படைத்தோன் பண்பிலான்!

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் ஒருசேர அமைகின்றன. நல்ல செயல்கள் நடக்கும்போது இன்பமும், விரும்பத்தகாத செயல்கள் நடக்கும்போது துன்பமும் ஏற்படுகிறது
படைத்தோன் பண்பிலான்!

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் ஒருசேர அமைகின்றன. நல்ல செயல்கள் நடக்கும்போது இன்பமும், விரும்பத்தகாத செயல்கள் நடக்கும்போது துன்பமும் ஏற்படுகிறது. நாம் அதை இனியனவாகக் காணுதல் வேண்டும் என்பதைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம்.
 ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
 ஈர்ந் தண்முழவின் பாணி ததும்ப,
 புணர்ந்தோர் பூஅணி அணிய, பிரிந்தோர்
 பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
 படைத்தோன் மன்ற, அப்பண்பிலான்!
 இன்னாது அம்ம, இவ்உலகம்
 இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே (புறநா.194)
 ஒரு வீட்டில் இறப்பு நேர்ந்ததால் அங்கு சாக்காட்டுப் பறை ஒலிக்கின்றது; மற்றொரு வீட்டில் திருமணத்திற்காகக் கொட்டும் முழவின் ஓசை கேட்கின்றது. கணவரோடு இல்லறத்தில் சேர்ந்து வாழும் பெண்கள் பூக்களை அணிந்து மகிழ்ந்திருக்கின்றனர்; கணவரைப் பிரிந்த பெண்கள் கண்களில் நீர் சொரியக் கலங்குகின்றனர். இவ்வாறு நம்மைப் படைத்த பண்பில்லாதவனாகிய பிரமன் இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றாகப் படைத்து விட்டான். இதுவே, இவ்வுலகத்தின் இயற்கையாகும். உலகத்தின் தன்மையறிந்தவர் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இனிமையைத் தரும் நல்ல செயல்களை அறிந்து செய்ய வேண்டும்.
 வாழ்க்கையின் மீது வெறுப்புற்று வாழ்வை முடித்துக்கொள்ள நினைப்பவர்கள் மேற்கண்ட கருத்துகளை உணர்ந்து செயல்பட வேண்டும். நிலையாமையுடைய இவ்வுலகில், இன்பம்-துன்பம் இரண்டும் மாறி மாறி நிகழ்வன என்பதை உணர்ந்து, வாழ்கின்ற காலம் வரை துன்பத்தைக் கண்டு கலங்காமல் இனியவற்றைக் கண்டு மகிழ்வதற்குரிய செயல்களைச் செய்து வாழவேண்டும்.
 - முனைவர் கி .இராம்கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com