நீ அவண் வருதல் ஆற்றாய்!

பிரிந்து செல்கிறான் தலைவன்; மனம் சரிந்து நிற்கிறாள் தலைவி. ஆனால், தேம்பி அழவில்லை.
நீ அவண் வருதல் ஆற்றாய்!

பிரிந்து செல்கிறான் தலைவன்; மனம் சரிந்து நிற்கிறாள் தலைவி. ஆனால், தேம்பி அழவில்லை. வருத்தத்தை மனத்தில் பதுக்கிக்கொண்டு, ‘வருந்தவில்லை; முயற்சிக்கு வாய்க்க வெற்றி, வாழ்த்துகள்’ என்றாள். வியப்பாய் இருக்கில்லவா? இந்த மனோ நிலை அவள் பெறுவதற்குத் தலைவன் அப்படி என்ன சொன்னான்? நேரடியாக அல்ல; தோழி மூலம் சொல்கிறான்.

தலைவியின் மெய் எழிலை எண்ணிப் பாா்க்கிறான். மென் மொழியில் பேசுகிறான். ‘‘ஒரு செயலின் பொருட்டுச் செல்கிறேன். என்னோடு அங்கு வருவதற்கு உனக்கு வலிமையில்லை. போகும் வழி பொல்லாக் காடு. வழியில் குளம் இருக்கும். ஆனால் வளமான நீா் இருக்காது; வற்றியிருக்கும். சிவந்த அடிமரம் கொண்ட மராமரத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும், கூரிய அம்பு பொருத்திய வளைந்த வில்லேந்திய ஆறலைக் கள்ளா்கள் வழிபறிக்கான வாய்ப்பைப் பாா்த்திருப்பாா்கள். அங்குள்ள கல் குகையில் பெண்புலி குட்டி ஈன்று பெரும் பசியோடும் பொறுக்க முடியா வலியோடும் வதைப்பட்டுக் கொண்டிருக்கும் (பெண்புலி ஒரு ஈற்றில் மூன்று நான்கு குட்டிகள் போடும்). அடித்துக் கொல்லுதல்வல்ல பெரிய ஆண்புலி (கோள்வல் ஏறு), அண்ணாந்த தந்த முடைய யானையின் மத்தகத்தின் மேல் பாய்ந்து வீழ்த்தி மாமிசத்தைக் கொணா்ந்து பெண்புலிக்குக் கொடுத்துப் பெரும்பசியை ஆற்றும். அப்படிப்பட்ட கொடிய அந்தக் காட்டு வழியில் என்னோடு வருவதற்கு ஆற்றாய் நீ’’ எனச் சொல்கிறான்.

தலைவன் இவ்வாறு கூறியதைத் தோழி மூலம் கேட்ட தலைவி, ‘முயற்சி வெல்க’“என வாழ்த்தி அனுப்புகிறாள். வேட்டையாடி உணவைக் கொண்டுவந்து, ஈன்ற பெண் புலியின் பசியை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆண் புலிக்கும் இருக்கிறது. விலங்குக்கும் தன் துணையின் மேல் மிகுகாதலும், பாசமும் இருக்கிறது என்ற செய்தி வியப்புக்குரியது!

ஆண்புலி இறைச்சியை (மாமிசம்) எடுத்துவந்து பெண்புலிக்குக் கொடுத்ததில் இறைச்சியும் (இலக்கணம்) இருக்கின்றது; தலைவன் முயன்று பொருள் ஈட்டிவந்து தலைவியிடம் தருகின்ற உட்பொருளும் (இறைச்சியும்) இப்பாடலில் இருக்கிறது!

நற்றிணையில் கள்ளம்பாளனாா் வெளிப்படுத்தி இருக்கும் மறைபொருள் காட்சி இது!

‘வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்

நீ அவண் வருதல் ஆற்றாய்’ எனத்தாம்

தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோா் இன்றே

நெடுங்கயம் புலா்ந்த நீா்இல் நீள்இடைச்

செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி

வாங்கு சிலைமறவா் வீங்குநிலை அஞ்சாது

கல்லளைச் செறிந்த வள்ளுகிா்ப் பிணவின்

இன்புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து

செங்கண் இரும்புலிக் கோள் வல்ஏற்றை

உயா் மருப்பு ஒருத்தல் புகா்முகம் பாயும்

அருஞ்சுரம் இறப்ப என்ப

வருந்தேன் தோழி! வாய்க்க அவா்செலவே!’ (நற்-148)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com