தமிழ்த் தாத்தா கண்ட அருளாளர்கள்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தொடர்பால் திருவாவடுதுறை ஆதீனத்தில் படித்த காலம் தொடங்கி தனது இறுதிக் காலம் வரை அருளாளர்கள்
தமிழ்த் தாத்தா கண்ட அருளாளர்கள்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தொடர்பால் திருவாவடுதுறை ஆதீனத்தில் படித்த காலம் தொடங்கி தனது இறுதிக் காலம் வரை அருளாளர்கள் பலரையும் கண்டு தரிசித்துள்ளார். உ.வே.சா.வின் உடல், உணர்வு, கல்வி முதலிய அனைத்திற்கும் திருவாவடுதுறை ஆதீனம் தாயகமாக விளங்கியுள்ளது.
 மேலும், தமிழகத்தில் சிறப்புப் பெற்றிருந்த தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், காஞ்சி காமகோடி மடம், கிளை மடங்கள் ஆகிய ஆதீனக் கர்த்தர்களையும், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், ஸ்ரீரமண மகரிஷி, பாம்பன் சுவாமிகள் முதலிய அருளாளர்களையும் உ.வே.சா., கண்டு தரிசித்துள்ளார். இவர்களின் தொடர்பால் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
 துறவி ஸ்ரீசுந்தரசுவாமிகள், திருவையாறு ஸப்த ஸ்தான ஸ்தலங்கள் ஏழிலும், திருமழபாடியிலும் திருப்பணிகள் செய்து ஒரே நாளில் குடமுழுக்கு நடத்தியவர். இவரை உ.வே.சா. கண்டு தரிசித்துள்ளார். ஸ்ரீஎஞ்ய சுப்பிரமணியஸர்மா எழுதிய "கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் திவ்விய சரித்திரம்' (1940) எனும் நூலுக்கு உ.வே.சா. முகவுரை வழங்கியுள்ளார்.
 அதில், ""சிவபக்திச் செல்வத்தைத் தமிழ்நாட்டில் நன்றாகப் பரவச் செய்து பெரும் புகழுடன் விளங்கிய புண்ணிய சீலர்கள் பலர். அத்தகைய மகான்களுள் திருநெல்வேலியைச் சார்ந்த கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் ஒருவர். நான் திருவாவடுதுறை மடத்தில் படித்து வந்த காலத்தில் அங்கே இவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இவர்களுடைய தோற்றப் பொலிவையும் இன்னுரைகளையும் கண்டும் கேட்டும் மிகவும் இன்புற்றேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 1915 ஜூலை 10ஆம் தேதி ரமணாசிரமத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்ள உ.வே.சா. திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார். ஸ்ரீரமண மகரிஷியைத் தரிசித்த உ.வே.சா., ""நான் ஏட்டுச் சுவடிகளோடும் தமிழோடுந்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவற்றைப் பதிப்பிப்பது ஒன்றுதான் எனக்குத் தெரியும், என்றாலும் எனக்குப் போதிய மனச்சாந்தி இல்லை. கிருபை பண்ண வேண்டும்'' என்று வேண்டினார்.
 ஸ்ரீரமண பகவான், ""நீங்கள் செய்வது உலகுக்கு உபகாரமான காரியம். நீங்கள் சொந்தத்திற்கு எதையும் செய்யவில்லையே!
 பிறருக்குப் பயன்படும் காரியங்களைச் செய்வதில் தவறில்லை. அதுவே சிறந்த யோகம். உங்களது அரிய தொண்டால் எத்தனையோ பேர் தமிழ் அறிவு பெறுவார்கள். இதுவும் ஒருவகைத் துறவுதான்'' என்று கூறி ஆசீர்வாதம் செய்துள்ளார்.
