இந்த வாரம் கலாரசிகன்

"தினமணி'யுடன் தொடர்புடைய "கலைமாமணி' விருது பெற்ற, மூன்று முக்கியமானவர்களின் பெயர்கள் விடுபட்டுப் போனதில் அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்குமேகூட வருத்தம்தான்.
இந்த வாரம் கலாரசிகன்

"தினமணி'யுடன் தொடர்புடைய "கலைமாமணி' விருது பெற்ற, மூன்று முக்கியமானவர்களின் பெயர்கள் விடுபட்டுப் போனதில் அவர்களுக்கு மட்டுமல்ல, எனக்குமேகூட வருத்தம்தான். "தினமணி'யின் நடுப்பக்கக் கட்டுரையாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன், "சிறுவர் மணி'யில் தொடர்ந்து எழுதும் இராஜபாளையம் கொ.ம.கோதண்டம், தமிழ்மணி கட்டுரையாளர் இரா.வ.கமலக்கண்ணன் ஆகியோருக்கும் நமது பாராட்டும் வாழ்த்துகளும்!
 
 
 காதில் சிறு உபாதை. கோவை "அஸ்வின்' மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்குச் சென்றேன். காதின் பிரச்னையைத் தீர்த்து வைத்தது மட்டுமல்லாமல், செவிக்கு உணவும் தந்து, சிந்தையையும் குளிரவைத்தார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் நாகராஜன்.
 முன்பு ஒரு முறை பதிவு செய்திருந்ததுபோல, மருத்துவர்களில் பலர் தேர்ந்த தமிழார்வம் மிக்கவர்களாகவும் ஏன், கவிஞர்களாகவேகூட இருப்பது தமிழுக்குக் கிடைத்த வரம். சொடுக்குப் போடும் நேரத்தில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர் மருத்துவர் நாகராஜன் என்று அறிந்தபோது, எனக்கு வியப்பும் திகைப்பும் ஏற்படவில்லை; சிலிர்ப்புதான் மேலிட்டது.
 ஈற்றடி சொல்வதற்குள் வெண்பா எழுதிவிடுகிறார். அடடா என்றால், ஆசிரியப்பா வருகிறது. மருத்துவருக்குள் ஒளிந்திருக்கும் "பா' புனையும் பேராற்றல் பிரமிக்க வைக்கிறது. "காது மூக்கு' என்று தொடக்கம் சொன்ன நொடிப்பொழுதில் அவர் யாத்த வெண்பா இது.
 "காது மூக்கு கழலிவை யாக்கையில்
 யாதினும் தனி இயலே - வாது
 இவைதனில் வந்தால் இடரே, தீர்வுக்கு
 அவையினில் உண்டே யாம்'
 தமிழில்தான் இப்படி என்று நினைத்துவிட வேண்டாம். நமது வெண்பா இலக்கண அடிப்படையில் அவரால் ஆங்கிலத்திலும் வெண்பா புனைய முடிகிறது. ஆங்கில இலக்கியத்தில் இது ஒரு புது முயற்சி. மேலைநாட்டு பாணியில் தமிழ் இலக்கியத்தைப் பார்க்க முற்படுபவர் மத்தியில், தமிழ் இலக்கிய உத்திகளை ஆங்கிலத்தில் புகுத்த முற்பட்டிருக்கும் மருத்துவர் நாகராஜன் இலக்கியத்தில் புதுப்பாதை வகுக்கிறார்.
 
