இந்த வாரம் கலாரசிகன்

வியாழனன்று நான் அலுவலகத்திற்குள் நுழையும்போதே, பெரியவர் ஒருவர் என்னை சந்திக்க நீண்ட நேரமாகக் காத்திருப்பதாக எனது உதவியாளர் ராணி மாதவன் தெரிவித்தார்.
இந்த வாரம் கலாரசிகன்

வியாழனன்று நான் அலுவலகத்திற்குள் நுழையும்போதே, பெரியவர் ஒருவர் என்னை சந்திக்க நீண்ட நேரமாகக் காத்திருப்பதாக எனது உதவியாளர் ராணி மாதவன் தெரிவித்தார். வந்திருந்தவர் பொன்னேரி கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து பணி ஓய்வுபெற்ற முனைவர் கலியபெருமாள். அகவை 85 கடந்தும்கூடத் தமிழார்வமும், சமூக அக்கறையும் சற்றும் குறையாமல் வளையவரும் அவரை சந்தித்ததைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி எனக்கு.
 இயற்பியல் பேராசிரியரான முனைவர் கலியபெருமாள், எண்ணற்ற அறிவியல் சொற்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். இந்தியாவில் தொலைக்காட்சி அறிமுகமாவதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்துக்காகத் "தொலைக்காட்சி' என்கிற புத்தகத்தை 1972-இல் எழுதியிருக்கிறார். தமிழ்வழிக் கல்விக்கு வலு சேர்ப்பதாக அமைந்தன அவரது அறிவியல் கட்டுரைகளும், பல ஆங்கில அறிவியல் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களும்.
 அறிவியல் அறிஞர்களின் பட்டியல் ஒன்றைக் காட்டினார். "அவர்கள் குறித்து இளைஞர்மணியில் எழுதுங்களேன்' என்று அழைப்பு விடுத்திருக்கிறோம். முனைவர் கலியபெருமாள் போன்ற அறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் உதவியுடன் புதிது புதிதாக வரும் ஆங்கில அறிவியல் சொற்களைத் தமிழ்ப்படுத்தும் பணியை நாம் வலுப்படுத்த வேண்டும். ஆங்கிலவழிக் கல்வி மோகத்தில் விழுந்து, தமிழைப் புறந்தள்ளி, வளராமல் தடுக்கிறோம்.
 "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்கிற மகாகவி பாரதியின் முன்னெச்சரிக்கையை நாம் இனியும் புறந்தள்ளினால்... அதைச் சொல்லவும் நா கூசுகிறதே, என் செய்ய?
 
 எழுத்தாளர் சிவசங்கரி "சூரிய வம்சம்' என்கிற பெயரில் தனது நினைவலைகளைப் பதிவு செய்து நூலாக வெளியிடுகிறார். நாளை மாலை சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது.
 கல்லூரி நாள்களிலிருந்து சிவசங்கரியின் எழுத்துலகப் பயணத்துடன் ஒரு வாசகனாகத் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். புதினங்களைப் படைப்பதுடன் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள படைப்பிலக்கியவாதிகளைச் சந்தித்து, உரையாடி அவர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்த அவரது பெரும் பணிக்கு நாம் தலை வணங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
 கதை சொல்லியான எழுத்தாளர் சிவசங்கரி தனது நினைவலைகளின் மூலம் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் பேராவலுடன் திங்கள்கிழமை மாலைக்காக நானும் காத்திருக்கிறேன்.
 
