இந்த வாரம் கலாரசிகன்

சைவத்துக்கும், சமரச சன்மார்க்கத்துக்கும் அதன் மூலம் தமிழுக்கும், தமிழகத்துக்கும் "சிவாலயம்' ஜெ.மோகன் செய்துவரும் பங்களிப்புகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது.
இந்த வாரம் கலாரசிகன்

சைவத்துக்கும், சமரச சன்மார்க்கத்துக்கும் அதன் மூலம் தமிழுக்கும், தமிழகத்துக்கும் "சிவாலயம்' ஜெ.மோகன் செய்துவரும் பங்களிப்புகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. அவரை நான் மிக அரிதான சில நிகழ்வுகளில்தான் சந்தித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். அகல இருந்து நான் வியந்து நோக்கும் பலரில் அவரும் ஒருவர். அவரது உதவியுடன் வெளியிடப்பட்டிருக்கும் திருக்குறள் மூலமும் உரைகளும் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள். திருமுறை பதிப்புகளுக்கு அவர் நல்கும் ஊக்கமும் உதவியும் மிகப்பெரிய சைவத்தொண்டு.
 "சிவாலயம்' ஜெ.மோகன் தொகுத்திருக்கும் "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்' பேராசிரியர் சாமி.தியாகராசன் வெளியிட்டிருக்கும் புத்தகம். ஏற்கெனவே, "சிவாலயம்' ஜெ.மோகன் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் பெருமான் அருளிய திருவருட்பா ஆறு திருமுறைகளையும் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாகக் காணப்படுவதுதான், "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்'. அருட்பிரகாச வள்ளலார் குறித்த அனைத்துத் தகவல்களும், திருவருட்பா குறித்த அனைத்து செய்திகளும் ஜெ.மோகனால் மிகவும் கவனத்துடன் தேடிப் பிடித்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
 தமிழகத்தின் திருப்பேறு, வள்ளலார் பெருமான் தாம் பாடியருளிய திருவருட்பாக்களைத் தமது கரத்தாலேயே எழுதி அருளியுள்ளதுதான். சென்னையில் இருந்தவரை ஓலையிலும், கடலூருக்கு வந்த பின்னர் காகிதத்திலும் எழுதியிருக்கிறார். திருவருட்பாப் பாடல்கள் 5,818-இல் பெரும்பாலானவற்றிற்குக் கையெழுத்து மூலங்களே கிடைத்துள்ளன.
 "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்' என்பது புத்தகமோ, கையேடோ அல்ல. இதையே ஓர் ஆய்வாக எடுத்துக்கொண்டு "சிவாலயம்' ஜெ.மோகனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது பரிந்துரை. முனைவர்பட்ட ஆய்வாளர்கள்கூட இந்த அளவிற்கு முனைப்புடன் தரவுகளைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
 விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பதாலோ என்னவோ, இந்தப் புத்தகத்துக்கு விலை குறிப்பிடாமல் விட்டிருக்கிறார் பேராசிரியர் சாமி.தியாகராசன். விலையில்லா பொருள்கள் தமிழகத்தில் மலிவாகிவிட்டன. அதனால், குறைந்த விலையில் பிரசுரித்து, அனைவருக்கும் கிடைக்க வழிகோல வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
 
 நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இதழியலில் தடம் பதித்தே தீருவது என்கிற தீர்மானத்துடன் சென்னை மாநகரை நான் தஞ்சம் அடைந்தபோது, எனக்கு அறிமுகமான என்னைப் போலவே எழுத்தார்வத்துடன் இயங்கிவந்த பத்திரிகை நண்பர்கள் பலர். அவர்களில் ஆர்.சி.சம்பத், ஆர்.சி.பாஸ்கர் சகோதரர்கள் சற்று வித்தியாசமானவர்கள். தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தங்களது பார்வையை விரிவுபடுத்திக் கொண்டவர்கள். குறிப்பாக, ஆர்.சி.சம்பத்திடம் உலக அரசியல் குறித்தும் பேசலாம்; சர்வதேச சினிமா குறித்தும் பேசலாம்; கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான பல்வேறு மொழி இலக்கியங்கள் குறித்தும் பேசலாம்.
 தமிழ் இதழியல் உலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாத பத்திரிகையாளர்கள் பலரில் ஆர்.சி.சம்பத்தும் ஒருவர் என்பது எனது கருத்து. ஆனால் அதுபற்றியெல்லாம் அவர் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதோ, விசனித்துப் புலம்பியதோ கிடையாது. "தினமணி'யில் பங்களிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை என்கிற மனக்குறை எனக்கு நிறையவே உண்டு.
 ஆர்.சி.சம்பத் எழுதிய "யாத்ரீகர்கள் கண்ட இந்தியா' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. இந்தியாவின் பழங்காலப் பெருமையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஆதாரமாக இருப்பவை வெளிநாட்டு யாத்ரீகர்கள் நான்கு பேரின் பதிவுகள். கடல் வழிப் பயணம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவருவது அந்தக் காலத்தில் எளிதல்ல. அதற்கு அறிவு வேட்கை மட்டுமே போதாது. விடாமுயற்சியும், துணிச்சலும் தேவை. இப்போது உலகம் அமெரிக்காவை அண்ணாந்து பார்ப்பதுபோல, 15-ஆம் நூற்றாண்டு வரை உலகம் "இந்தியா' என்றால் விழிகள் விரிய வியப்பில் சமைந்த காலம் இருந்தது.
 மொராக்கோவைச் சேர்ந்த இபன் பதூதா, சீன யாத்ரீகர்களான யுவான் சுவாங், பாஹியான், வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த மார்க்கோ போலோ ஆகிய நால்வரும் இந்தியப் பயண அனுபவங்களைப் பதிவு செய்து தந்திருக்கிறார்கள். அந்தப் பதிவுகள்தான் உலகம் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிய அளவில் உதவியது. அவற்றைப் படித்துவிட்டு இந்தியாவை சுற்றிப் பார்க்கக் கப்பலேறிக் கிளம்பிய இளைஞர்கள் ஏராளம்.
 அந்த நான்கு யாத்ரீகர்கள் குறித்தும், அவர்கள் தங்களது பயணத்துக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது குறித்தும், அவர்களது இந்திய அனுபவங்கள் குறித்தும் சுருக்கமாக, அதே நேரத்தில் அனைவருக்கும் புரியும் விதத்தில் பதிவு செய்கிறது ஆர்.சி.சம்பத் எழுதிய "யாத்ரீகர்கள் கண்ட இந்தியா'.
 
 சென்னை காவல்துறை துணை ஆணையர் நண்பர் திருநாவுக்கரசு இ.கா.ப. எழுதிய "தன்னிலை உயர்த்து' புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியை அடுத்த ரெங்கநாதபுரம் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர் கவிஞர் ஞானபாரதி. அவரைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன் நான் வியந்தேன்.
 கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக "இளங்குயில்' என்கிற பெயரில் ஒரு தனிச்சுற்று மாத இதழை ஆண்டிப்பட்டியில் நடத்தி வருகிறார், கவிஞர் "ஞானபாரதி' என்பது மலைக்க வைக்காமல் என்ன செய்யும்? சமூக சிந்தனையாளராக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரையாளராக, இலக்கியச் சொற்பொழிவாளராக, கவிஞராக ஞானபாரதி எடுக்கும் அவதாரங்கள் பல. அவரது கவிதைத் தொகுப்பு "மாதவம் செய்து...' அதில் "அடிமை' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள்.
 காபி எங்கே?
 சுடுதண்ணி ரெடியாச்சா?
 பேண்ட் சட்டை எடு
 சாப்பாடு என்ன?
 பாய விரி
 இப்படியே... இப்படியே...
 ஆனாலும் சொல்கிறார்கள்
 குடும்பத்தலைவி என்று!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com