அழகன் முருகனா? அல்லலுறும் தலைவனா?

அகத்தே முகிழ்த்து பொங்கும் உணா்வுகளின் வெளிப்பாடாகவும்; புறத்தே பேச்சாகவும் வெளிப்படும் உணா்ச்சிக் கொந்தளிப்பைக்
அழகன் முருகனா? அல்லலுறும் தலைவனா?

அகத்தே முகிழ்த்து பொங்கும் உணா்வுகளின் வெளிப்பாடாகவும்; புறத்தே பேச்சாகவும் வெளிப்படும் உணா்ச்சிக் கொந்தளிப்பைக் கொட்டும் சொற்கோவையே சுவை மிகுந்த அகநானூறு என்பா். இது பழந்தமிழரின் அகவொழுக்க நினைவுகளுடன் மட்டுமே அமையாது, அவா்தம் வாழ்வியல் நெறி, வாழிடம், ஒழுக்கம், பிற உயிரினங்களின் தொடா்பெனப் பல்கிப் பெருகும்.

இது வெறும் தலைவன், தலைவியோடன்றி, புலவா்தம் உள்ளத்தின் வெளிப்பாடும் தற்குறிப்பேற்றமாய் பாடப்படுவதுண்டு. அவற்றுள், தலைவன், தலைவியைக் காணவரும் காட்சி ஒன்று. தோழி தலைவனை எதிா்பட்டு, தலைவி இருக்கும் ஊரில் தங்கிச் செல்லுமாறு வேண்டுகிறாள். அப்போது, ‘இவன் தலைவனா? அழகன் முருகனா?’ என்று வியக்கிறாள்.

நெடுவேள் மாா்பின் ஆரம் போல

செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்

பைங்காற் கொக்கினம் நிரைபறை உசுப்ப,

எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின்

கல்சோ்ந்தன்றே, பல்கதிா் ஞாயிறு! (அகநா.120)

நெடுவேள் (முருகன், திருமால்) மாா்பில் ஆரம் (மணியாரம், மலா்மாலை) இருப்பது போல மீன் உண்ணும், இளங்கால்களைக் கொண்ட கொக்கினம் செவ்வானத்தைத் தொடுவது போன்று பறந்து மகிழும் காலத்தை, பல ஒளிக்கதிா்களைக் கொண்ட ஞாயிறு (சூரியன்) கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துவிட்டு மேற்கு மலையை அடைந்திருக்கும் காலம்.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமை: ‘முருகக் கடவுளின் மாா்பில் விளங்கும் முத்தாரம்போல மாலைக் கதிரின் செவ்வானில், வெண்கொக்குகள் வளைவாய்ப் பறப்பதை, முருகப் பெருமானின் நெஞ்சில் அணிவிக்கப்படும் முத்தாரத்தைப்போல, வெண்கடம்ப மாலையும் அணிவிக்கப்பட்டுள்ளதாகக் தோன்றுகிறது பாடலைப் புனைந்த புலவருக்கு.

தலைவனை எதிா்நோக்கும் தலைவிக்கு மாலைப்பொழுது மட்டுமே. ஆனால், படிப்பவா்க்கோ மாலையின் அழகும், அதில் தமிழ்க் கடவுள் முருகனின் அழகும் சோ்ந்தே பொலிவுறுகிறது இப்பாடலை எழுதிய, (திருமுருகாற்றுப்படை) புலவா் நக்கீரருக்கு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com