெரிகிறது. ரஜினிகாந்தின் திரைப்படங்களையும், அவரது அரசியல் நிலைப்பாடுகளையும் மிகக்கடுமையாக விமர்சித்திருக்கும் ரவிக்குமார் இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு "ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்' என்று பெயர் சூட்டியிருப்பதையும், முகப்புப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இடம்பெற்றிருப்பதையும் ரசிக்க முடியவில்லை.
 கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 38 கட்டுரைகளும் அச்சு வாகனம் ஏறிய தேதியைக் குறிப்பிடப்பட்டிருப்பது போல, அந்தக் கட்டுரைகள் வெளியான இதழ்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். "ரஜினிகாந்தும் புதுமைப்பித்தனும்' சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என்று பதிவு செய்வதில் எனக்குத் தயக்கமே இல்லை.
 ரவிக்குமார் என்ற சிந்தனையாளரை இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி!
 
 அந்தக் கவிதைத் தொகுப்பு, புத்தக விமர்சனத்துக்கு வந்ததல்ல. உங்களிடம் தரச்சொல்லி யாரோ ஒருவர் தந்துவிட்டுப் போனதாக உதவி ஆசிரியர் ஒருவர் என்னிடம் தந்தார். "இசைக்கும் நீரோக்கள்' என்ற தலைப்பிலான அந்தக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் அமீர் அப்பாஸ். அவர் எனது இனிய இளவல் இயக்குநர் சீனு. ராமசாமியின் துணை இயக்குநர் என்பதை அவரது தன்விவரக் குறிப்பு தெரிவிக்கிறது. அதனால், உடனே எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டேன்.
 "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பார்கள். கவிதைத் தொகுப்புக்கு எப்போதுமே முதல் அல்லது கடைசிக் கவிதைதான் பதம். மத்தாப்புப் போல பளீரென்று முதல் கவிதையே அமைந்துவிட்டால், அந்தத் தொகுப்பில் உள்ள ஏனைய கவிதைகளின் தரத்தையும் அது தூக்கி நிறுத்திவிடும் என்பது எனது அனுபவம்.
 கிரிக்கெட் விளையாட்டில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்துவதுபோல, "சிக்ஸர்' அடிப்பதுபோல அமைந்திருக்கிறது, கவிஞர் அமீர் அப்பாஸின் தொகுப்பிலுள்ள முதல் கவிதையான "பறிக்கப்பட்ட நிலம்'!
 
 பாலிதீன் பைகளிலிருந்து
 மண் தொட்டிக்கு
 மாற்றப்பட்டபோதும்
 தனக்கான பூமியை
 வேர்களால்
 தேடிக்கொண்டே இருக்கின்றன
 பூச்செடிகள்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com