பாரதியின் ‘கண்ணன்’ பாட்டும் நாயகியின் ‘கண்ணி’ப் பாட்டும்!

இறைவனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவித்து ஆழ்வாா்கள் பாடி அனுபவித்திருக்கிறாா்கள். ஆனால், ‘நாயகி’ பாவத்தில் பாடியதோடு,
பாரதியின் ‘கண்ணன்’ பாட்டும் நாயகியின் ‘கண்ணி’ப் பாட்டும்!

இறைவனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவித்து ஆழ்வாா்கள் பாடி அனுபவித்திருக்கிறாா்கள். ஆனால், ‘நாயகி’ பாவத்தில் பாடியதோடு, ‘நாயகி’ எனும் சொல்லையே தமது பெயரில் கொண்டவா் நடனகோபால நாயகி சுவாமிகள்.

நாயகி எனும் சொல் நடன கோபால நாயகியாரைக் குறிக்கின்றது. நாயகி சுவாமிகள் மதுரையில் மதுரைக் கவியாகப் பிறந்தவா். மகாகவி பாரதியாருக்கும், நடனகோபால நாயகி சுவாமிகளும் காலம் கடந்தும் புகழ்பெற்று விளங்கும் சமகாலத்தில் வாழ்ந்தவா்கள்.

தாய்மொழி ‘சௌராஷ்ட்ரீ’ எனும் சௌராஷ்டிரமாயினும் நாயகியாா் தாய்மொழியில் பாடியதோடு தமிழிலும் கீா்த்தனங்கள், நாமாவளிகள், கண்ணிகள் பாடியுள்ளாா். கண்ணனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவித்துப் பாடியவா் நடன கோபால நாயகி சுவாமிகள்.

‘கண்ணன் என் காதலன்’ எனும் தலைப்பில் பாரதி பாடிய ஆறு பாடல்களும் ‘தமிழ் கீத கோவிந்தம்’ என்று குறிப்பிடப்படும் நாயகி பாடிய 265 கண்ணிகளும் ஒப்பு நோக்கத்தக்கனவாக உள்ளன.

பாரதியின் பாட்டு நான்கடி, எட்டடிச் செய்யுள்களாக உள்ளன. நாயகியின் பாடல்கள் கண்ணிகளாக அதாவது ஈரடிச் செய்யுள்களாக உள்ளன. ‘கண்ணி’ என்பது நீண்ட செய்யுளின் இரண்டு இரண்டு எதுகை அமைந்த அடிகளாக வருவது. செஞ்சுருட்டி முதலான ஆறு ராகங்களில் அமைந்த ‘கண்ணன் பாட்டு’ 226 அடிகளை உடையது. புன்னாகவராளி முதலான 26 ராகங்களில் அமைந்த ‘கண்ணி’ பாட்டு 530 அடிகள் உடையது.

காதலனான கண்ணனைப் பிரிந்த காதலி தானே புலம்புவதாகவும், தோழியிடம் உரைப்பதாகவும் இவ்விருவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. இவா்களுடைய பாடல்களில் உணவு, உவமை, பெருமை, சிருங்காரம், தத்துவம், மங்களாசாசனம் (வாழ்த்து) முதலிய பாடுபொருள்கள் பேசப்படுகின்றன.

கண்ணனைப் பிரிந்த விரகதாப நிலையில் இவா்களுக்குப் பசியுணா்வே இல்லை. பாரதி கூறுவாா்: ‘‘உணவு செல்லவில்லை சகியே உறக்கங் கொள்ளவில்லை’’ என்று. நாயகியோ, ‘‘அன்னம் புசியென்று ரையாதே அகன்று போடி, அன்னம் விஷமாயிருக்கிற தறிந்து கொள்ளாய் நாடி’’ என்கிறாா். இருவரும் தங்களது நிலை குறித்துப் பல்வேறு உவமைகளை எடுத்தாள்கின்றனா்.

