இந்த வாரம் கலாரசிகன்(28.06.2020)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிஸா காலத்தில் நடத்தப்பட்ட சித்திரவதைகளும்,  மத்திய அரசின்  நேரடி உத்தரவின்பேரில்  நடந்த விதிமுறை மீறல்களும் ஜனநாயக விரோதமானவை  என்பதில்  யாருக்கும் மாற்றுக்கருத்து இருக
இந்த வாரம் கலாரசிகன்(28.06.2020)


ஆண்டுதோறும் எனது பிறந்த நாளில் இரண்டு நினைவுகள் வரும்.  
கவியரசு கண்ணதாசன் பிறந்த ஜூன் 24-இல் நானும் பிறந்ததால் அவரது நினைவு. அடுத்த நாள், 1975-இல்  இந்தியாவில்  அவசர நிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் என்பதால் இந்திரா காந்தி அம்மை
யாரின் நினைவு எழும்.

"துக்ளக்' வார இதழில் பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் "விசிட்டர்' என்கிற புலனாய்வுப் பத்திரிகையைத் தொடங்கியபோது, அது ஒரு முன்னோடி முயற்சி. நான் "சாவி' குழுமத்தில் உதவி ஆசிரியராக  நுழையும்போது,  "விசிட்டர்' அனந்த் அதிலிருந்து வெளிவந்த "விசிட்டர் லென்ஸ்' என்கிற இதழின் ஆசிரியராக இருந்தார். அவரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் "மிஸா கொடுமை'. 

அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு  45 ஆண்டுகள் கடந்துவிட்டன.  இரா.
செழியன் எழுதிய "ஷா கமிஷன்' விசாரணை உள்பட, அவசர நிலை காலத்து சம்பவங்கள் குறித்துப் பலர் எழுதியிருக்கும் ஆங்கிலப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதன் பின்னணியில் விசிட்டர் அனந்த் எழுதிய "மிஸா கொடுமை' புத்தகத்தைப் படித்தபோது,  புதிதாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் எழுதப்பட்டிருக்கும் விதத்தால் வேறுபடுகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிஸா காலத்தில் நடத்தப்பட்ட சித்திரவதைகளும்,  மத்திய அரசின்  நேரடி உத்தரவின்பேரில்  நடந்த விதிமுறை மீறல்களும் ஜனநாயக விரோதமானவை  என்பதில்  யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டதும், எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டதும் நியாயப்படுத்த முடியாதவை.  விசிட்டர் அனந்த் அவற்றையெல்லாம் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். 

கடந்த  45 ஆண்டுகளில், இந்திரா காந்திக்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளில் பதவி வகித்தவர்கள் அடக்கு முறையிலும், பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதிலும் அவருக்குச் சளைத்தவர்களல்லர் - புத்தகத்தைப் படித்து முடித்தபோது எனக்குத் தோன்றியது.

புதுக்கோட்டையில் காந்தி ஜயந்தியை வெகு விமரிசையாகக்  கொண்டாடு
கிறார்கள். சென்ற ஆண்டு காந்தி ஜயந்தி விழாவில் கலந்துகொள்ள புதுக்கோட்டை சென்றிருந்தபோது, பொன்னமராவதி "அன்னை மெடிக்கல்ஸ்' 
அதிபர் அரு.வே.மாணிக்கவேலு என்னை சந்திக்க வந்திருந்தார். 

"இந்தப் புத்தகம் உங்களிடம்தான் இருக்க வேண்டும்' என்று கூறி, 1969-இல் அழகப்பா கல்லூரி வெளியிட்ட "தமிழ்க் கடல்' ராய.சொ.வின்  "காந்திக் கவிதை' என்ற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பும்போது அதைப் படித்துவிட்டு,  
மறுவாசிப்புக்காக  எடுத்து வைத்திருந்தேன்.  தமிழ்க் கடலில் மீண்டும் முத்துக்குளிக்க உதவிய பொது முடக்கத்துக்கு நன்றி.

ராய.சொக்கலிங்கம் என்கிற ராய.சொ. தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். தமிழறிஞர், கவிஞர், சமய அறிஞர், எழுத்தாளர், சமூகச் சீர்திருத்தக்காரர், காந்தியவாதி என்கிற பன்முகத்தன்மை கொண்ட "ராய.சொ.' தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 1917-இல் செட்டிநாட்டுப் பகுதியில் இவர் தொடங்கிய  இந்து மதாபிமான சங்கமும், விவேகானந்தர் பதிப்பகமும் விடுதலை வேள்விக்குத் தூண்டுகோலாக அமைந்தன.

