இந்த வாரம் கலாரசிகன்

வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது.

வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. தமிழிலக்கிய அன்பர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் "இந்த வாரம்' பகுதி, புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும் என்கிற வாசகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற இருக்கிறது.
தமிழ் இதழியல் வரலாற்றில் இதுபோல, தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எந்தவொரு பத்தியும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். முதலில், வெளிவந்திருக்கிறதா என்பதே கூடத் தெரியவில்லை. ஏறத்தாழ 600 வாரங்கள் வெளிவந்திருக்கும் "இந்த வாரம்' பகுதியில் ஏறத்தாழ 1,000 புத்தகங்கள் குறித்த மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. 500-க்கும் அதிகமான இளம் கவிஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர். பலருடைய படைப்புகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
"இந்த வாரம்' ஏன் இன்னும் தொகுக்கப்படவில்லை என்பது பலரும் எழுப்பும் கேள்வி. 500-க்கும் அதிகமான வாரங்கள் இதுவரை வெளிவந்த பதிவுகளைத் தொகுக்க முற்பட்டபோதுதான் தெரிந்தது, எத்தனை பெரிய பணியைச் செய்திருக்கிறோம் என்பது.
ஐந்து தொகுதிகளாக "இந்த வாரம்' தொகுக்கப்படுகிறது. அதற்கான முன் வெளியீட்டுத் திட்ட அறிவிப்பு விரைவிலேயே வெளிவரவும் இருக்கிறது. அதை முன்கூட்டியே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கு முன்பே பெரியவர் "தமிழ்ச் செம்மல்' ப. முத்துக்குமாரசுவாமி குறித்து நான் பதிவு செய்திருக்கிறேன். என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் அவர் புதியதொரு படைப்புடன் வருவதைப் பார்த்து மலைப்பில் ஆழ்ந்திருக்கிறேன்.
கடந்த வாரம் என்னைச் சந்திக்க வந்தபோது அவர் கொண்டு வந்திருந்த புத்தகம் "பெருந்தமிழ்'. அது ஒரு தொகுப்பு நூல். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராக,  தனது எண்பதைக்  கடந்த அகவையிலும் ப. முத்துக்குமாரசுவாமி செய்ய முற்பட்டிருக்கிறார் என்பது வியந்து பாராட்டுதற்குரிய செயல்.
இலக்கியங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனவே தவிர, அந்தப் படைப்புக்குக் காரணமான புலவர் பெருமக்கள் குறித்த ஆய்வுகள் பெருமளவில் இல்லை. ஆதாரப்பூர்வமான வரலாற்றைக் கண்டறிய முடியவில்லை.
தமிழின் தனிப்பெரும் சிறப்பை விளக்கும் பெருங்காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் குறித்த வரலாற்றையும், அவர்கள் தொடர்பான செய்திகளையும் எப்படித் தெரிந்து கொள்வது? அவர்களுடைய படைப்புகளிலிருந்து பெரிய அளவில் குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. பலரது காலத்தை நிர்ணயிக்கப் போதுமான வரலாற்று ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்கள் பலர் இந்த முயற்சியில் ஈடுபடாமலில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது முதலும், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவானது முதலும் இதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. தொல்காப்பியம் தொடங்கி, தமிழ் இலக்கியங்களின் கால ஆராய்ச்சி மிகவும் சிரத்தையுடன் அந்த ஆரம்ப காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.  சுதந்திரம் அடைந்த பிறகு ஆராய்ச்சிகள் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யப்படுவதில்லை என்பதை அதில் ஈடுபடுவோரின் மனசாட்சி எடுத்தியம்பும்.
பெரியவர் ப. முத்துக்குமாரசுவாமி, தனது பங்குக்கு ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆய்விலும் நுணுக்கமான ஆராய்ச்சியிலும் தானே ஈடுபடுவதைவிட, ஆய்வு செய்த பெருமக்கள் சிலரின் பதிவுகளைத் தேடிப்பிடித்துத் தொகுப்பது என்பதுதான் அவரது அந்த முயற்சி. இந்தப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய தலைமுறை ஆய்வாளர்கள் தங்களது பணியைத் தொடங்கட்டும் என்பதேகூட அவரது நோக்கமாக இருக்கக்கூடும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த தமிழ் அறிஞர்கள், பண்டைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் பல்கலைக்கழகங்களிலும், நூலகங்களிலும் தேடி அலைந்து, தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பதுதான்  "பெருந்தமிழ்' மூலம் அவர் செய்திருக்கும் அரும்பணி.
இந்தத் தொகுப்பில் அவர் இணைத்திருப்பது கம்பர் (கு. இராசவேலு), வில்லிப்புத்தூரார் (டாக்டர். மு. கோவிந்தசாமி), ஒட்டக்கூத்தர் (டாக்டர். சி. பாலசுப்பிரமணியன்), செயங்கொண்டார் (க.ப. அறவாணன்), பவணந்தியார் (மா. நன்னன்), வீரமாமுனிவர் (வி.மீ. ஞானப்பிரகாசம்), உமறுப்புலவர் (சி. நயினார் முகம்மது) என்று ஏழு கட்டுரைகள். கட்டுரைகள் என்றா சொன்னேன்? தவறு, இலக்கிய ஆவணங்கள்; ஆழமான ஆய்வுகள்.

"பெருந்தமிழ்' தொகுப்பிலுள்ள கட்டுரைகளைப் படித்த பிறகாவது, இன்றைய பேராசிரியர்களும், இளம் ஆய்வாளர்களும் பொறுப்புணர்வுடன் நுனிப்புல் மேயாத, தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.

"பெருந்தமிழ்' தொகுப்பை வெளிக்கொணர்ந்ததற்கும், அதன் பிரதியை எனக்குத் தந்துதவியதற்கும் ப. முத்துக்குமாரசுவாமிக்கு நன்றி!
நான்கே வரிகளில் நச்சென்று கவிதை தருவதற்குப் பதிலாக, நகர்மயச் சூழலின் மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக சற்றே நீளமான கவிதை இது. கவிதையின் தலைப்பு - "பாலம்'. இந்தக் கவிதை இடம்பெற்றிருக்கும் கவிதைத் தொகுப்பின் பெயர்  - "நதிநீர்த் தேக்கத்தின் முகங்கள்'. கவிஞர் -  "கள்ளழகர்'. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைதான்  என்றாலும், இன்றைக்குப் படித்தாலும், ஐம்பதைக் கடந்தவர்களின் இதயத்தில் எங்கோ ஓர் ஓரத்தில் சற்று வலிக்கும். நான் சந்திக்க விரும்பும் கவிஞர்களில் கவிஞர் கள்ளழகரும் ஒருவர். 
அம்மா இறந்து 
ஓராண்டு கழித்து
திவசத்திற்காக
ஊருக்குப் போனபோது
உணர்ந்தேன் -
எனக்கும்
என் உறவுகளுக்கும்
எனக்கும்
என் ஊருக்கும்
இடையே
நீந்திக் கடக்க முடியாத
பெருவெள்ளம் 
ஓடிக்கொண்டிருப்பதையும்
இக்கரைக்கும் 
அக்கரைக்குமாக
நீண்டிருந்த பாலம்
இல்லாமலிருப்பதையும்
என்னில் ஒட்டியிருந்த
ஊர்மண் உதிர்ந்திருப்பதையும்
இரத்தத்தில் ஊறியிருந்த
ஊர் உறைந்திருப்பதையும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com