புறம்தள்ளியதால் புலம்புகிறோம்!

உலகிலுள்ள மக்கள் அனைவரும் இன்று   தீநுண்மி (கரோனா) நோய்த் தொற்று மரண பயத்தில் உறைந்திருக்கின்றனர். ஆபத்துக்கு உதவாத ஆங்கில மருத்துவத்தை விடுத்து, தமிழ் மருத்துவத்தை நாடிச் செல்கின்றனர்.
புறம்தள்ளியதால் புலம்புகிறோம்!

உலகிலுள்ள மக்கள் அனைவரும் இன்று   தீநுண்மி (கரோனா) நோய்த் தொற்று மரண பயத்தில் உறைந்திருக்கின்றனர். ஆபத்துக்கு உதவாத ஆங்கில மருத்துவத்தை விடுத்து, தமிழ் மருத்துவத்தை நாடிச் செல்கின்றனர்.

ஆரோக்கிய வாழ்வுக்கும், நோயைக் குணப்படுத்தவும் இன்று நம் தமிழர் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் மீண்டும் (வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை, துளசி) பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர். 

"முன்னோர் மொழிப்பொருளே அவர்
மொழியும் பொன்னே போல் போற்றுவோம்'

என்கிற நன்னூலாசிரியர் பவணந்தியாரின் மொழியைப் போற்றிய நம் பழந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக இயற்றினர்.

மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையில் கொள்ள வேண்டியதையும், தள்ள வேண்டியதையும் நீதிநூல்களாகப் படைத்தனர். அவற்றையெல்லாம் நாம் புறம்தள்ளிய காரணத்தால்தான் இன்றைக்கு மரண பயத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

தமிழிலுள்ள தொகை இலக்கிய நூல்களுள் ஒன்று பதினெண்கீழ்க்கணக்கு. வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் பெரும் புலவர் இயற்றிய "ஆசாரக்கோவை' என்ற நீதி நூல் இத்தொகை நூல்களுள் ஒன்று. ஆசாரங்கள் பலவற்றைக்கூறி, இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஆன்றோர் மெச்சும் நல்வாழ்வு வாழ்வதுடன், நோயற்ற வாழ்வும் வாழலாம் என்றும் கூறினார்.   

இன்று உலகெங்கிலும், "அடிக்கடி கைகளைத் தூய்மை செய்யுங்கள், கை குலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள், கண்ட கண்ட இடத்தில் எச்சில் துப்பாதீர்கள்,  தரையில் அமர்ந்தே உணவு உண்ணுங்கள், உடலையும், உடைகளையும்  தூய்மையாக வைத்திருங்கள், இருமும்போதும், தும்மும்போதும் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள், மலஜலம் கழித்த பின் கை, கால்களைத் தூய்மைப்படுத்துங்கள், எச்சில் படுத்திய பொருளைத் தீண்டாதீர்கள்' என்பன சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை பல்லாண்டுகளுக்கு முன்பே கூறி எச்சரித்தவர் புலவர் பெருவாயின் முள்ளியார். 

மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான, இன்றியமையாத ஆசாரங்களை (ஒழுக்கங்களை) இந்நீதி நூல் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 பாடல்களில் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும், மக்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை எடுத்துரைக்கிறது. அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு, உடல் நலம் பேணும் புறத்தூய்மையையும் அதிகம் வலியுறுத்தியுள்ளார் புலவர். இந்நூல் வடமொழி "ஸ்மிருதி' கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பது சிறப்புப் பாயிரம் மூலம் அறிய முடிகிறது.  

"ஆசார வித்து'க்கான முதல் செய்யுளில், நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும் (பா.1) என்கிறார் புலவர்.

