நமனார் செய்த நற்றவம்!

செந்தமிழ்க் குமரகுருபரர் முன்னோர் மொழி பொருளை உள்வாங்கி ""பாத் தொடுத்தடுத்த பரஞ்சுடரை நாத்தழும்பு ஏத்திப்பயின்ற'' நற்றமிழ் நயத்தைப் பிரபந்த நூலில் காணலாம்.
நமனார் செய்த நற்றவம்!

செந்தமிழ்க் குமரகுருபரர் முன்னோர் மொழி பொருளை உள்வாங்கி ""பாத் தொடுத்தடுத்த பரஞ்சுடரை நாத்தழும்பு ஏத்திப்பயின்ற'' நற்றமிழ் நயத்தைப் பிரபந்த நூலில் காணலாம். அப்பரடிகளின் ஒரு திருவிருத்தப் பாடலை நன்கு சுவைத்து திருவாரூர் நான்மணி மாலையில் வழிமொழிவது தமிழின்பம் தருவதாகும். அப்பர் பாடல் இது:
 "மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து
 மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும்
 பாலன் மிசைச் சென்று பாசம் விசிறிமறிந்த சிந்தைக்
 காலன் அறிந்தான் அறிதற்கரியான் கழல் அடியே'
 இப்பாடலில், திருமாலும் பிரமனும் முறையே அடிமுடி தேடி, பெருமானின் அடிமுடி அறியாத வரலாற்றை முன்மொழிந்த அப்பரடிகள், சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மார்க்கண்டேயனை கூற்றுவன் பாசக் கயிறு வீசி செய்திறம் செய்த செயலால் தண்டனையாக திருவடியைத் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றான் என்ற செய்தி நயம்மிக்கதாகும்.
 வழிமொழிதல்: இப்பாடலின் கருத்தை திருவாரூர் "நான்மணி மாலையில்' ஸ்ரீகுமரகுருபரர் வழிமொழியும் வரிகள் சுவைமிக்கதாகும்.
 "... .... .... சீர்கெழு கமலைத் திருநகர் புரக்கும்
 கார்திரண் டன்ன கறைமிடற் றண்ணல்
 மூவரென் றெண்ணநின் முதற்றொழில் பூண்டும்
 ஏவலிற் செய்துமென் றெண்ணா ராகி
 அடங்கா அகந்தைக் கறிவெலாம் வழங்கி
 உடம்பு வேறா யுயிர்ப்பொறை சுமந்து
 நாளு நாளு நேடினர் திரிந்தும்
 காணா தொழிந்ததை நிற்க நாணாது
 யாவரும் இறைஞ்ச இறுமாப் பெய்துபு
 தேவரென் றிருக்குஞ் சிலர்பிறர் தவத்தினும்
 மிகப்பெருந் தொண்டரொடிகலிமற் றுன்னொடும்
 பகைத்திறம் பூண்ட பதகனே யெனினும்
 நின்றிருப் பாதம் நேர்வரக் கண்டு
 பொன்றின னேனும் புகழ்பெற் றிருத்தலின்
 இமையா முக்கண் எந்தாய்க்கு
 நமனார் செய்த நற்றவம் பெரிதே!' (பா-34)
 ""யமன் தண்டனையாகவேனும், நின்திருவடியில் தொடர்புடையனாதலின், அவன் செய்த தவம் பெரிது என்று அப்பர் தமிழை விரிவு செய்வார். நமனைப் "பதகன்' என்றும், "பொன்றினன்' என்றும் கூறுங்கால் ஒருமையில் கூறியவர்; அவனது நற்றவத்தை வியக்குமிடத்து அவ்வியப்புணர்ச்சியால் "நமனார்' என்று பன்மையில் கூறினார்'' என்கிற உ.வே.சாமிநாதையர் நயவுரை மேலும் மகிழ்வைத் தருவதாகும்.
 திருவடிச் சிறப்பு
 ஸ்ரீகுமரகுருபரர் கலிவெண்பாவில், "யான் எனது என்று அற்ற இடமே திருவடி' என்று திருவடியை அடையாளம் சுட்டுவார். அடையாளம் சுட்டாமல் பொதுவாக திருவள்ளுவர், ""யானென தென்னுஞ்செருக் கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்'' (346)என்ற குறளில் யான், எனது என்பது அகங்கார, மமகாரங்கள் என்ற அகப்பற்று, புறப்பற்று ஆகும். இரண்டும் அற்ற இடமே வீட்டுலகம் கிடைக்கும் இடம் என்பார் திருவள்ளுவர். இதனையே திருஞானசம்பந்தர், ""முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப்
 பற்றா பாவமே'' எனத் தெளிவாக திருவடியை அடையாளப் படுத்துவார்.
 ""நீர் நமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர்நிறை இல்லை'' என்று நம்மாழ்வாரும் இறையை அடையாளப்படுத்தி மகிழ்வார்.
 திருமாலும் பிரமனும் செருக்கால் முயன்று முடியாதது போல திருவடியை யமன் செருக்கின்றி கடமை உணர்வோடு பணியைச் செய்ததால் இறைவனின் மறக்கருணையால் திருவடி தரிசனம் காணப்பெற்றான்- என்ற அப்பரடிகள் கருத்தை,
 "அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
 மறத்திற்கும் அஃதே துணை'
 என்ற குறள் வெளிப்படுத்தும். கடமை உணர்விலும் இருமை வகை தெரிந்து தண்டம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தும் ""நமனார் செய்த நற்றவம்'' என்ற அடிகளார் திருவாக்கு செம்மொழிச் செல்வம் ஆகும்.
 -புலவர் தா.குருசாமிதேசிகர்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com