பொய்யா மொழியைப் போற்றும் இரங்கேச வெண்பா!

தமிழ்ப் புலவர் பலரும் அற நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்துத் தமது பாக்களில் பயன்படுத்துதலே பெருவழக்கு.  
பொய்யா மொழியைப் போற்றும் இரங்கேச வெண்பா!


தமிழ்ப் புலவர் பலரும் அற நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்துத் தமது பாக்களில் பயன்படுத்துதலே பெருவழக்கு.  அவ்வாறு பயன்படுத்துவோர், அறநூலில் சொன்ன மேற்கோளை அப்படியே கையாள்வதும், அதனைப் பல அடிகளில் தமது நூல்களில் விரித்துக் கூறுவதும் உண்டு. அதில் திருக்குறள் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. 

பிறசை சாந்தக் கவிராயர் எனும் புலவரால் இயற்றப்பட்டது, "இரங்கேச வெண்பா என்கிற நீதி சூடாமணி' என்கிற நூல். இது 1883-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலிருந்து  133 குறட்பாக்களைத் தேர்தெடுத்து, ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப ஒரு நீதிக் கதையை  முதலில் கூறி,  அதற்குப் பிறகு அந்தத் திருக்குறளையும் முழுமையாகத் தரும் வகையில் அமைந்துள்ளது.

அரங்கத்தில் (ஸ்ரீரங்கம்) இருக்கும் அரங்கேசனை விளித்துப் பாடுவதாக  அமைந்துள்ளதால், இது "இரங்கேச வெண்பா' எனப்பட்டது. 

பாயிரத்தின் முதல் பாடலில் ஓங்கு புகழ் வள்ளுவர் ஓதிய மூத்த குறளை அரங்கனை வணங்கிச் சொல்வதாகவும், இரண்டாவது பாடலில் அதிகாரம்தோறும் ஒரு குறளைக் கதை மூலம் சொல்லி விளக்கியிருப்பதாவும் ஆசிரியர் சொல்கிறார். 

சீர்கொண்ட காவிரிசூழ் தென்னரங்கத் தெம்பிரான்
பார்கொண்ட தாளைப்பரவியே-வேர்கொண்டே
யோங்குபுகழ் வள்ளுவனா ரோதுகுறண் மூதுறையாப்
பாங்குபெறச் சொல்வேன் பரிந்து        (பா.1)

சொற்றவதிகாரந் தோறுமொரு குறளில்
உற்றபொருளுக்கு தாரணமா-முற்றுகதை
யானீலவண்ண ரடிபரவலாலிந்நூல்
மானீதி சூடாமணி         (பா.2)

சொன்ன கம்பத் தேமடங்கல் தோன்றுதலா லன்பருளத்
தின்னமுதமாகு மிரங்கேசா-மன்னும்
அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு         (க. வா.1)

கெண்டலுறை யூர்க்கச்சிக் கோநகரிற் செய்குணத்தால்
எண்டிசையும் போற்று மிரங்கேசா - மண்டிக்
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே
யெடுப்பதூஉ எல்லா மழை.      (வா.சி.2)

மன்னன்மக முங்காதி மைந்தன் தனையடைந்தோன்
இன்னுயிருங் காத்தா னிரங்கேசா - சொன்னால்
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும்வைப்புக் கோர் வித்து. (3)

 "அகர முதல் உயிர் பன்னிரண்டும் வடிவு வேறுபட்டிருந்தும், அகரம் நாத மாத்திரையாய் எழுத்துகளோடெல்லாம் கலந்து வருமென்றதுபோலக் கடவுள் எங்கும் நிறைந்திருப்பார். இரணியன் இத்தூணில் இருப்பானோ என வினவித் தூணைப் பிளக்க, அதிலிருந்து நரசிம்ம வடிவினனாய் எழுந்தருளினார் என்பதையும் அறிக' என இரணியன் கதை வழியே முதல் குறளை விளக்கியுள்ளார். விருந்தோம்பல் பற்றிய பாடலில்,

தேசுறுபெருமாறன் றெளித்தமுளையமுதிட்
டீசனுடன் போந்தானிரங்கேசா-பேசுங்கால்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்துவானத்தவர்க்கு 
என்கிறார். "பெரும் செல்வந்தரான இளையான்குடிமாற நாயனார், அவரிடத்து வரும் சிவனடியாருக்கு இல்லையென்னாது அமுது செய்வித்துவந்த காலை, இறைவனின் அருள் நோக்கால் அவருக்கு வறுமை வந்துற்றது. 

அந்நிலையில், மாறுவேடத்தில் நள்ளிரவில் வந்த சிவபெருமானுக்கு அன்று வயலில் விதைத்த நெல் விதைகளைக் கொணர்ந்து அமுது படைத்தார். அதைப் போன்று வந்த விருந்தினர்களுக்கெல்லாம் அமுது படைத்து அனுப்பி, வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவர் விண்ணுலகத்தார் விரும்பி எதிர்கொள்ளத்தக்க விருந்தினன் ஆவான்' என்பதை இளையான்குடி மாறநாயனார் கதையைச் சொல்லி விளக்கியுள்ளார்.

பிறசை சாந்தக் கவிராயர், இவ்வாறு ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒரு திருக்குறளைக் கூறி அதற்குப் பொருத்தமான புராண, இதிகாச, நீதிக் கதைகளைச் சொல்லி விளக்கியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com