திருவானைக்கோயில் திருநீற்று மதிலின் சிறப்பு

இறைவன் ஆகாயம், காற்று, பூமி, நெருப்பு, நீர் வடிவாகக் காட்சி தரும் பஞ்ச பூதத்தலங்களில் திரு ஆனைக்கா அப்புத் (நீர்) தலமாக சிறப்புடன் விளங்குகிறது.
திருவானைக்கோயில் திருநீற்று மதிலின் சிறப்பு

இறைவன் ஆகாயம், காற்று, பூமி, நெருப்பு, நீர் வடிவாகக் காட்சி தரும் பஞ்ச பூதத்தலங்களில் திரு ஆனைக்கா அப்புத் (நீர்) தலமாக சிறப்புடன் விளங்குகிறது. இறைவனை "செழுநீர்த் திரள்' என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்.
 நாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த இறைவனை யானையும் சிலந்தியும் வழிபட்டு பேறுபெற்ற தலம் இது. அன்னை அகிலாண்டேசுவரியும் வழிபாடு செய்த தலம். இத்தல வரலாறு இங்கே தூண் ஒன்றில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் போன்றோர் போற்றிய தலம் என்ற சிறப்பும் வாய்ந்ததாகும்.
 இக்கோயில் வரலாற்றுச் சிறப்புடையதாகவும் விளங்குகிறது. 150-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ, பாண்டிய, போசள, விஜயநகர, நாயக்க மன்னர்கள் இக்கோயிலைப் போற்றியுள்ளனர்.
 மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், "திருவானைக்கா திருப்பதியில் திருவெண்ணாவல் திருநிழல் கீழ் இனி திருந்தருளிய திரிபுவன பதியாகிய உடையார் திருஆனைக்கா உடைய நாயனார்' என்று இறைவன் அழைக்கப்படுகிறார். திருமுறைகளில் வரும் கோச்செங்கட்சோழன் பற்றிய வரலாற்றுச் செய்திகளான "சிலந்தியை சோழனாக்கினான் தோப்பு' என்பதும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் "ஆரம்பூண்டான்' என்ற வரலாறும் இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவது சிறப்பாகும்.
 திருவானைக்கோயிலில் ஐந்தாம் திருச்சுற்று திருநீற்று மதில் என்றும், விபூதிப்பிராகாரம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திருச்சுற்று மதிலை சிவபெருமானே சித்தராக எழுந்தருளி, எடுப்பித்ததாகப் புகழ்ந்து பேசப்படுகிறது.
 திருச்சுற்று மதிலைக் கட்டும் பணியாளர்களுக்கு நாள்தோறும் கூலியாக விபூதியினை சித்தர் அளிப்பார். அது அவர்கள் செய்த பணிக்கு ஏற்ப கூலிப்பணமாகும்.
 இறைவன் மேற்கொண்ட இத்திருப்பணியினை அப்பர் பெருமான் தமது திருத்தாண்டகப் பதிகத்தில் "சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்காவுடைய செல்வா' எனப் போற்றுகின்றார்.
 திருநீற்று மதில் எனப்படும் மதில் சுவரில் பாண்டிய அரசு இலச்சினையுடன் (இரண்டு மீன்கள் நடுவில் செண்டு) ஒரு கல்வெட்டுப் பொறிப்பு காணப்படுகிறது.
 "ஸ்வஸ்திஸ்ரீ திருநீறு சுந்தரபாண்டியன் திருமாளிகை' என்ற வாசகம் அதில் காணப்படுகிறது. சோனாடு வழங்கிய சுந்தரபாண்டியன் என்ற சிறப்போடு அழைக்கப்படும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனது (1216 - 1244) கல்வெட்டுகள் திருச்சி, தஞ்சை பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இம்மன்னனால் எடுப்பிக்கப்பட்ட இம்மதில் சுந்தரபாண்டியன் திருமாளிகை எனக் குறிப்பிடப்படுகிறது.
 இக்கோயிலில் கிழக்குக் கோபுரம் "சுந்தரபாண்டியன் கோபுரம்' என்றே அழைக்கப்படுகிறது. இக்கோபுரத்திலும் பாண்டிய மன்னர்களின் அரச இலச்சினைக் காணப்படுகிறது. இத்திருச்சுற்றில் வலம் வந்து மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இங்கே கோயில் கொண்டு அருளும் அம்பிகைக்குக் கவிமாலை அணிவித்து மகிழ்ந்தார். அதுதான் "திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை'யாகும்.
 கச்சியப்பமுனிவர் பெருமானாரால் அருளப்பெற்ற திருவானைக்கா புராணத்தில் திருநீற்று மதிலை வலம் வருவோர் அடையும் பலன்கள், வரங்கள், சிறப்பு பற்றிக் கூறப்படுகிறது. இன்றும் அன்பர்கள் பலர் விபூதிப் பிராகாரத்தில் வலம் வருவதைக் காணலாம். திருவானைக்கா கோயிலின் திருநீற்று மதில் வரலாறு, கல்வெட்டு இலக்கியச் சிறப்பு என்ற பெருமைகளுடன் விளங்குகிறது.
 -கி. ஸ்ரீதரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com