அந்நலம் பெறுசீர்!

"அந்நலம் பெறுசீர்' என்ற தொடர், "மங்கையர்க்கரசி' என்னும் ஆலவாய்ப் பதிகப் பாடலில் (3-ஆம் திருமுறை) வரும் ஒரு சொற்றொடராகும்.
அந்நலம் பெறுசீர்!

"அந்நலம் பெறுசீர்' என்ற தொடர், "மங்கையர்க்கரசி' என்னும் ஆலவாய்ப் பதிகப் பாடலில் (3-ஆம் திருமுறை) வரும் ஒரு சொற்றொடராகும்.

பன்னலம் புணரும் பாண்டிமா தேவி 
குலச்சிறை யெனுமிவர் பணியும்
"அந்நலம் பெறுசீர்' ஆலவா யீசன் 
திருவடி யாங்கவை போற்றி (பா.11) 

என்கிற திருஞானசம்பந்தர் திருவாக்கு சிந்தனைக்குரியது. ஆலவாயீசன் "புகழ்ச்சியைக் கடந்த போகி' ஆவார். அப்படிப்பட்ட ஈசனுக்கு மங்கையர்க்கரசியாராலும், குலச்சிறை நாயனாராலும் பெருமையாம். எல்லா வளமும் நலமும் அமைந்த பெருஞ் செல்வர்களும், தங்களின் குடும்ப விழாக்களில் இன்னின்ன பிரமுகர்கள் வந்து கலந்து கொண்டதைப் பெருமையாகக் கருதுவதை நாமறிவோம்.

ஒருமுறை, 1963-ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்குக்கு மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு அப்போதிருந்த குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் வருவதாகக் கல்வெட்டு வைத்து, விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இதனால் சிலர் கிளர்ச்சி செய்து, தடைசெய்தனர். ஆனால், பேரறிஞர் ஒüவை துரைசாமிப் பிள்ளை மேற்கண்ட, "அந்நலம் பெறுசீர்' (3:120, பா.11) என்ற திருமுறை வாக்கையும், சுந்தரரின் திருக்கேதாரப் பதிகப் பாடலில் வருகின்ற "தளிசாலைகள் தவமாவது தம்மைப் பெறில் அன்றே' (7:78, பா.6) என்ற வாக்கையும் ஒப்பிட்டுக்காட்டி,  அவர் (குடியரசுத் தலைவர்) கலந்து கொள்வது சுவாமிக்கும் சிறப்பே என்று வரவேற்றார்.

மதுரைக் கோயிலில் வழிபாடு செய்வோர் குறைந்தகாலம், சமண சமயம் உச்சமான காலம். அக்காலத்தில் நின்றசீர் குன்றிவிட்டது. பாண்டியனும் சமண சமயம் சார்பாகி நின்று சென்றகாலப் பழுதிலாத் திறத்தைத் தவிர்த்து, நன்றியில் நெறியில் பயணித்ததை வரலாறு விளக்கம் செய்யும். சைவம் குன்றிய பாண்டிய நாட்டையும், சைவப் பண்பாட்டையும், அரசனை நன்னெறியில் நிறுத்திய பாங்கும் மங்கையர்க்கரசியார்க்கும், குலச்சிறை நாயனாருக்கும் உரியதாகும்.

செந்தமிழ்ப் பாண்டி தேசம் விளங்கத் தமிழாகரராம் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்து, குலச்சிறையும் சேர்ந்து இவ்விருவரால் பாண்டிய நாடு சைவ நெறியில் பயணித்ததற்குக் காரணம் திருஞான சம்பந்தரே ஆவார். 
முதன்முதல் அரசியின் ஏவலால் மதுரைக்கு எழுந்தருளிய திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வணங்கியபோது, சம்பந்தர் அருளிய பதிகம் இறைவனை முன்னிலைப்படுத்தாது, மங்கையர்க்கரசியை முன்னிலைப்படுத்திய பாடலிலேதான், அரசியின் நலமும், அமைச்சர் குலச்சிறை நலமும் விளக்கப்படும் செய்தி சைவப் பண்பாடாகும். 

முதலில் மங்கையர்க்கரசியின் நலமும் பண்பும் திருஞான சம்பந்தரால் சிந்திக்கப்படுவது "அந்நலம் பெறுசீர்' ஆகும். இருவரையும் பாட்டில் புகழ்வார். 

1. மங்கையர்க்கரசி பங்கயச் செல்வி நாள்தோறும் கோயில் சென்று, ஆலவாய் ஈசனை வழிபட்ட சீர் உடையவர். சிவப்பணி செய்த நலமுடையவர்.
2. சிவன் திருநீற்றை வளர்க்கும் பண்பினள். இவரால்தான் நமக்குத் திருநீற்றுப் பதிகம் கிட்டியது.
3. செந்தாமரையில் இருக்கும் இலக்குமி போற்ற நாள்தோறும் கோயில் வழிபாடு செய்த பண்பினள்.
4. சந்தனக் குழம்போடு திருநீறு கலந்து பூசி கணவர் அறியாமல் பத்திமை கொண்டவர் (என்பது சம்பந்தர் பதிவு).
5. மணிமுடிச் சோழன் மகளாய் அவதரித்த அரசி, பண்ணின்நேர் மொழியாள் கோயில் வழிபாட்டை பாங்கினால் பணிசெய்து பரவிய சீராகும்.


இந்த ஐந்தும் இறைவனுக்கு வாய்த்த "அந்நலம் வாய்ந்த சீர்' - மங்கையர்க்கரசியார் மூலம் அமைந்தது. இனி, குலச்சிறையாரின் "அந்நலம் வாய்ந்த சீர்' - திருஞானசம்பந்தரின் கருத்தைப் பார்ப்போம்:

1.வெற்றவே - வேறொடு பயனும் வேண்டாமலே அடியார் அடிமிசை வீழ்ந்து வணங்கும் பண்பினர் மந்திரி குலச்சிறையார்.
2.அடியார்கள் கூட்டமாய் வந்தாலும், தனியாக வந்தாலும் குணங்கொண்டு பணிந்து வணங்கி உதவும் குலச்சிறையார்.
3.நலமிலராக, நலமுடையராக யாராக இருந்தாலும் குலமிலராக, குலமுடையவராக எவர் இருந்தாலும் தவச் சீலராகக் கருதி வணங்குவது குலச்சிறையின் சீராகும்.
4.சிவத்தொண்டர்கள் திசை திசைதோறும் குலச்சிறைப் பண்பைப் போற்றிப் புகழ்ந்து வணங்கும் சிவத்தொண்டர் குலச்சிறையார். 

இவ்வாறு இருவருக்கும் இருக்கும் பண்புகளைப் பெற்றவர் சொக்கர்மீனாட்சி. இவர்கள் இருவரும் "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி' என்றும், குலச்சிறை என்றும் பதிவு செய்து திருஞானசம்பந்தர் பாடும் பதிகத்தில் "அந்நலம் பெறுசீர்' ஆலவாயீசனை அடையாளம் காட்டுவது சித்தாந்த சாத்திரங்கள் தோன்றுதற்குத் தோற்றுவாயாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com