இந்த வார கலாரசிகன்

அதிகாலையில் ராணிமைந்தனின் செல்லிடப்பேசி அழைப்பு வந்தபோது,  முதலில் திகைத்தேன்.

அதிகாலையில் ராணிமைந்தனின் செல்லிடப்பேசி அழைப்பு வந்தபோது,  முதலில் திகைத்தேன்.  ""ஏனைய நாளிதழ்களிலிருந்து தினமணி மாறுபட்டது என்பதை நிரூபித்திருக்கிறது தமிழக அரசின் "கலைமாமணி விருது' அறிவிப்பு குறித்த செய்தி. ஏனைய பத்திரிகைகள் எல்லாம் விருது பெற்ற சினிமா நடிகர்களின் பெயரைப் பதிவுசெய்து இன்னும் பலர் என்று  வெளியிட்டிருக்கும்போது, "நமது தினமணி' மட்டும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்,  கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்று விருது பெற்ற அனைவரது பெயரையும் பட்டியலிட்டு, மரியாதை செய்திருக்கிறது'' என்பதுதான் ராணிமைந்தனின் மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் காரணம். 


கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகள் மொத்தமாக இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தமிழ் வளர்ச்சித் துறையும், அமைச்சர் க. பாண்டியராஜனும் பாராட்டுக்குரியவர்கள். இனிவரும் ஆண்டுகளில் கலைமாமணி விருது தடைபடாமல் வழங்கப்பட வழிகோலியிருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் கலைமாமணி விருதுப் பட்டியலைப் பார்த்தபோது, இன்னொரு பெரு மகிழ்ச்சியும் காத்திருந்தது.

"தினமணி'யுடனும், தனிப்பட்ட முறையில் என்னுடனும்  நெருக்கமும் தொடர்பும் உடைய  கவிஞர் யுகபாரதி, திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர் சலன், கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம், ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், லேனா தமிழ்வாணன், "இலக்கியவீதி' இனியவன், பால ரமணி, எழுத்தாளர் அய்க்கண், பத்திரிகையாளர் நெல்லை சுந்தர்ராஜன், நாடக நடிகர் வரதராஜன் என்று கலைமாமணி விருது பெற்றிருக்கும் அனைவருக்கும்     தினமணியின் சார்பில்  வாழ்த்துகள்!
    

விருது என்று சொல்லும்போது வாசகர்களிடம் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  "தினமணி'யின் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது போல, இந்த ஆண்டு முதல் "தினமணி'யின் இணைப்பான "மகளிர் மணி'யின் சார்பில் உலக மகளிர் தினத்தன்று விருது வழங்குவது என்று தீர்மானித்திருக்கிறோம். 
தமிழ்த் திரையுலகில் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் தங்களது நடிப்பாற்றலால் மக்கள் மனதில் அழியாத இடம்பெற்ற சாதனைப் பெண்டிர் ஒன்பது பேரைத் தேர்ந்தெடுத்து,  அவர்களுக்கு "சாதனை நட்சத்திரங்கள்' என்கிற விருதை வழங்குவது என்று முடிவெடுத்திருக்கிறோம். வரும் மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினத்தன்று, சென்னை கலைவாணர் அரங்கில், மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் வைஜயந்தி மாலா, செளகார் ஜானகி, ஜமுனா, சாரதா,  காஞ்சனா, ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, கே.ஆர்.விஜயா, சச்சு ஆகிய ஒன்பது பேர் விருதுபெற இருக்கிறார்கள்.

வாசகர்கள் இதையே  அழைப்பாக எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெற  வரலாம்.

கணினி மயமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நமது உள்ளங்கையில் உலகத்தையே கொண்டு வந்திருக்கிறது. சுட்டு விரலால் தட்டினால் கேட்ட விவரத்தையெல்லாம்  கூகுள் மடைதிறந்தாற்போலக் கொட்டுகிறது. ஆனால், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு உலகத்தைக் காட்டிய பெருமை வெ.சாமிநாத சர்மாவுக்கு மட்டுமே உண்டு.

தமிழுக்கு அளப்பரிய  சேவை செய்தவர்கள் இரண்டு சாமிநாதர்கள். முதலாமவர் சங்கத் தமிழ் இலக்கியங்கள் அழிந்துவிடாமல் காப்பாற்றித்தந்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர். இரண்டாமவர் உலக இலக்கியங்களையும், உலகத் தலைவர்களையும், உலக நாடுகளையும், சர்வதேசத் தகவல்களையும் தமிழுக்கும் தமிழனுக்கும்  கொண்டுவந்து சேர்த்த வெ. சாமிநாத சர்மா.