 பாரத்வாஜி முகவைக் கண்ணமுருகனார் இயற்றிய "ஸ்ரீரமண சந்நிதிமுறை' (1939) எனும் நூலுக்கு உ.வே.சா., சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார். இதில் திருவண்ணாமலை மகான் ஸ்ரீரமண மகரிஷியை தரிசனம் செய்வோர் சூரியனைக் கண்ட பனி போல அவர்களது துயரம் நீங்கி வாழ்வர் என்று கூறியுள்ளார்.
 "அருண்மலி யருணை வாழ்தரு ரமணா
 னந்தமா முனிவர னகஞ்சார்
 இருண்மலி துயரம் போக்கிடுங் கதிரோ
 னிணையடிக் கன்புமீ தூர்ந்து...'
 இராயப்பேட்டை ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் பதினேழாம் ஆண்டு நிறைவு விழா 1922 மார்ச் 17,18,19 ஆகிய தேதிகளில் இராயப்பேட்டை மோபிரீஸ் இராஜவீதியில் உள்ள குகாநந்த நிலையத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழா அக்கிராசனராக உ.வே.சா. இருந்துள்ளார். இந்நிகழ்வில் மகாதேவ முதலியார் "வள்ளி நாயகியார் திருமண நுட்பம்' எனும் தலைப்பிலும் கா.ஆலாலசுந்தரம் பிள்ளை "சைவர் கடமை' எனும் தலைப்பிலும் உரையாற்றியுள்ளனர்.
 மூன்றாம் நாள் விழா அக்கிராசனராக அத்தியாச்சிரம ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் தலைமையில் க.சுப்பிரமணிய செட்டியார் சுப்பிரமணியம்' எனும் பொருளிலும் கே.சுப்பிரமணிய பிள்ளை "சித்தாந்த வரலாறு' எனும் பொருளிலும் உரையாற்றியுள்ளனர். இந்நிகழ்வில் உ.வே.சா., பாம்பன் சுவாமிகளைத் தரிசித்து உரையாடியுள்ளார்.
 மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24ஆவது ஆண்டு விழா 8.6.1925 தேதி ஸர்.சி.பி. இராமசாமி ஐயர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் டி.ஸி.சீநிவாசையங்கார் ஐயரவர்களுக்குப் பொற்கிழியை வழங்கினார். காஞ்சி காமகோடி பீடத்து ஸ்ரீமத் சங்கராசார்ய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிச் சிறப்பித்தார். மேலும் உ.வே,சா.வுக்கு "தாக்ஷிணாத்ய கலாநிதி' எனும் பட்டத்தை வழங்கினார்கள்.
 சென்னை பழைய வண்ணையம்பதி கொருக்குப்பேட்டையில் எழுந்தருளிய ஸ்ரீமத் அவதூத் சிதம்பரம் சுவாமிகளின் 83ஆவது குருபூஜை விழா 1937 அக்டோபர் 22, 23, 24 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இவ்விழா கடைசி நாளில் உ.வே.சா.,
 கலந்துகொண்டு இலவசப் பாடசாலை திறந்து வைத்ததோடு, "மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது' எனும் நூல் குறித்து உரையாற்றியுள்ளார்.
 பி.கோதண்டராமையர் எழுதிய "ஸ்ரீஅரவிந்தரும் அவரது யோகமும்' (1939) எனும் நூலுக்கு உ.வே.சா. மதிப்புரை வழங்கியுள்ளார். இதில், "நம் நாட்டில் எந்தக் காலத்தும் மஹான்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். பரம்பொருளின் உண்மையை உணர்ந்து முத்தியை அடையும் சாதனங்களை உயிர்கள் மேற்கொள்ளவேண்டுமென்னும் கருணையினால் அவ்வப்போது பல பெரியோர்கள் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தியும் பலருக்கு உபதேசம் செய்து திருவருட்பேறடையச் செய்தும் வருகிறார்கள். அத்தகைய பெரியார்களுடைய சரித்திரம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும் நம்முடைய தலைமையான கடமை இன்னதென்பதை அறிந்துகொள்வதற்கும் தூண்டுகோலாக உதவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 - கோதனம் உத்திராடம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com