ராய.சொ.வின் தூதுப் பொருள்!

"தமிழ்க் கடல்' எனப் போற்றப்படும் ராய.சொ. எழுத்துப் பயிரில் முற்றிய கதிராய்ச் செழித்ததோர் இலக்கியமே காந்திக் கவிதை! "காந்தி பிள்ளைத்தமிழ்' தொடங்கி இரங்கற்பா வரையிலான 38 பனுவல்கள் உள்ள இத்தொகுப்பு நூலில
ராய.சொ.வின் தூதுப் பொருள்!

"தமிழ்க் கடல்' எனப் போற்றப்படும் ராய.சொ. எழுத்துப் பயிரில் முற்றிய கதிராய்ச் செழித்ததோர் இலக்கியமே காந்திக் கவிதை! "காந்தி பிள்ளைத்தமிழ்' தொடங்கி இரங்கற்பா வரையிலான 38 பனுவல்கள் உள்ள இத்தொகுப்பு நூலில் இடம்பெறும் பல சிற்றிலக்கியங்களில் காந்தி அந்தாதியும் ஒன்று.

"நிலத்தில் உயர்தனிக்காந்தி நிலைத்த புகழ்தனை நாட்ட' எழுதப்பட்ட சிற்றிலக்கியமே "காந்தி அந்தாதி' ஆகும். காந்தியைத் தலைவராகக் கொண்டு 103 கட்டளைக் கலித்துறைப் பாடல்களில் அமைந்த இந்நூல் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. விடுதலைப் போராட்ட வீரரான ராய.சொ., வேலூரில் சிறை வைக்கப்பட்டபோது இந்நூல் படைக்கப்பட்டது என்பார். 

"பாரதத் தாய் விடுதலைக்குப் போராடிப்
 பெரியோர் எல்லாம் கைதவத்தார்
 சிறை உறையும் கவின் ஆங்கிரச,
 ஆடி கடைசி வாரம் செய்தளித்த
 இடம் வேலூர்ச் சிறந்த பெரும்
 காவல் அமைசிறையே அம்மா' (2:3-8)

என்று பாயிரச் செய்யுளில் குறிப்பிடும் இவர், இந்நூலை ஏழு நாள்களில் (9.8.32 முதல் 15.8.32 வரை) படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அகம், புறம் என இருவேறுபட்ட கருப்பொருள்களிலும் காந்தி அந்தாதியில் பாடல்கள் உள்ளன. இத்துறையில் "தூது' என்பது அகத்திணைக் காதலுக்கும் புறத்திணைப் போருக்கும் என இருவேறு முறைகளில் அமைவதாகும்.

ராய.சொ. தமது அந்தாதியில் அகத்துறையில் அமைந்த "தூது' எனும் துறையில் பதினேழு பாடல்களை அமைத்துள்ளார். பிரபந்தத் திரட்டு எனும் பாட்டியல் நூல்  இலக்கண மரபில் ராய.சொ.வும் தமது அந்தாதியில் அன்னம் (56), கிளி (6,7,21,63,94,95),  வண்டு (22-25; 53-55), மயில் (57), குயில் (58) என்பனவற்றைத் தூதுப் பொருளாக்கிச் செய்யுள்கள் படைக்கின்றார்.

ஏழாவது பாடலில், எம்மான் காந்தியின் பெருமையை இளங்கிளி பாடிட, நாகணவாய்ப் பறவை கேட்க, மயில் ஆட, வண்டுகள் ரீங்காரமிட, நாட்டுநலன் பெருகுக என வாழ்த்துகிறார் ஆசிரியர்.  இத்தூதுப் பாடலில் தலைவன் தூது விடுவதாக ஐந்து பாடல்களும் (6,21,53,54,65), தலைவி தூது விடுவதாக ஒன்பது பாடல்களும், தோழியும் தாயும் தாமே தூதுரைப்பதாக  ஒவ்வொரு பாடலும் (63, 99) உள்ளன.     தாய், தன் மகளின் காதலைத் தலைவனிடம் எடுத்துரைப்பது, தமிழ் இலக்கிய மரபில் இருக்க, காந்தி அந்தாதியில் தாய், கிளியை அழைத்து,

"வன்களம் வாளொடு சென்று,
மகன் புறம் தந்து இறந்தால்
அன்னவன் உண்டஎன் அங்கம்
அறுப்பன்' என்று, அப்பிணத்துள்
பின்னும் உடல்கொடு பெற்றஅந்
நாளிற் பெரிது உவந்த
என்தமிழ்ப் பெண்ணின் இயலினைக்
காந்திக்கு இசை கிளியே! (63)

என்று தமிழ்ப் பெண்ணின் வீரத்தை எடுத்துரைப்பது தூதுப் பொருளின் புதுமை! தோழி தூது உரைக்கும் பாடலில் (49) தலைவி தமிழ்ப் பயின்றவளாகவும், கதராடை அணிந்தவளாகவும் உள்ளமையைச் சுட்டி, காதலனிடம் தலைவியை மணந்துகொள்ளத் தூண்டுகிறாள். 

தலைமக்களாகிய காதலனும் காதலியும் தூது உரைக்கும் பாடல்கள் அவர்தம் அகவுணர்வையும், காதல் ஏக்கத்தையும் எடுத்துரைக்கவில்லை. மாறாக, காந்திவழித் தொண்டர்களாக தேசத்தின் விடுதலைக்குப் போராடி சிறை இருக்கும் ஏற்றத்தைச் செப்புவனவாக உள்ளன. சிறையுறையும் காதலி கிளியைத் தன் காதல் தலைவனுக்குத் தூது விடுக்கின்றாள்.

"பனிமலர்க் காவில் பயன்கனி
உண்டுஉறை பைங்கிளி காள்
கனிவு உடைக் காந்தி கருத்தில்
கலந்தே கடன் புரிந்த 
தனிஎனது உட்சிறை நன்மை
 வெளிச்சிறை நண்ணிடும் என்
இனியருக்கு, ஏல எடுத்துரைத்து
 இன்நலம் எய்துவிரே' (94)

இத்தூதுப் பாடலில் காந்தி வழியே தொண்டு செய்து சிறையிருக்கும் தன் ஏற்றத்தை, வெளிச்சிறையாகிய நாட்டில் உள்ள தலைவனிடம் உரைக்கச் சொல்கிறாள் தலைவி. சிறையில் உள்ள காதலன், கிளியை அழைத்துத் தன் காதலியிடம், தூது (95:6-8) உரைக்கின்றான். 

அதாவது, தலைமக்கள் களவு வாழ்க்கையில் காதலோ, திருமண வாழ்வின் பிரிவோ பேசப்படவில்லை. மாறாக, தேச சேவையில் காந்திவழித் தொண்டர்களாகச் சிறையிருப்பதும், அதனை ஒருவருக்கு ஒருவர் தூதுச் செய்தியாகப் பரிமாறிக் கொள்வதும் புதுமை கலந்த புரட்சிதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com