1919 நவம்பர் 9-ஆம் நாள், இந்து மதாபிமான சங்கத்துக்கு  உரையாற்ற வந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.  பாரதியாரின் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட ஐந்து புகைப்படங்களில்  ஒன்று ராய.சொ.வுடனும், நண்பர்களுடனும்  காரைக்குடியில் எடுத்துக்கொண்டது என்பது வரலாற்றுப் பதிவு. இச்சங்கத்தைப் பற்றி பாரதியார் ஏழு விருத்தங்கள் எழுதியிருக்கிறார்.
அண்ணல் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட ராய.சொ. விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்றவர். 1934-ஆம் ஆண்டில்  காந்தியடிகள் 
இவரது இல்லத்துக்கு வருகை தந்து உணவருந்தியிருக்கிறார் எனும்போது, 
இவரது ஆளுமை எத்தகையது என்பதை உணரலாம். 

 ""காந்தியடிகளை ஒத்தவர் உலகில் எவரும் இலர் என்பது என் கருத்து. காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் இருந்தமைக்காக நான் பெருமைப்படுபவன். அப்பெரியார் என் குடிலுக்கு எழுந்தருளினார் என்பதில் கண்ணபிரானை வரவேற்ற விதுரனைப் போல் பெருமகிழ்வு பூத்தவன் நான்'' என்று கூறும் "தமிழ்க் கடல்' ராய.சொ., திருக்குற்றாலத்தில் தங்கியிருந்தபோது, காந்தியடிகள் மீது "பிள்ளைத் தமிழ்' பாடியவர். வேலூர் சிறையில் 1932-ஆம் ஆண்டு இருந்தபோது, காந்தியடிகள் தாலாட்டும், தீண்டாமை என்கிற பதிகமும் இயற்றியவர். 

""நான் சிறை இருந்த ஓராண்டில் 629-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய ஆறு திங்கள்கட்கு வணக்கம் செலுத்துகின்றேன். இந்த அரிய வாய்ப்பு, சிறையிராவிட்டால் கிட்டுவது அருமை'' என்று குறிப்பிட்டுப் பெருமிதமடைகிறார். "காந்திக் கவிதை' என்கிற இந்தத் தொகுப்பில்  சிறையில் பாடிய நூறு பாடல்கள் கொண்ட காந்தி அந்தாதி,  நாற்பது பாடல்கள் கொண்ட காந்தி நான்மணிமாலை என்று அவர் இயற்றிய பல சிற்றிலக்கியங்கள்  இடம்பெற்றுள்ளன. 

""காந்திக் கவிதை என்னும் இப்படைப்பு நூல் செய்யுள் வடிவில் தோன்றிய பெறலரும் வரலாற்று  இலக்கியம். வருங்காலத்தார்க்கு ஓராயிரம் உண்மைக் குறிப்புகளைக் காத்து வைத்திருக்கும் தமிழ்ப் பேழை'' என்று குறிப்பிடுகிறார் அணிந்துரை எழுதியிருக்கும்  தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம். ""காந்திப் பொருளும், தமிழ்க் கடலார் புலமையும் இரண்டறக் கலந்து பிறந்த  இக்காந்திக் கவிதை இந்திய மொழிகளிலெல்லாம்  மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது என் விழைவு'' என்கிற அவரது கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

ஒரு முறைக்கு நூறு முறை படித்தாலும் சலிக்காது அண்ணலின் பெருமையும், "தமிழ்க் கடல்' ராய.சொ.வின் புலமையும்!

"வாரம் தோறும் புதுக்கவிதை மட்டுமே தருகிறீர்களே, மரபுக் கவிதையை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?' என்கிற வாசக அன்பர்களுக்காக...
"காந்திக் கவிதை' புத்தகத்தில்  இடம்பெறுகிறது "காந்தியும் வள்ளுவரும்' என்கிற கவிதை. 1948-இல் காந்தியடிகள் மறைந்தபோது 125 குறட்பாக்களை எடுத்து அவற்றைப் பிற்பகுதியாக்கி, அவற்றுக்குப் பொருத்தமான வினாவை எழுப்பி, முன்னிரண்டு அடியும், தனிச்சீரும் அமைத்து, நேரிசை வெண்பாவாக "தமிழ்க் கடல்' ராய.சொ. வழங்கியிருக்கும் கவிதைகளில் ஒன்று இது.
இந்தியர்க்கு வாழ்வளித்த எங்காந்தி சீர்மறந்த
அந்தகற்குச் சோறுண்டோ? அந்தணரே!- செந்தமிழா!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லைச்
செய்ந்நன்றி கொன்ற மகற்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com