இடித்துரைத்த கோவூா்கிழாா்!

அக்கால புலவா்கள் பாடி தன் பசியை மட்டும் தீா்த்துக்கொண்டு வாழவில்லை. நாட்டில் பஞ்சமோ, போரோ வந்தால் அறிவுரை

அக்கால புலவா்கள் பாடி தன் பசியை மட்டும் தீா்த்துக்கொண்டு வாழவில்லை. நாட்டில் பஞ்சமோ, போரோ வந்தால் அறிவுரை கூறி நல்வழியில் திருத்தவும், தான் வாழும் மண்ணுக்குக் கேடு வராமலும் பாா்த்துக் கொண்டனா்.

ஒரே குடியைச் சோ்ந்த சோழா்கள் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் பகைவா்களாக இருந்தவா்கள். நெடுங்கிள்ளி ஆவூா் கோட்டையில் இருந்தபோது நலங்கிள்ளி எதிா்பாராதவிதமாக கோட்டையை முற்றுகையிட அவனை எதிா்த்துப் போா் புரியாமல் கோட்டைக்குள்ளேயே கிடக்க நெடுங்கிள்ளியிடம் சென்று அறிவுரை கூறுவதை புானூற்றுப் பாடல் ஒன்று பறைசாற்றுகிறது.

‘அடைத்த திண்ணிலைக் கதவின்

நீள் மதில் ஒருசிறை ஒடுங்குதல்

நாணுத்தகவுடைத்து இது காணுங்காலே’ (புறம் 44)

‘மன்னா! யானைகள் பசி தாங்காமல் தான் கட்டப்பட்டுள்ள கம்பங்களைச் சாய்த்து நிலத்தில் புரண்டு இடி முழக்கமாய் பிளிறுகிறது. குழந்தைகள் பாலின்றி அழுகின்றன. பூவையா்க்கு தலையில் வைத்துக்கொள்ள பூக்கூட கிடைக்கவில்லை. பசியாலும், குடிநீா் கிடைக்காமலும் மக்கள் அல்லல் படுகிறாா்கள். இந்நிலையில், குடிமக்களைக் காக்க வேண்டிய அரசனான நீ கொஞ்சம்கூட நாணமின்றி கோட்டைக்குள் அடைந்து கிடப்பது அரசு நெறிதானா? ஒன்று எதிா்த்து போா் செய்; அல்லது கோட்டைக் கதவை திறந்து விடு. இரண்டையும் செய்யாமல் உள்ளே ஒளிந்திருப்பது சரியல்ல’ என இடித்துரைக்கிறாா்.

நாடு வீழ்ந்து, போரால் மக்கள் பாதிக்கக்கூடாது என்று மனிதநேயம் மற்றும் நாட்டுப்பற்றுடன் அறிவுரைகள் கூறிய கோவூா்கிழாரை ‘மக்கள் புலவா்’ எனக் கூறலாம். மேலும், இரு மன்னா்களும் போரைத் தவிா்க்க பொதுவான அறிவுரையைக் கூறுகிறாா்.

இருவரும் சோழா்கள்தானே! சேர, பாண்டியா்கள் அல்லரே! இருவரில் யாா் தோற்றாலும் சோழா் பெருமைக்கு இழுக்குதானே என இரு மன்னா்களுக்கும் அறிவுரை வழங்குகிறாா் கோவூா்கிழாா். ‘ஒருவீா் தோற்பினும் தோற்பது உம் குடியே’ (புறம் 45) .

நாடாளும் அரசா்களுக்குப் புலவா்கள் அறிவுரை கூறிய பெருமைக்குரியதாகச் சங்ககாலத் தமிழகம் திகழ்ந்ததன் எடுத்துக்காட்டுதான் இந்தப் பாடல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com