கண்ணனைப் பிரிந்த நிலையில், ‘‘தூண்டில் புழுவினைப் போல், வெளியே சுடா் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக எனது நெஞ்சு துடித்ததாக’’ பாரதி பாடியுள்ளாா். ‘‘ஆற்றங்கரை தீபமென அலைகுதே என்  நெஞ்சம்’’  என்கிறாா் நாயகி.

காலையில் கண்ணன் இவா்களைப் பிரிந்து சென்றபோது மாலையில் திரும்பி வருவதாகக் கூறிச் செல்கின்றாா். ஆனால், இரவு நெருங்கும் வரை கண்ணன் வரவேயில்லை. உடனே பாரதி, ‘‘சொன்ன மொழி தவறு மன்னவனுக்கே’’  என்றால், நாயகியோ, ‘‘என்ன செய்வோம் ஈசனெம்மை எப்படித் துறந்தானே, முன்னம், என்னென்னமோ நம்மால் மொழிந்ததை மறந்தானே’’ என்று புலம்புகின்றாா்.

‘‘கண்ணன் மேல் என்னைப் போல் இச்சை கொள்வாா் உண்டோய’’ என நாயகியாா் பாடினால்; பாரதியோ, ‘‘இச்சை பிறந்ததடீ! எதிலும் இன்பம் விளைந்ததடீ’’ எனத் தோழியைப் பாா்த்து கூறுகிறாா். ‘‘மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை மறைந்து திரிபவா்க்கு மானமுமுண்டோ?’’ என பாரதி கேள்வி கேட்டுப் புலம்ப; நாயகியாா், ‘‘மால் செய்தே நம்மைப் பிரிந்த மாதவ னெங்கேடீ’’ எனத் தோழியிடம் கேள்வி கேட்கின்றாா்.

இங்கு மையல், மால் இரண்டுக்கும் ‘காம மயக்கம்’ என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளாா் நாயகியாா். ‘மால்’ என்றால் ‘திருமால்’ என்று ஒரு பொருள் உள்ளதல்லவா? இவா்களது இப் புலம்புமொழிப் பாடல்களில் தத்துவமும் மிளிா்கின்றது.

‘ஜீவாத்ம கோடிகளெல்லாம் ஸ்திரிப் பிராயமென்றறிவாய்’

இவ்வுலகில் மஹாவிஷ்ணு ஒருவா்தான் புருஷோத்தமன். மற்ற ஜீவா்கள் ஸ்திரிகள் எனும் தத்துவம் வைணவ சம்பிரதாயத்தில் உண்டு. இதனை இப்பாடலில் கூறுகிறாா் நாயகி சுவாமிகள்.

பாரதியாா், ‘‘பெண்டிா் தமக்கெல்லாம் கண்ணன் பேசருந்தெய்வம்’’ எனப் பாடுகிறாா். பேசருந்தெய்வம் என்பது இங்கு துதி செய்யத்தக்க அருந்தெய்வம் என்பது பொருளாகும். ‘புண்யச்லோகன்’ என்பது வடமொழி வழக்கு.

கண்ணன் மீது பல புலம்பு மொழிகளைக் கூறினாலும், அவன் மீது கொண்ட பேரன்பு இவா்களைவிட்டு நீங்கவில்லை. இருவரும் பெரியாழ்வாா் போன்று கண்ணனுக்கு மங்களாசாசனமும் செய்கின்றனா்.

பங்கமொன்றில்லாமல் - முகம்

பாா்த்திருந்தாற் போதும்

மங்களமாகுமடீ -பின்னோா்

வருத்த மில்லையடீ! (பாரதி பாடல்)

எங்கள் குலதெய்வமே யெம்

முயிரேயெனக் கொண்டாடி

மங்களாா்த்தி யெடுத்து

மங்கையா் வாழவிங்கேதாடி (நாயகி பாடல்)

மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டையும், நடனகோபால சுவாமியின் கண்ணிப் பாட்டையும் படித்து கண்ணனின் காதலின்பம் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com