வாய் மூடிப் பேசவும்!

அகநானூற்றின் செம்பாதிப் பாக்கள் பாலைத்திணைக்கு உரியன. பொருள்வயிற் பிரிவு, உடன்போக்கு முதலான பிரிவை உணர்த்தும் பாக்களோடு, செலவழுங்குவித்தலைப் பாடிய பாக்களையும்
வாய் மூடிப் பேசவும்!

அகநானூற்றின் செம்பாதிப் பாக்கள் பாலைத்திணைக்கு உரியன. பொருள்வயிற் பிரிவு, உடன்போக்கு முதலான பிரிவை உணர்த்தும் பாக்களோடு, செலவழுங்குவித்தலைப் பாடிய பாக்களையும் கொண்டவையே பாலைத்திணைப் பாக்கள்.
 செலவழுங்குவித்தல் என்பது, பொருளுக்காகப் பிரிந்து செல்ல எண்ணிய தலைவன், தலைவி தன் பிரிவைத் தாங்கமாட்டாள் என்பதை உணர்ந்து, பிரிந்து செல்லுதலைச் சிறிதுகாலம் தவிர்த்தல் ஆகும்.
 பாலை பாடிய பெருங்கடுங்கோ எனும் புலவர், அவ்வாறு ஒரு தலைவன், தம் தலைவிக்காகச் செலவழுங்கிய சூழலைத் தம் பாடலில் (5) காட்சிப்படுத்தியுள்ளார். அப்பாடலின் சிறப்பு என்னவெனில், பாட்டுடைத் தலைவனோ தலைவியோ, ஒருவருக்கொருவர் தம் வாய் திறந்து பேசிக்கொள்ளவேயில்லை. ஆனால், ஒருவருக்கொருவர் உள்ளக்குறிப்புகளைச் சரியாகப் புரிந்துகொண்ட நிலையில் செலவழுங்குதலும் நிகழ்ந்தது. இந்த இல்லற மாண்பைப் புலவர் தம் சொற்களில் வடித்துக் காட்டியுள்ள விதம் நவில்தொறும் நயம் பயப்பது.
 அத் தலைமக்களின் பேசா மொழிகளான, உள்ள உரையாடல்களைத் தலைவன் கூற்றாகவே புலவர் தந்துள்ளார்.
 பொருள்தேடச் செல்லுவதற்குத் துணிந்த செய்தியைத் தலைவியிடம் அதுவரை வெளிப்படுத்த இயலாத நிலையில் இருந்த தலைவன், அன்பு மீதூர அவளை அழைக்க, தலைவனின் மாறுபட்ட அவ்வன்பைப் பொறாது, அழைப்பதுவும் கேளாது, தனிமை உணர்வுடன் தன் சிவந்த பாதத்தின் சுவடு பூமியில் பதிய, மெல்ல அருகில் வந்து, தன் கூர்மையான பற்கள் தெரியும்படிப் பொய்யான புன்முறுவல் செய்து நின்றாள். தலைவியின் இச்செய்கையைக் கண்டு வியப்புற்ற தலைவன், தான் எண்ணியதை அவளுக்கு உணர்த்தும் முன்பே தன் எண்ணத்தை உணர்ந்துகொண்டு, பொருள் தேடப் பிரிதலை மறுக்கும் அவளது உள்ள உணர்வைக் குறிப்பாய் வெளிப்படுத்தி நின்றாள் எனக் கூறுகிறான். இதனை,
 "அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
 விளிநிலை கேளாள் தமியள் மென்மெல
 நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
 குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
 வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
 கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்
 வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்' (1-7)
 எனப் புலவர், தம் பாத்திறனால் படம்பிடித்துக் காட்டுகிறார், மேலும் தலைவி, ""காய்ந்த, முதிர்ந்த ஓமை மரங்கள் நிறைந்த காட்டில், நெல்லி மரத்தின் பளிங்கு போன்ற காய்கள், உயரமான பெரிய பாறையில், சிறுவர் விளையாடச் சேர்த்துவைத்த வட்டுக் காய்களைப் போலக் கிடக்கும். கதிரவன் சுட்டெரிக்கும் அம்மலைப் பகுதிகளில், பட்டை தீட்டப்பட்டவை போல கூர்மையான பரல் கற்கள் கிடந்து, அங்கு நடப்பவரின் கால்விரல் நுனியைச் சிதைக்கும்.