எச்சிலுடன் தீண்டத்தகாதவை: 
"எச்சிலார் தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். (5)

பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலையுடையார் எவரும் தீண்ட மாட்டார் என்று கூறுவதுடன்; எச்சிலுடன் செய்யக் கூடாதவையாக, (பா.8) "இந்நான்கு எச்சிலையும் கடைப்பிடித்து ஒன்றையும் ஒழுகாதவர், வாயால் எதையும் சொல்லார், கண்துயிலார், எப்போதும் அறிவுடையவராக இருப்பர் என்றும்;  பழைமையோர் கண்ட முறைமையைக் கூறுமிடத்து,

"உடுத்து அலால் நீராடார்; ஒன்றுடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவைபுகார்; } என்பதே
முந்தையோர் கண்ட முறை' (11)

நீராடும்போது ஓர் ஆடையுடன் நீராடக் கூடாது; உண்ணும் போது இரண்டு ஆடையும் அணியாமல் இருக்கக்கூடாது. நீரில் ஆடையைப் பிழியக்கூடாது; ஓர் ஆடையை உடுத்தி அவையின்கண் செல்லக்கூடாது என்கிறார்.

தவிர்க்க வேண்டியனவற்றைக் கூறும்போது (12),  தலையில் தேய்த்த எண்ணெயினால் யாதொரு உறுப்பையும் தீண்டக்கூடாது. பிறர் உடுத்திய ஆடையையும், பிறர் தொட்ட செருப்பையும் அணிந்துகொள்ளக் கூடாது என்றும்;  "ஆராய்ந்த அறிவுடையார் நீராடும்பொழுது நீந்தமாட்டார், எச்சிலை உமிழ மாட்டார், அமுங்கியிருக்க மாட்டார், விளையாட மாட்டார், எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் கழுத்தளவு அமிழ்ந்து குளிக்க மாட்டார்' என நீராடும் முறையையும் (14)  எடுத்துரைக்கிறார். உணவு உண்ணும் முறைமையைக் கூறும்போது, 

"நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து' (18)

நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படிச் செய்யாமல் உண்டாரைப் போல் வாயை மட்டும் கழுவிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார் என்றும்;  கால் 
கழுவிய பின் செய்ய வேண்டியவையாக, "கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்குச் செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கை (19) என்கிறார்.

ஒருவர் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவைக் கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும் (20) என்று உண்ணும் முறையையும்;  படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது (23) என்றும்; உண்டபின் செய்ய வேண்டியவையாக, வாயை நன்றாகக் கொப்புளித்து, நன்றாகத் துடைத்து, முக்குடி  குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும் (27) என்கிறார்.

இவை தவிர, நீர் குடிக்கும் முறை (28), உறங்கும் முறை (30), மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்(32),  மலம் சிறுநீர் கழிக்கும் முறைமை (33, 34),  வாய் அலம்ப ஆகாத இடங்கள் (35),  செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும் (41), வீட்டைப் பேணும் முறைமை (46), நடை, உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல் (49), தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத்தக்கவை (51),  நோய் வேண்டாதவர் செய்யக்கூடாதவை (57), பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள் (88) என மனிதனின் செம்மையான வாழ்வுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் தேவையானவற்றை அறிவுறுத்தியுள்ளார்.

இதன் சிறப்புப் பாயிரத்தில், "முப்புறங்களையும் அழித்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, ஆரியரிடம் தான் அறிந்த ஆசாரங்களை யாவரும் அறிய "ஆசாரக்கோவை' என்ற இந்நூலை திருவாயில் எனப் போற்றப்படும் கயத்தூர் அருகில் பெருவாயின் என்ற ஊரில் வாழும் முள்ளியார் தொகுத்துக் கொடுத்தான்' என்கிறார்.

தமிழர்களே... தமிழர்களின் பழந்தமிழ்ப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து, படித்துப் பயன்படுத்த மறந்த காரணத்தினால்தான் இன்று கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுக்கெல்லாம் பயந்து பயந்து வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இனியாவது "ஆசாரக் கோவை' வழி தமிழ் நீதி நூல்களையும் அற நூல்களையும் புறம் தள்ளாமல் வாழப் பழகுவோம்; நோயற்ற வாழ்வு பெறுவோம்!  நம் உள்ளங்கையில் தமிழ்க் கனியிருக்க, இனி ஆங்கிலக் காய் கவர வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com