 
 வெள்ளிக்கிழமை இரவு "தினமணி'யின் மகளிர் தின நட்சத்திர சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா முடிந்த கையோடு அரக்கப்பறக்க ஓடிப்போய் கோவைக்குச் செல்லும் சேரன் விரைவு ரயிலைப் பிடித்து அமர்ந்தபோது, வழித்துணைக்கு எடுத்துச் சென்றிருந்த புத்தகம் "பட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்'. தமிழ்ச் சிறுகதைகளிலிருந்து மலையாளச் சிறுகதைகள் எப்படி மாறுபட்டு இருக்கின்றன என்பதை அதில் இடம்பெற்றிருக்கும் 43 சிறுகதைகளும் எடுத்தியம்புகின்றன.
 2002-இல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும், சாகித்ய அகாதெமியும் இணைந்து தமிழ் - மலையாளம், மலையாளம் - தமிழ் சிறுகதைகளின் மொழியாக்கப் பட்டறை ஒன்றை நடத்தின. அந்தப் பட்டறையில் தமிழிலிருந்து 50 சிறுகதைகளையும், மலையாளத்திலிருந்து 50 சிறுகதைகளையும் தேர்வு செய்து மொழியாக்கம் செய்யப்பட்டது. இரண்டு மொழிகளை அறிந்த மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் கூடி, 100 சிறுகதைகளையும் மொழியாக்கம் செய்தனர்.
 தமிழிலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்ப்பதற்கான 50 சிறுகதைகளை "முன்றில்' மா. அரங்கநாதன் தெரிவு செய்தார். அதேபோல, மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்வதற்கான 50 சிறுகதைகளை விநாயகம் பெருமாள் தெரிவு செய்தார். இதில் விநாயகம் பெருமாளின் பணியை எளிதாக்கியது, 1991-இல் மலையாளச் சிறுகதையின் நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட்டிருந்த "நூறு ஆண்டுகள் நூறு கதைகள்' எனும் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு. அந்தத் தொகுப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டவைதான் "பட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்' என்கிற புத்தகம்.
 சிற்பி பாலசுப்பிரமணியம், வை.கிருஷ்ணமூர்த்தி, விநாயகம் பெருமாள், எம்.பாலசுப்பிரமணியம், மா.நயினார், பா. ஆனந்த குமார், மு.சதாசிவம், குறிஞ்சி வேலன், நிர்மால்யா ஆகிய ஒன்பது மொழிபெயர்ப்பாளர்கள், நீல. பத்மநாபன், மா. அரங்கநாதன், விநாயகம் பெருமாள் ஆகிய மூவரின் வழிகாட்டுதலில் ஐந்து நாள்களில் அந்தப் பட்டறையில் மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகள்தான் இவை.
 பொன்குன்னம் வர்க்கி, (ஒலிக்கும் கலப்பை), வைக்கம் முகம்மது பஷீர் (உலகப் புகழ்பெற்ற மூக்கு), லலிதாம்பிகா அந்தர்ஜநம் (மானிட புத்ரி), மலையாற்றூர் ராமகிருஷ்ணன் (பீட்டரின் லஞ்சம்), எம்.டி.வாசுதேவன் நாயர் (சிறிய சிறிய பூகம்பங்கள்), காக்கநாடன் (நீல கிரகணம்), ஓ.வி.விஜயன் (கடற்கரையில்), எம்.முகுந்தன் (மொட்டை அடிக்கப்பட்ட வாழ்க்கை), சக்கரியா (குழி யானைகளின் பூந்தோட்டம்) முதலிய மலையாளத்தின் ஆகச்சிறந்த 43 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
 மொழியாக்கம் செய்யப்பட்ட 50 சிறுகதைகளில் 7 சிறுகதைகள் விடுபட்டுப்போயிருப்பது குறித்து விளக்கம் தரப்படவில்லை. ஒருவேளை, ஒரே எழுத்தாளரின் சிறுகதைகள் இன்னொரு ஆண்டும் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கபட்டிருந்ததோ என்னவோ...
 மலையாளச் சிறுகதையின் நூற்றாண்டு மாற்றத்தையும், 43 தலைசிறந்த மலையாளச் சிறுகதை எழுத்தாளர்களின் எழுத்தையும், தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.
 
 கவிஞர் ஜெயபாஸ்கரனின் புதிய வரவு "வர வேண்டாம் என் மகனே!' கவிதைத் தொகுப்பு. இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. இதில் இடம்பெற்றிருக்கும் ஒரு சில கவிதைகளைத் தவிர, மற்றவை எல்லாம் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை.
 கட்சிக் கொடியுடன் வந்தால் அந்த வாகனங்களை நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளேகூட பயந்துபோய் வழிவிடும் விசித்திரம். இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் மட்டுமே அரங்கேறும் அவலம். அதைப் படம் பிடிக்கிறது இதில் இடம்பெற்றிருக்கும் "கொடியதிகாரம்' என்கிற கவிதை. அதிலிருந்து சில வரிகள்.
 
 நிறுத்த விளக்குகளை
 மீறுகிறது
 போகிற பாதையில்
 வருகிறது
 வருகிற பாதையில்
 போகிறது
 போலீஸ்காரர்களை
 முறைக்கிறது
 புத்தம் புதிதாய்
 ஜொலிக்கிறது
 கொடி யொன்று
 கட்டிய கார்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com