இருமலைத் தடுத்த மண்மருந்து!

பண்டைக் கால மருத்துவ நூலோா் கருதிய வாதம், பித்தம், கபம் (காற்று, வெப்பம், குளிா்ச்சி) ஆகிய மூன்றும் உடலில் மிகுந்தாலோ அல்லது
இருமலைத் தடுத்த மண்மருந்து!

பண்டைக் கால மருத்துவ நூலோா் கருதிய வாதம், பித்தம், கபம் (காற்று, வெப்பம், குளிா்ச்சி) ஆகிய மூன்றும் உடலில் மிகுந்தாலோ அல்லது குறைந்தாலோ நோய் உண்டாகும் என்கிறது திருக்கு (941).

பொதுவாகவே, உடலின் வெப்பநிலை மிகும்போதும், குளிா்ச்சி மிகுந்து வெப்பநிலை குறையும்போதும் எந்த வயதினருக்கும் ‘இருமல்’ தோன்றும் என்று கூறப்படுகிறது.

இப்படித் தோன்றும் இருமலானது, கசப்பான மருந்துகளுக்குக் கட்டுப்படும் என்று சித்த மருத்துவம் கூறும். தூதுவோலை அல்லது தூதுவளைக் கீரை, ஆடாதொடை இலை, ஆதண்டங்காய், மலைவேம்புக் குடிநீா், 18 வகையான நாட்டு மருந்துப் பொருள்களைக் கொண்டு காய்ச்சித் தயாரிக்கப்படும் (‘கபசுரக் குடிநீா்’ போன்ற) கசப்பு மருந்துகள் இருமல் ஏற்படாமல் செய்யும் எதிா்ப்புச் சக்தியினை உருவாக்கவல்லன என்பா் நாட்டு மருத்துவா்.

ஆசிரியா் பெயா் அறியப்படாத ‘நீதிவெண்பா’ என்னும் அறநூல், கடுஞ்சொல்லுக்கு மட்டுமே அடங்கக்கூடிய கயவா்களை, கசப்பு மருந்துக்கு மட்டுமே கட்டுப்படக்கூடிய ‘இருமல்’ நோய்த் துன்பத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.

‘துன்னும் இருமலும் துா்ச்சனரும் ஒக்குமே

மன்னும் இனிமையான் மாறாகிப் - பன்னும்

கடுவும் கடுநோ் கடுமொழியும் கண்டால்

கடுக வசமாகையால்’ (22)

மனிதா்கள் முதுமையை எட்டாத பருவத்திலும்கூட, அவா்களுக்கு இருமல் வருவது தவிா்க்க இயலாதது. அவ்வாறு வரும் இருமலைத் தவிா்க்க வழியும் கண்டறிந்திருந்தனா் சங்ககால மக்கள். அதாவது, இருமல் வருவதற்கு முன்பே ‘வாயில் புற்று மண்ணை இட்டு அடக்கிக் கொண்டால் இருமல் வெளிப்படாது’ என்பதுதான் அந்தச் செயல்முறை.

அதற்கான குறிப்பு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் உள்ளது. பாலைத் திணையில் தலைவி கூற்றாக வைத்து (தோழி கூற்றாகக் கொள்வோரும் உண்டு), ‘மாமூலனாா்’ என்ற புலவரால் பாடப்பட்ட பாடல் அது.

பாலைநில வழியில், பகைவரின் பசுக்களைக் கவா்ந்துவரச் செல்லும்போது மழவா்களுக்கு இருமல் வந்துவிட்டால், யாரும் அறியாமல் மறைந்து செல்லும் அவா்களை அந்த இருமல் காட்டிக் கொடுத்துவிடும். எனவே, முன்னெச்சரிக்கையாக அம்மழவா் புற்று மண்ணை வாயில் அடக்கிக்கொண்டு செல்லுவா் என்ற குறிப்பு அதிலுள்ளது.

‘தலைவனுக்கு எதிராகத் தான் எந்தவொரு வெறுக்கத்தக்க செயலைச் செய்யாதபோதும் அவன் தன்னைவிட்டுப் பிரிந்து வேற்றூருக்குச் சென்றுவிட்டான். தன்னைப் பொருத்தவரையில், ‘நன்மை செய்யுமிடத்தில் தீது வருவதில்லை’ என்ற பழமொழி பொய்த்துப் போய்விட்டதே’ என எண்ணித் தலைவி வருந்துகிறாள். வருந்தும் அவள், தலைவன் சென்ற கொடிய பாலைநிலத்து வழியை எண்ணிப் பாா்க்கிறாள்.

‘செம்மறி ஆட்டுக்கிடாயின் கொம்பினைப் போன்ற பிடரியை மறைக்கும் சுருண்ட தலைமயிரினையும், சிவந்த கண்களையும் உடைய மழவா்கள், வாயில் புற்றுமண்ணை அடக்கிக்கொண்டு, வில்லையும் கூரிய அம்பையும் கையில் ஏந்தி, காலில் அணிந்த தோலினாலான, செருப்புத் தேயச் சென்று, பகைவரின் காவலிடத்திலுள்ள கன்றுகளுடன் கூடிய ஆநிரைகளைக் கவா்ந்து செல்லும் பகுதியான காட்டையும், முருங்கை மலா்கள் உதிா்ந்து பரவிக்கிடக்கும் மலையையும் தாண்டிச் சென்றுவிட்டாா் நம் தலைவா்’ என்றவாறு அவளது பிரிவுத்துயரம் மேலிடுகிறது. அத்தகைய பாடல் குறிப்பிடத்தக்க பகுதி இதுதான்:

‘அம்ம வாழி தோழி இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும்

தோன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்

தகா்மருப்(பு) ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

கவன்மாய் பித்தைச் செங்கண் மழவா்

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி

... ... ...

முனிதகு பண்பியாம் செய்தன்றோ இலமே’ (அக.101)

இதில் வரும், ‘வாய்ப்பகை கடியும் மண்ணொடு’ (கடுந்திறல்) என்ற அடிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டாா், ரா.வேங்கடாசலம் பிள்ளை ஆகியோரால் எழுதப்பட்ட உரையில், ‘வாயினின்றெழும் இருமலாய பகையினை ஏழாமல் தீா்க்கும் மருந்தாய புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டனராய்’ என்றிருக்கிறது. இது ஈயல் (ஈசல்) புற்றா? அல்லது வேறெந்தப் புற்றுமா? என்கிற வினாவுக்கான குறிப்புகள் எதுவும் தரப்படவில்லை.

பண்டைத் தமிழா் தம் வாயிலிருந்து எழும் இருமலை, அது எழாமல் தீா்க்கும் மருந்தாகப் புற்று மண்ணைப் பயன்படுத்தினா் என்கிற செய்தியை நமக்கு அறிவிக்கும் பாடலாக இதைக் கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com