2016 தினமணி தீபாவளி மலரில்  வெளிவந்த  "கண்மணி அன்போடு' என்கிற தலைப்பில்,  வெ.சாமிநாத சர்மா எழுதிய கடிதமும்  இடம்பெற்றிருந்தது.  இப்போது மறு பிரசுரமாக  வெளிவந்திருக்கும் அந்தக் கடிதம் இடம்பெற்ற  வெ.சாமிநாத சர்மாவின் "அவள் பிரிவு' என்கிற புத்தகத்தைப் பார்த்தவுடன், உடனே எடுத்து மீண்டும் படித்துவிட வேண்டும் என்கிற ஆவல் மேலிட்டது. திருப்பூரில் நேற்று நடைபெற்ற ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சியில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டபோது,  என்னுடன் துணையாக வந்தது அந்தப் புத்தகம்.

வெ.சாமிநாத சர்மாவின் பதிப்பாளரும், மிக நெருக்கமான நண்பருமான அரு.சொக்கலிங்கத்துக்கு சாமிநாத சர்மா எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் "அவள் பிரிவு'! வாரிசு இல்லாத சாமிநாத சர்மா தம்பதியரின் அன்பும் நெருக்கமும் எத்தகையது என்பதை உணர்ச்சி கொப்பளிக்க தனது இதயக் குமுறல்களை எல்லாம் அந்தக் கடிதங்களில் கொட்டியிருக்கிறார் சாமிநாத சர்மா. இது ஏதோ அவலச்சுவை நிரம்பிய ஆவணப்பதிவு என்று கருதிவிடக்கூடாது.  ஆகச்சிறந்த தம்பதியரின் இணக்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எப்படி இருந்தது என்பதை எடுத்தியம்பும் ஆவணமாகப் பார்க்க வேண்டும். 

இப்போது எள் போட இடமில்லாமல் வீடுகளும், வணிக வளாகங்களுமாகக் காட்சியளிக்கும் சென்னை தியாகராய நகரில் சர்மா தம்பதியர் வசித்தபோது, சுற்றுமுற்றும் வேல மரங்கள், எங்கும் ஒரே சகதி. மாலை நேரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கிவிடும் என்கிற பதிவு காணப்படுகிறது.

""40 வருஷங்களுக்கு முந்தி வகுப்பு வேற்றுமை என்பது, பள்ளிக்கூடங்களில் தலைகாட்டவில்லை. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பிள்ளைகள் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆசிரியர்களாகட்டும், மாணாக்கர்களாகட்டும்  குலம், கோத்திரம் முதலியவைகளைப் பற்றி விசாரிக்க மாட்டார்கள்'' என்கிறது இன்னொரு பதிவு. இப்படி அன்றைய சமுதாயம் குறித்த  பல செய்திகளையும், நிலைமைகளையும்  உள்ளடக்கியிருக்கும் பதிவுகளைக் கொண்ட "அவள் பிரிவு' அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். மனைவியை தெய்வமாக மதித்துப் போற்றிய வெ.சாமிநாத சர்மா என்கிற  ஒரு மாமனிதரின் மனம் திறந்த பதிவு இது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப் போனாலும்கூட, இன்னும் நமக்கு ஆங்கில மோகம் போகவில்லை என்பதைப் பறைசாற்றும் விதமாக 
இன்னும்கூடப் பள்ளிக்கூடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், ஏன் குழந்தைகளுக்கும்கூட ஆங்கிலப் பெயர்

களைச் சூட்டுவதில் காணப்படும் அதீத மோகம் முகம் சுளிக்கத்தான் வைக்கிறது. 

ஞா.சிவகாமி எழுதிய "அழகிய பூக்கள்' என்கிற கவிதைத் தொகுப்பில் வெளிவந்திருக்கும்  "துணிக்கடை' என்கிற கவிதை என்னைப் போலவே அவரையும் ஆங்கில மோகம் எரிச்சலூட்டி இருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.

யார் சொன்னது
வெள்ளையன்
நாட்டை விட்டே
வெளியேறி விட்டானென்று?
இந்தியா எங்கிலும்
"பீட்டர் இங்கிலாந்து!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com