தாமரை

"தாமரை' என்னும் சொல் தமிழிலக்கண இலக்கியங்களிலும், மருத்துவம், சோதிடம், யோகம், ஆன்மிகம்  முதலான பல்வேறு துறைகளிலும் பதிவாகியுள்ளன.
தாமரை


"தாமரை' என்னும் சொல் தமிழிலக்கண இலக்கியங்களிலும், மருத்துவம், சோதிடம், யோகம், ஆன்மிகம் முதலான பல்வேறு துறைகளிலும் பதிவாகியுள்ளன. இலக்கண அறிஞர்கள் தாமரை என்னும் சொல்லை, தா + மரை என்று பிரிப்பர். அதாவது, தாழ்ந்த நீர்நிலையில் வளர்வது தாமரையாகும். மேலும், அதன் இலை அடைசலாக மருவிக் கிடப்பதாலும் தாமரை எனப்பட்டது.
தொல்காப்பிய எழுத்ததிகாரம் "தாமரை' என்னும் சொல்லைப் பேரெண் என உணர்த்தி, இச்சொல் "ஏழ்' என்னும் எண்ணுப் பெயர்க்கு முன்வரின் இயல்பாக (புள்ளிமயங்கியல், 98) நிற்கும் எனக் குறித்துள்ளது.
குறுந்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல்,
"தாமரை புரையும் காமர் சேவடி' என்று குறிப்பிட்டு, முருகன் திருவடிக்குத் தாமரையை உவமையாகக் கூறியுள்ளது. திருக்கோவையார் தாமரையைத்
"திருவளர் தாமரை' என்றவாறு சுட்டியுள்ளது.
இளம்பூரணர் என்னும் உரையாசிரியர் "சிறப்புடையன பலவற்றுள் தாமரை உயர்ந்தது' என்பார். பேராசிரியர், தாமரையைச் சினைக்குச் சினை உவமையாயிற்று என்பார். தாமரையை வெண்தாமரை, செந்தாமரை, பொற்றாமரை, கருந்தாமரை என்று பிரிப்பர். இப்பிரிவில் கருந்தாமரையை இல்பொருள் உவமையணிக்குச் சான்று காட்டுவது புலவர்தம் வழக்கமாகும்.
தமிழ்ப் புலவர்கள் தாமரையைப் பொதுமொழி என்றும், ஓர் எண் என்றும், ஆகுபெயர் என்றும் குறிப்பிடுவர். அதோடு, கண், முகம், அங்கை, கால், அல்குல் முதலியவற்றுக்குத் தாமரைப் பூவை உவமை கொள்வர். கொங்கைக்குத் தாமரை அரும்பு உவமையாகும். தடாகத்திலுள்ள கொக்கிற்கு வெண்தாமரை அரும்பை
உவமையாகக் கூறுவர். சின்னஞ்சிறு குழந்தையைத் தாமரை மலருக்கு உவமையாகச் சொல்வது தமிழர் மரபாகும். ஞானிகள் உலகத்தோடு வாழ்தலுக்குச் சான்றாகத் தாமரை இலைமேல் உள்ள தண்ணீரைக் உவமையாகக் கூறுவர். தாழ்ந்த குடியிலிருந்து உயர்ந்த குடிப்பிறத்தலுக்குத் தாமரையின் பிறப்பு உவமையாம்.
"தண்டலையார் சதகம்' என்னும் நீதி இலக்கியத்தின் முதற்பாடல் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு உள்ளன்போடு சென்று வலம் வந்து தாமரைத் தண்டினால் திரியிட்டு, பசுநெய் ஊற்றி ஒரே ஒரு விளக்கேற்றி வழிபட்டால் பிறவி நோய் ஒழியும், வினைகள் நாசமாகும். அவர்கள் இறப்பு இன்றி, சீவன் முத்தர்களாய் வாழ்வர், கயிலாயம் அவர்களுக்குரிய உரிமை இடமாகும் எனக் குறித்துள்ளது. இதனை,
வரமளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
உள்புகுந்து வலமாய் வந்து,
ஒருவிளக்கு ஆகினும் பசுநெய்
தாமரைநூலில் ஒளிர வைத்தால்,
கருவிளங்கும்; பிறப்புஇல்லை; இப்புஇல்லை;
கயிலாயம் காணி ஆகும்;
திருவிளக்குஇட் டார்தமையே தெய்வம்நன்கு
அறியும்; வினைதீரும் அன்றே.