 "இத்தகைய கொடிய காட்டு வழியைக் கடந்து செல்லுதல் அறநெறியன்று' என முன்பு கூறிய சொற்கள், வெறும் சொற்களாயின என்று கூறுபவள் போலத் தன் முகத்தை வைத்துக்கொண்டாள்; உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓவியம்போலத் தம் உள்ளக் குறிப்பினை முகத்தினில் காட்டி நின்றாள்'' என உரைக்கிறான்.
 ஆக, பாலைநில வழியின் கொடுமையையோ, அவ்வழிச் செல்லுதல் அறநெறியன்று எனக் கூறிய சொற்கள் பொருளற்றுப் போயின என்ற கருத்தையோ தலைவி, தன் வாய்ச்சொற்களால் கூறவில்லை. அவள் மெய்ப்பாடுகளின்வழி தலைவன் புரிந்து கொண்டான்.
 தலைவனின் எண்ணங்களை உணரும் ஆற்றல் தலைவிக்கு இருந்தவாறே, தலைவியின் எண்ணங்களை அறியும் ஆற்றல் தலைவனுக்கும் இருந்தமையைப் புலவர் "பரன்முரம் பாகிய பயமில் கானம்' (அக.பாலை.15-20) என்கிற பாடல் வரிகளில் புலப்படுத்துகிறார். அவ்வாறு நின்ற தலைவி, துயரத்தால் எழுந்த கண்ணீரை அடக்கியமையால், கண்ணீர்த்துளி கீழே விழாது அவள் கண்பாவையை மறைக்க, தன்னுடன் அணைத்துக்கொண்டிருந்த தன் புதல்வன் அணிந்திருந்த செங்கழுநீர் மாலையை முகர்ந்து பெருமூச்சு விட்டாள். அப்பெருமூச்சின் வெப்பம் தாங்காது, பவளம் போன்ற அம்மாலையின் பூக்கள் நிறமிழந்து வாடினவாம்.
 அதைக் கண்ட தலைவன், "தான் பக்கத்தில் இருக்கும்போதே பிரியும் எண்ணத்தைத் தாங்காதவள், உண்மையாகப் பிரிந்தால் உயிர்பிழைக்க மாட்டாள். நான் எப்படி இவளைப் பிரிவேன்' என எண்ணி, அவளைப் பிரியும் எண்ணத்தைத் தவிர்த்தான். இதனை,
 "பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
 டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்
 தூநீர் பயந்த துணையமை பிணையல்
 மோயினள் உயிர்த்த காலை மாமலர்
 மணியுரு இழந்த அணியழி தோற்றம்
 கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
 உழையம் ஆகவும் இனைவோள்
 பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே'
 எனக்கூறி, பெருங்கடுங்கோ காட்சியை நிறைவு செய்கிறார். பேசி வெளிப்படுத்தும் சொற்களைவிட, பேசா மெளனத்திற்கே பொருளும் ஆற்றலும் மிகுதி. ஆனால், அந்த மெளனத்தின் பொருளை உணரும் ஆற்றல், அதாவது குறிப்பறியும் திறன் இணையர் இருவருக்கும் இருத்தல் தேவையானது. இவ்வாறு குறிப்பறியும் திறனுடன், பேசா ஆற்றலையும் வளர்த்துக் கொள்வது இல்லறத்தார்க்கு மட்டுமின்றி, அரசியலாளர்க்கும் மிகவும் தேவையானது.
 அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை, காமத்துப்பாலில் ஒரு குறிப்பறிதலையும், அங்கவியலில் ஒரு குறிப்பறிதலையும் அமைத்தார். குறிப்பறியும் ஆற்றலும், பேசாத்திறனும் உடைய இல்லறத்தாரும், அரசியலாளரும் வெற்றிநடைபோடுவதைக் கண்ணால் கண்ட பின்பும் பின்பற்றவில்லையெனில் மடமையே!
 உள்ளத்தின் பேசாமொழி, அன்புமொழி; அறிவுமொழி; உலகமொழி!
 -முனைவர் வாணி அறிவாளன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com