வெளிவராத அருமைப் பிள்ளைத்தமிழ்!

அன்பின்மயமாய், அருள் வடிவாய் உன்னுதற்கரிய ஒளிவீசும் பெருங்கருணைப் பெருமானாக விளங்கியவர் திருவருட் பிரகாச வள்ளலார். அவர் 1874-ஆம் ஆண்டில் வடலூரைஅடுத்துள்ள
வெளிவராத அருமைப் பிள்ளைத்தமிழ்!

அன்பின்மயமாய், அருள் வடிவாய் உன்னுதற்கரிய ஒளிவீசும் பெருங்கருணைப் பெருமானாக விளங்கியவர் திருவருட் பிரகாச வள்ளலார். அவர் 1874-ஆம் ஆண்டில் வடலூரைஅடுத்துள்ள மேட்டுக்குப்பம் என்னும் சிற்றூரில் திருக்காப்பிட்டுக்கொண்டு மறைந்தருளினார்.
 அவர் திருக்காப்பிட்டுக் கொண்ட பின்னர் 1893-ஆம் ஆண்டு அவரைப் போற்றும் வகையில் அவர்மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார் கல்வியில்வல்ல புலவர் சுந்தரம்பிள்ளை என்பவர். தொண்டை நாட்டில் பொன்னேரியைச் சேர்ந்தவர் இவர்.
 இப்பிள்ளைத் தமிழில் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பத்து பருவங்களும் உள்ளன. மேலும், பாடல்கள் அனைத்தும் திருவருட்பாவிலுள்ள பாடல்களையே பெரும்பாலும் நினைவூட்டுகின்றன. காப்புப் பருவத்தில் அமைந்துள்ள பாடல் இது:
 "மணியெனது மலவிரு ளறுக்கு முயர்பூதிதனை
 மாறா தணிந்து யர்ந்த
 மாதங்க மேனியரன் மேனி கொளுமாமணி
 மறைப் பொருடனக்கு மெட்டாத்
 திணிகொண்ட மாமணி திகைப்பறுத்தருள் செய்மணி
 தெய்வந்தனைப் போற்றுவாம்
 தெளிவுடைய திருவருட்பா முறைதிரட்டிலே
 திண்ணிய வருட்கவியது
 பணிவுடைய மெய்விளக்கே விளக்கென்பதது
 பார்க்கில் தண்ணீர் விளக்காய்
 பாங்காக வேற்கு மருளாட்சி பெற்றிடு மதனைப்
 பாடு மகனைக் காக்கவே!'
 பெருமான் வடலூரையடுத்துள்ள "கருங்குழி' என்னும் ஊரில் அவ்வூர் சிராம முன்சீப் வீட்டில் வசித்தபொழுது, அடிகளின்அறையில் அவ்வீட்டின் அம்மையார், அடிகள் அருந்துவதற்குத் தண்ணீர் வைத்துள்ளார். குவளையில் இருந்த தண்ணீரை அடிகள் தனது திருக்கரத்தால் திருவிளக்கில் ஊற்ற, திருக்கரத்தின் அருட்சக்தியால் தண்ணீரில் விளக்கு நற்சுடர் பரப்பி எரிந்தது. இதனையே "மெய்விளக்கே விளக் கென்பது பார்க்கில் தண்ணீர் விளக்காய் பாங்காக' என்னும் காப்புப் பருவத்தில் அமைந்துள்ள பாடல் வரிகளில் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
 "மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
 மதிமண்டலத் தரசுபண்ண நித்திய
 நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
 சிவனே கதவைத் திற'
 என்கிற திருவருட்பா ஆறாம் திருமுறையில் அடிகள் யாத்தருளிய பாடலான இதையே பிள்ளைத்தமிழ் அம்புலிப் பருவத்தில்,
 "மதிமண்டலச்தனி லிருந்துகுறை மதியாகி
 வாழ்வா யிவன்றனக்குள்
 மதிமண்டலந்தனி லிருந்தொழுகு மமுததனை
 வாங்கியீந் தெங்கு நிறைவான்
 மதி விண்முழுதெங்கும் மயங்கு மதிநீ யிவனுள்
 மாயையை மிதிக்கு மதிகாண்'
 எனத் தொடங்கி,
 "அதிகமுறு மெய்ஞ்ஞான வாநந்த போதனுட
 னம்புலீ யாடவாவே
 அரிய வடலூரருட் பிரகாச வள்ளலுட
 னம்புலலீ யாடவாவே'
 என்று பாடி மகிழ்ந்துள்ளார். வருகைப் பருவத்தில்,
 "சுத்தமா மயிலாட வம்மயிற் குயிலான
 சொருப வநுபவ மதனையே'
 என்கிறார். இஃது அடிகளின் திருவருட்பாவில் உள்ள,
 "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
 மயில் குயிலாச்சுதடி அக்கச்சி
 மயில் குயிலாச்சுதடி'
 என்னும் பாடலை நினைவூட்டுகிறது. இவ்வாறு இப்பிள்ளைத் தமிழில் உள்ள பாடல்கள் அனைத்தும் வள்ளலாரின் திருவருட்பாவை நினைவூட்டுகின்றன. நூலாசிரியர் வள்ளற்பெருமான் மீது அளவிலா பக்தி கொண்டவர் என்பதும், கவிப் பேராற்றல்மிக்கு விளங்கியவர் என்பதும், திருவருட்பாவில் கரைகண்டவரென்பதும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் வழியே புலப்படுகின்றன.
 பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிலங்கும் இராமலிங்க சுவாமிகளின் பிள்ளைத் தமிழை, தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மறுபதிப்பு செய்து வழங்க வேண்டியது மிகப் பெரிய தொண்டும் கடமையுமாகும்.
 -புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com