என்ற பாடல் உணர்த்துகின்றது. ஆதலால், தாமரைப் பூவின் தண்டினால் திரி தயார் செய்து விளக்கேற்றுவது மிகப்பெரிய புண்ணியச்
செயலாகும்.
கோரக்கநாதரின் சீடராகிய தவத்திரு சுவாத்மா ராமயோகீந்திரர் அருளிச் செய்துள்ள "ஹடயோகப் பிரதீபிகை' என்னும் நூல் ஆசனங்களைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளது. இந்நூல் நூற்றி இருபத்து நான்கு ஆசனங்களின் பெயர்களையும் அவற்றின் செயல்முறைகளையும், அவற்றால் உண்டாகும் நன்மைகளையும் விரிவாகக் கூறியுள்ளது. அவ்வாறு கூறப்பட்டுள்ள ஆசனங்களுள் பதினான்காவதாகக் கூறப்பட்ட ஆசனம் "பத்மாசனம்' என்னும் "தாமரை' வடிவிலான ஆசனமாகும்.
இவ்வாசனம் தாமரை மலர் போன்ற மலர்ச்சியான தோற்றத்தில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது என்பர். யோகிகளால் விரும்பிச் செய்யப்படும் ஆசனங்களுள் இதுவும் ஒன்றாகும். இவ்வாசனம் சர்வ வியாதியையும் நீக்கும்.
வரதுங்கராம பாண்டியர் அருளிய சிவகவசத்தின் முதற்பாடல் (பங்கயத் தவசின் மேவி) பத்மாசனத்தைக் குறிப்பிட்டுள்ளது கருதத்தக்கது. அதாவது, பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு சிவகவசத்தைப் படிக்க வேண்டுமாம். அவ்வாறு படித்தால் திடமான தேகம் அமையுமென்று அந்நூல் குறித்துள்ளது. தமிழரின் மருத்துவக் களஞ்சியமாக விளங்கும் "பதார்த்தகுண சிந்தாமணி' என்னும் தமிழ் மருத்துவ நூல் தாமரைப்பூவின் குணங்களை இரண்டு வெண்பாக்களால் (பா.646, 647) விளக்கியுள்ளது.
தாமரைப் பூவால் பலவிதமான வாந்தி, சுரம், தாகம் போகுமாம்; தாமரைப் பூவைக் கையில் எடுத்து ஒத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சி உண்டாகுமாம்; குறிப்பாக வெள்ளைத் தாமரைப் பூவால் ஈரல் வெப்பம், கொடிய மருந்தின் கொடுமை, காந்தல் நோய் சரியாகிவிடுமாம்.
பதினெண் சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய
"வைத்திய மூலிகை விரிவகராதி' (1927ஆம் பதிப்பு) என்னும் நூல் தாமரையை ஒரு புட்பம் என்றும், அவை ஆகாசத்தாமரை, கற்றாமரை, செந்தாமரை எனப் பலவகைப்படும் என்றும், தாமரைச்சத்துரு என்னும் ஒரு பாஷாணம் உண்டென்றும்;
தாமரைக் கொட்டையைத் தாமரை மணி என்றும் (பக்.148) குறித்துள்ளது. தாமரையில் ஓரிதழ் தாமரை உண்டென்றும், அது பல மருத்துவக் குணங்களை உடையது என்றும் (பக். 246) குறித்துள்ளது.
புரோகிதர்கள் எட்டிதழ் தாமரை வரைந்து கலசம் நாட்டுவர். தெய்வத்திற்கு முன் தாமரை விளக்கு எடுப்பர். தாமரை இலை திருமால் மேனிக்கு உவமையாம். தாமரைப்பூ சூரியன், சிவன், இலக்குமி, முருகன், கலைமகள், பிரமன், அருகன் ஆகிய கடவுளர்களுக்கு உரிய பூவாகும். தாமரை மலரில் வீற்றிருப்பவள் திருமகளாவார்; அத்திருமகளை நோக்கிய நோன்பே தாமரை நோன்பாகும். யோகிகள் ஆறு ஆதாரங்களும் தாமரை வடிவாக உள்ளதென்பர். சோதிடர்கள் நூறு தாமரை இதழை அடுக்கி ஊசியில் துளைக்கும் நேரத்தை ஒரு சிறிய காலம் என்பர்.
இவ்வாறு தாமரைப் பூவைப் பற்றி அரிய பல பதிவுகளை நம் முன்னோர்கள் ஆங்காங்கு பதிவு செய்துள்ளனர். அவற்றையெல்லாம் தேடித் தொகுத்து ஆராயின் நன்மை பலவாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com