நாயக்க மன்னர்களை வழிநடத்திய அமைச்சர்!

வாழும் மக்களுக்கு இறைச் சிந்தனையுடன் இணைந்த வாழ்வியல் பண்பாட்டையும், தான-தர்மங்களையும் உணர்த்தும் வண்ணம் வார்த்தைகளாக மட்டுமல்லாமல், கருத்துமிக்க கலை வடிவ கற்றளிப் படிமங்களாகவும், காணும் கண்களுக்கு வி
ஐயன் கோவிந்த தீட்சிதர் - மனைவி நாகாம்பா பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்.
ஐயன் கோவிந்த தீட்சிதர் - மனைவி நாகாம்பா பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்.


தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் பகுதியைச் சிறப்பாக  ஆண்ட நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கர் (1572 -1600) அவருடைய மகன் ரகுநாத நாயக்கர் (1600- 1634 வரை) மூவரும்   தஞ்சையை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தனர். இம்மூவருக்கும் முதலமைச்சராக விளங்கியவர்  கோவிந்த தீட்சிதர். இவர், இம்மூன்று தலைமுறை நாயக்க மன்னர்களையும் வழிநடத்திய பெருமைக்குரியவர்.

சோழர்களுக்குப் பின் சோழ மண்டலத்தை நல்லாட்சி புரிந்த நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகிய மூன்று மன்னர்களுக்கும் மதியூக அமைச்சராக, அறிவுசார்ந்த  ஆசிரியராக, பெரும் புலவராகத்   திகழ்ந்தவர் "வாஜபேயாஜி' என சிறப்புப் பெயர் பெற்ற, வேத விற்பன்னராகக் திகழ்ந்த ஐயன் கோவிந்த தீட்சிதர்.

ரிக்வேத ஆச்வலாயனப் பிரிவைச் சேர்ந்த கர்நாடக அந்தணர் குலத்தில் பிறந்தவரான இவரின் மனைவி பெயர் நாகாம்பா. இவர்களுக்கு எட்டு மகன்களும், ஒரு மகளும் இருந்ததாக ஆய்வாளர் சிலர் கூறுவர்.

விஜயநகரத்தை அரசாண்ட   மாமன்னர் அச்சுதராயர் தன் மனைவியின் தங்கையான மூர்த்தியம்மாளை கோவிந்த தீட்சிதரின் அறிவுரையின்படி திருவண்ணாமலை அருகே  உள்ள "நெடுங்குன்றம்' கிராமத்தில் வாழ்ந்துவந்த செவ்வப்ப நாயக்கருக்கு மணம் செய்வித்து, அவருக்குச் சீதனமாக தஞ்சை அரசையும் நல்கினார் என்பதை "ஆந்திர ராஜீலு சரித்திரமு' என்ற நூல் தெரிவிக்கின்றது.

செவ்வப்ப நாயக்கர் கி.பி.1532-ஆம் ஆண்டில்  தஞ்சைக்கு மன்னராக முடிசூட்டிக் கொண்டதிலிருந்து நாயக்க மன்னரின் அமைச்சரவையில்  முதலமைச்சராக கோவிந்த தீட்சிதர் பணிபுரியத் தொடங்கினார். இம் மாமேதையின் சிறப்புமிக்க  சமுதாய மற்றும் ஆன்மிகப்பணி  சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை மண்ணுக்குக் கிடைத்தது. 

அச்சுதப்ப  நாயக்கரின் புதல்வரான ரகுநாத நாயக்கரை குழந்தையிலிருந்தே வளர்த்து சிறந்த வீரராக, இசை வல்லுநராக, பெரும் புலவராகச் செய்த பெருமை கோவிந்த தீட்சிதரையே சாரும். மாமன்னர் ரகுநாத நாயக்கர் போர்க்களம் சென்ற போதெல்லாம் அரண்மனை நடவடிக்கைகளைக் கவனித்ததுடன், போர் முகாம்களுடன் நாள்தோறும் தொடர்பு கொண்டு  மாமன்னரை வழி நடத்தியவர் இவர் என்று ரகுநாத நாயக்கர்  காலத்து இலக்கியங்கள் இவரைப் புகழ்கின்றன.

கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரம் அருகிலுள்ள "கோவிந்தகுடி' என்னும் ஊரில்  தீட்சிதர் இருந்தபோது, கோயில் ஒன்று எடுப்பித்தார். "குடி' என்பது தெலுங்கில் கோயிலைக் குறிக்கும் சொல்லாகும். மன்னர் செவ்வப்ப நாயக்கர் காலம் வரை "சிங்கராயன் பாளையம்' என்னும் பெயரில் திகழ்ந்த இவ்வூர், அச்சுதப்ப நாயக்கர் காலத்தில்தான் "கோவிந்தகுடி' எனப் பெயர் மாற்றமடைந்தது. இதுபோல் கோவிந்த புத்தூர், அய்யன் பேட்டை, அய்யன் கடைவீதி, அய்யன் குளம் என்று பல இடங்களும்,  பல ஊர்களும் கோவிந்த தீட்சிதர் பெயர் கொண்டு இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றன.

இவர், பல திருக்கோயில்களில் பலவிதமான திருப்பணிகளைச் செய்துள்ளார். அவற்றுள், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், சுவாமிமலை திருக்கோயில் (சுவாமிமலையில் உள்ள கட்டு மலையைக் கட்டுவித்தவர்), கும்பகோணம்  கும்பேஸ்வரர் திருக்கோயில், ராமசாமி திருக்கோயில் (இக்கோயில் முழுவதும் இவரின் தலைமையில் கட்டப்பட்டது), திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில், ராஜமன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் முதலியவை மிகவும் சிறப்புப் பெற்றதாகக்  கல்வெட்டுச் செய்திகள் வழி அறிய முடிகிறது.

இவருடைய புதல்வர்கள் எட்டு பேர்களில்  யக்ஞ நாராயண தீட்சிதர், வெங்கடேஸ்வரமகி ஆகிய இருவரும் பல அற்புத நூல்களை இயற்றியுள்ளனர். இதில்  யக்ஞ நாராயண தீட்சிதர் இயற்றிய "சாகித்ய ரத்னாகரம்' எனும் நூலில் அத்வைத வேதாந்தத்திலும், சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு முதலிய பன்மொழிகளிலும் வித்தகராய்த் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் என்றாலும், இவருக்கு  மிகவும் பிடித்தமான தமிழ் ஆர்வத்திற்கு ஒரு சான்றாக வடமொழியிலிருந்து "பஞ்சநதி புராணம்' எனும் வடமொழி நூலைத்  தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார் என்றும், இந்தத் தமிழ்ப்பணி கி.பி. 1605-இல் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவரது இல்லத்தில் எப்போதும் வேள்வியோடு வேத விற்பன்னர்களும் நிறைந்தே காணப்பட்டனர் என இலக்கியங்கள் புகழ்கின்றன. சிறந்ததொரு வேத விற்பன்னராக தீட்சிதர் திகழ்ந்ததால்தான் நாயக்க மன்னர்கள் சோடச மகாதானம், ஹேமகர்பம், துலாபாரம் போன்ற அறப்பணிகள் புரிந்தனர்.

கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் சோடச மகாதான மண்டபங்களை மாமன்னர் ரகுநாத நாயக்கர் கட்டுவதற்கு வழிவகுத்துத் தந்தவர் கோவிந்த தீட்சிதர். சோழ மண்டலத்தின் தலைநகரான "பழையாறை' நகரின் ஒரு பகுதி பிற்காலத்தில் "பட்டீஸ்வரம்' எனப் பெயர் மாற்றம் பெற்றது. இங்குள்ள தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் ஞானாம்பிகை சந்நிதியில் வேறு எங்கும் காணமுடியாத சிற்பங்களாக, சுமார் 5 அடி உயரம் உள்ள கோவிந்த தீட்சிதர், மனைவி நாகாம்பா அம்மையார் ஆகியோரின் திருவுருவக் கற்றளி சிலைகள் உள்ளன.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் மங்களாம்பிகை சந்நிதிக்கு 
எதிரிலும் (திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் சிவலிங்கம் மட்டும்) ஐயன் கோவிந்த தீட்சிதரின் பெயருடைய லிங்கமும், அருகில் மனைவியின் முழு உருவச் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றும் வழிபாடு நடைபெற்று வருகின்றது.

பிரதான அமைச்சராகத் திகழ்ந்த ஐயன் கோவிந்த தீட்சிதரின் பெயரில் ரகுநாத நாயக்கர் செப்புக் காசுகளை வெளியிட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

வாழும் மக்களுக்கு இறைச் சிந்தனையுடன் இணைந்த வாழ்வியல் பண்பாட்டையும், தான-தர்மங்களையும் உணர்த்தும் வண்ணம் வார்த்தைகளாக மட்டுமல்லாமல், கருத்துமிக்க கலை வடிவ கற்றளிப் படிமங்களாகவும், காணும் கண்களுக்கு விருந்து படைத்தவர், இறையருள் பெற்ற திருநிறைச் செல்வர் ஐயன் கோவிந்த தீட்சிதர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com