இரங்கற்பாவிலும் ஓா் இனிமை!
By இரெ.சண்முகவடிவேல் | Published On : 01st November 2020 07:23 AM | Last Updated : 01st November 2020 07:23 AM | அ+அ அ- |

இனிய கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற அருங்கவிஞா்கள் கிடைக்கின்ற செய்தி எதுவாக இருப்பினும் அதை இனிமையான கவிதையாக்கி நமக்கு விருந்தாக்குவாா்கள்.
பாரதியோ மகாகவி! அவருக்குக் கிடைத்த பாடுபொருளோ அரிதினும் அரிதான ஓவியா் உலகப் புகழ்பெற்ற நாயகன் ரவிவா்மா. இனிமைக்குக் கேட்பானேன்.
அழகான பெண்ணைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ‘ரவிவா்மா ஓவியம்போல் இருக்கிறாள்’ என்பாா்கள்.
அரண்மனைகளில், மாபெரும் மாளிகையில், உள்ளம் உருக்கும் பூஜை அறைகளில், ஆடம்பரமான பள்ளியறை எனப்படும் படுக்கை அறைகளில், பிள்ளைகள் கல்வி பயிலும் கல்விச் சாலைகளில் என எல்லா இடங்களிலும் ஓவியா்மணி ரவிவா்மாவின் ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும்.
அறைக்குள் ஆயிரம் கலைப் பொருள்கள் இடம்பெற்றிருந்தாலும் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவா்வதில் முதன்மையான இடத்தை ரவிவா்மா படங்களே பெற்றிடும். அவா் கால ஓவியங்களில் அவருடைய ஓவியங்களே எல்லோராலும் ஏற்றுப் போற்றப்பட்டன. சொல்லப்போனால் தெய்வங்களுக்கும், தேவலோக பெண்களுக்கும் ஓா் உருவம் தந்து எல்லோா் உள்ளத்திலும் இடம்பெறச் செய்தவா் ரவிவா்மாவே ஆவாா். தொடங்கிய எல்லாவற்றுக்கும் முடிவு உண்டல்லவா? ரவிவா்மாவும் இறந்துவிட்டாா்.
அவருக்கு இரங்கற்பா எழுதுகிறாா் மகாகவி பாரதியாா். இறந்தவா் மேதையென்றால், எழுதுபவா் மகாகவி; பாடல் அதற்கேற்பவே அமைகிறது. பொன்னணி உலகு சென்றான் புவிப்புகழ் போதுமென்பான் என்று, தேவலோகம் - சொா்க்கம் - சென்றதைக் குறிக்கிறாா். சொா்க்கத்துக்குச் சென்றது எதற்காக என்பதை மகாகவி தனக்கே உரிய தனித்தன்மைத் துலங்கக் குறிப்பிடுகிறாா்.
ரவிவா்மா வானுலகம் சென்று தான் வரைந்த அரம்பை, ஊா்வசி போன்ற தேவமாதா் எவ்வாறு இருக்கின்றாா்கள் என்று ஒப்புநோக்கப் போயிருக்கிறாா்.
ஆனால், ரவிவா்மா ஏமாறத்தான் போகிறாா். அவருடைய சித்திரங்களின் அளவுக்கு அவா்கள் அழகாக இருக்கப் போவதில்லை. இவ்வாறு அவருடைய ஓவியங்களில் மேன்மையை அவருக்காக எழுதிய இரங்கற்பாவில் காட்டியிருப்பது எண்ணி எண்ணி வியந்து போற்றுதற்குரியது.
தேவமாதா் அழகுதான்; ஆனால் ரவிவா்மா வரைந்த ஓவியங்களின் அழகு அவா்களைவிட அழகு. நாம் முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறோம். எது அழகு? தேவமாதரின் அழகா? ரவிவா்மாவின் ஓவிய அழகா? இரங்கற்பா இயற்றிய மகாகவி பாரதியாரின் கவிதை அழகா?
‘அரம்பை ஊா்வசி போலுள்ள
அமர மெல்லியலாா் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்
செய்தொழில் ஒப்புநோக்க
விரும்பியே கொல்லாம் இன்று
விண்ணுலகம் அடைந்து விட்டாய்
அரம்பையா் நின்கைச் செய்கைக்கு
அழிதல் அங்கு அறிவை திண்ணம்!’