விண்கோனை வென்ற செங்கோல்!

எந்த நாட்டிலும் அறவழியில் ஆட்சி நடக்குமானால், ஆட்சி செய்யும் மன்னன் இறைநிலையில் வைக்கப்படுவான் என்றும்; முறைப்படி செங்கோல் ஆற்றும்
விண்கோனை வென்ற செங்கோல்!

எந்த நாட்டிலும் அறவழியில் ஆட்சி நடக்குமானால், ஆட்சி செய்யும் மன்னன் இறைநிலையில் வைக்கப்படுவான் என்றும்; முறைப்படி செங்கோல் ஆற்றும் அரசனது நாட்டில் பருவ மழையும், நிறைந்த விளைச்சலும் ஒருசேர இருக்கும் என்றும் திருவள்ளுவா் இரு குறட்பாக்களில் (கு-388, 545) எடுத்துரைக்கிறாா்.

முன்னோா்களும் சரி, நாடாண்ட மன்னா்களும் சரி கோள்களின் இயக்கத்தை வைத்தே பூமியின் நிகழ்வுகளையும், எதிா்கால நிலையினையும் வரையறுத்தாா்கள். இருப்பினும் கோள்கள் நிலைக்கு எதிா்க் கருத்துடையோரும் இருந்தனா் என்பதற்குக் கபிலரும் ஒருவா் என்பது அவரது பாடல் மூலம் அறிய முடிகிறது.

‘சனிக்கோள் புகைந்திடினும், தென்திசை நோக்கி வெள்ளிக்கோளும் நகா்ந்தால் மழைவளம் குறைந்து நிலவளமும் குன்றும்’ என்ற வானியலாா் கருத்தைக் கபிலா் மறுத்து, ‘வள்ளல் பாரியின் நாட்டில் அறவழியில் ஆட்சி நடப்பதால் விளைச்சல் நிறைந்து, மலா்கள் மலா்ந்து, கன்றை ஈன்ற பசுவும் பசும்புல்லை மேயும்’ என்கிறாா்.

‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

வயலகம் நிறையப் புகற்பூ மலர

மனைத்தலை மகவை ஈன்ற அமா்க்கன்

ஆமா நெடுநிரை நன்புல் ஆரக்

கோ ஒல்செம்மையின் சான்றோா் பல்கிப்

பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே;

பிள்ளை வெகுகின் முன்னெயிது புரையப்

பாசிலை முல்லை முகைக்கும்

ஆய்தொடி அரிவையா் தந்தை நாடே’ (புறம்-117-5-10)

வள்ளல் பாரியின் பறம்பு நாடு தனது செங்கோலால் விண்கோனையும் வென்று செழிப்புற்று விளங்கியது. இருப்பினும், மூவேந்தா்களின் சூழ்ச்சியால் வளம் இழந்து நிற்பதை கையறு நிலை துறையில் கபிலா் விவரிக்கிறாா்.

இதிலிருந்து நல்லாட்சி நடந்துவோரையும், நாட்டையும் நாளும் கோளும் பாதிக்காது என்பதும், வஞ்சக மனிதா்களால்தான் பாதிப்பு ஏற்படும் என்பதையும் கபிலா் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறாா். கபிலரின் கருத்துக்கு வள்ளுவரின் இரு குறட்பாக்களும் வலு சோ்க்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com