 தருமபுரியில் அன்னை கஸ்தூர்பா சேவா சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி. இந்த முறை காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள் விழாவும் சேர்ந்து கொண்டது. தகடூர் வேணுகோபால் இந்த நிகழ்ச்சியின் பகுதியாக, பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ -மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் பெயரில் "முதல்வன்' விருது வழங்கிப் பாராட்டுகிறார்.
 பணிச்சுமை காரணமாகக் கடந்த ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சிக்குப் போவதை ரத்து செய்துவிடலாமா என்றுகூட ஒரு விநாடி யோசித்தேன். ஆனாலும், தகடூர் வேணுகோபாலுக்குக் கொடுத்த வாக்கை மீற மனமொப்பவில்லை. அவசர அவசரமாக தருமபுரி விரைந்து, மாலை சதாப்தி தொடர்வண்டியில் சேலத்திலிருந்து சென்னை திரும்பி விட்டேன்.
 தருமபுரிக்குப் போகும்போதெல்லாம் எனக்குப் பாப்பாரப்பட்டியும், தனது இறுதிக் காலத்தில் அங்கே வாழ்ந்து மறைந்த தியாகி சுப்பிரமணிய சிவாவும், அவர் எழுப்ப விரும்பிய பாரத மாதா ஆலயமும் நினைவுக்கு வரும். இந்த முறையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு வந்தது. அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. புலவர் செ.கோவிந்தராசு, தான் தொகுத்திருந்த "வீழாத் தமிழன் சுப்பிரமணிய சிவா' என்கிற புத்தகத்தை எனக்கு வழங்கி உதவினார்.
 1908-இல் நடந்த திருநெல்வேலிப் போராட்டம் தமிழக வரலாற்றிலும், இந்திய சுதந்திரச் சரித்திரத்திலும் திருப்புமுனையாக அமைந்த பெரு நிகழ்வு. வ.உ.சிதம்பரம் பிள்ளையையும், சுப்பிரமணிய சிவாவையும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி சிறையிலடைத்த பிரிட்டிஷ் காலனிய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்தத் திருநெல்வேலியே கொதித்தெழுந்த நிகழ்வு.
 மகாகவி பாரதியார் குறித்தும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. குறித்தும் உள்ளதுபோல் சுப்பிரமணிய சிவா குறித்த பதிவுகள் இல்லையே என்று நான் பலமுறை யோசித்து விசனப்பட்டதுண்டு. அந்த வேதனைக்கு விடையளிக்கிறது "வீழாத்தமிழன் சுப்பிரமணிய சிவா' புத்தகம். பாப்பாரப்பட்டியில் சிவாவை ஆதரித்த புலவர் கந்தசாமி, முனுசாமி, பொட்டி செட்டியார் ஆகியோரின் வாரிசுகளையும் தோட்டக்காரர் பெரியாம்பட்டியான், சின்னமுத்து முதலியார், பஞ்சாட்சரம், தேவ. பேரின்பன் ஆகியோரையும் பேட்டி கண்டு எழுதியிருப்பது சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது.
 தனது 40-ஆவது வயதில் காலமாகிவிட்ட சுப்பிரமணிய சிவாவின் தியாகத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பது இதயத்தில் கனக்கிறது. சதாப்தி ரயிலில் சென்னை திரும்பும்போது எனக்கு வழித்துணையாக இருந்தது "வீழாத்தமிழன் சுப்பிரமணிய சிவா' புத்தகம். இன்னொரு முறையும் படிக்க வேண்டும்.
 
 விமர்சனத்திற்கு வந்திருந்தது கவிஞர் பழமலய் எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு. மரபும், புதுமையும் தெரிந்த ஆசிரியர் என்பதால், அவருடைய கவிதைகள் தனியான பாணியில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. பக்கத்துக்குப் பக்கம் பஞ்சாமிர்தம். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது?
 ஆல் அரசு என்று
 போன்சாய்கள் பார்த்தேன்
 மா காய்க்குமாம்
 பூவரசு பூக்குமாம்
 கொடுமையாகப்பட்டது
 பறவைகளுக்குக் கூண்டுகள்
 மரங்களுக்குத் தொட்டிகள்
 சிறைச்சாலைகள் நாகரிகம் ஆகா
 எந்த வடிவத்திலும் அனுமதிக்க முடியாது
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com