அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா?

திருவரங்கப் பெருமாளைப் பற்றியும், திருவானைக்கா அண்ணலைப் பற்றியும் நிந்தா ஸ்துதியாகவும் நேர் துதியாகவும் காளமேகப் புலவர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 
அரனுக்கும் அரிக்கும் ஒரே பாடலா?

திருவரங்கப் பெருமாளைப் பற்றியும், திருவானைக்கா அண்ணலைப் பற்றியும் நிந்தா ஸ்துதியாகவும் நேர் துதியாகவும் காளமேகப் புலவர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 

ஒரு சமயம் திருவானைக்கா அண்ணலான ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குக் கோபராஜன் குமாரனான ஆளுவ திருமலைராயன் என்ற மன்னன் சுவாமியை தரிசிக்கச் சென்றபோது, காளமேகப் புலவரும் உடன் சென்றார். அங்கு சுவாமிக்கு மன்னன் விலையுயர்ந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழகிய ஒரு திருவாபரணத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தான். காளமேகம் உடனே தன் பங்குக்கு சிவபெருமான் மீது, அவருடைய திருக்கோலத்தை அனுபவித்துப் பாடல் ஒன்று பாடினார்.

காதல் கணவனின் பிரிவுத்துயரால் வேதனைப்படும் பெண்ணொருத்திக்குச் சந்திரன், வேதனை தருவதாகக் கூறும் நிலையில் அவள் பாடுவதுபோல அமைந்த பாடல் இது. சிவபெருமானின் அருட் திருக்கோலத்தை மிக அழகாக வருணிக்கும் பாடல் இதுதான்: 

"இருந்தாரை கேள்வனை ஓங்கும்  அராவை எழுபுனலைத்
திருந்தாரை வன்னியை முடி முடித்தோன் செய்ய வேளைப்பண்டு
தரும் தாதை நாயகன் சுந்தரன்  தூதன் சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே'
சிவபெருமானுக்கு உரியதாகப் பொருள் கொள்ளல்: 

"சிவபெருமான் தன் தலையிலே என்னவெல்லாம் முடிந்து வைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அழகில் சிறந்தவளான தாரையின் ஆசைக்குரியவனான சந்திரனை, அழகாகப்படமெடுத்துத் தலை உயர்த்தும் பாம்பை, பொங்கி எழுந்து வரும் புனிதமான கங்கையாற்றை, வெற்றிதரும் ஆத்தி மாலையை, வன்னி மலரை - இவை அனைத்தையும் அல்லவா தலையில் முடிந்து வைத்திருக்கிறார். செய்ய வேளான திருமுருகப் பெருமானை நமக்குத் தந்த தந்தையல்லவா அவர்? உலகுக்கெல்லாம் தலைவரான அவர், தன் அடியவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தூது போனவர் ஆயிற்றே! அத்தகைய ஈசன் திரிபுரத்தை எரித்தானே! அந்தத் தீ எவ்வளவு கொடுமையானது தெரியுமா?

இதோ, புறப்பட்டிருக்கிறதே நிலா... இது அந்தத் தீயைப்போல அல்லவா என்னை வதைக்கிறது. இப்படி பெண் ஒருத்தியின் விரக தாபத்துடன் வெளிப்படும் இப்பாடலைப் பாடிய காளமேகம் அதன் பொருளை மன்னனுக்கு விளக்கினார். 

மன்னனும் மனம் மகிழ்ந்தான்.

அன்று மாலையே, மன்னன் ஆளுவ திருமலைராயன், 
நவராத்திரி திருவிழாவின் தொடக்க நாள் என்பதால், திருவரங்கம் செல்ல வேண்டியதாயிற்று.  கவி காளமேகமும் உடன் சென்றார். மன்னரும் காளமேகமும் சேர்ந்தார்ப் போல் சென்று திருவரங்கத்துப் பெருமாளைக் கண்டு சேவித்து நின்றனர்.

சுவாமியின் தரிசனம் கண்டு மெய்மறந்து நின்ற புலவர் சுவாமியின் அழகிய திருக்கோலத்தை வருணித்துப் பாடினார். பாடலைக் கேட்ட மன்னன் திகைத்தான் "என்ன இது? காலையில் திருவானைக்கா அண்ணல் ஜம்புகேஸ்வரர் சந்நிதியில் பாடிய பாடல் அல்லவா இது? இங்கு ரங்கநாதரை தரிசிக்கும் போதும் அதே பாடலைப் பாடுகிறாரே! என்று எண்ணிய மன்னன் புலவரைப் பார்த்து ""என்ன புலவரே! பாட்டுக்குப் பஞ்சம் வந்துவிட்டதா? திருவானைக்கா சந்நிதியில் சிவபெருமானைக் குறித்துப் பாடிய அதே பாடலை இங்கே திருவரங்கப் பெருமானுக்கும் பாடுகின்றீர்களே?'' என்று சற்றுக் குழப்பத்துடன் கேட்டார்.

காளமேகம் புன்னகையுடன், ""அரசே! இது திருஆனைக்கா சிவபெருமான் மீது பாடிய பாட்டுதான்; அவருக்காகவே பாடியது. அதே பாடல் இந்தத் திருவரங்கத்துப் பெருமாள் ரங்கநாதருக்கும் முற்றிலும் பொருந்தும். மறுபடியும் பாடுகிறேன் கேளுங்கள்'' என்று கூறி, அதே பாடலைப் பதம் பிரித்துப் பாடினார்.

"இருந்தாரை கேள்வனை ஓங்கும் மராவை, எழுபுனலைத்
திருந்தாரை, வன்னியை முடிமுடித்தோன் செய்ய வேளைப் பண்டு
தரும் தாதை நாயகன் சுந்தரன்  தூதன், சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட தீப் போல்  மதியம் புறப்பட்டதே!'

சிவன் சந்நிதியில் பாடிய பாடலின் ஒரு சொல்லைக் கூடக் கவிஞர் மாற்றவில்லை. பதம் பிரித்துப் பாடலுக்குப் பொருள் கூறி விளக்குகையில் ரங்கநாதரைப் பற்றிய பாடலாக அல்லவா அது ஒலிக்கிறது! அரியின் பெருமை கூறும் பாடலின் பொருள் இதுதான்:

"பெருமையுடைய தாரையின் கணவரான வானரவீரன் வாலியையும், உயர்ந்தோங்கி நின்ற மராமரங்களையும் ஏழு கடலையும், திருந்தாத பகைவரையும், வன்னி என்ற அரக்கனையும் முன்பு கொன்று அழித்தவன் திருமால் அல்லவா? முன்னாளில் சிறப்பு மிகுந்த மன்மதனைப் பெற்றுத்தந்த தந்தையும் அவன்தானே? உலகுக்கே தலைவனான அவர்தான் ராமபிரான். அந்த ராமனின் தூதனான சுந்தரன் எனப்படும் அனுமன் பகைவரின் ஊரான இலங்கைக்குத் தீ வைத்தானே, அந்தத் தீயின் கொடுமை எத்தகையது தெரியுமா? இதோ புறப்பட்டிருக்கிறதே வெண்ணிலா. இது அந்தத் தீயைப் போல் அல்லவா என்னை வதைக்கிறது' என்கிறாள் காதலி.

புலவரின் விளக்கம் கேட்டு மகிழ்ந்த மன்னன் அவரைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com