எனப்படுவது...

"எனப்படுவது' - என்பது சிறப்பித்துச் சொல்லப்படுவது என்று பொருள்படும். ஒன்றின் வரையறையைத் திட்டவட்டமாகக் கூற இத்தொடர் எடுத்தாளப்படுகிறது.
எனப்படுவது...

"எனப்படுவது' - என்பது சிறப்பித்துச் சொல்லப்படுவது என்று பொருள்படும். ஒன்றின் வரையறையைத் திட்டவட்டமாகக் கூற இத்தொடர் எடுத்தாளப்படுகிறது. "எனப்படுவது' என்பது "ஊரெனப்படுவது உறையூர்' என்றாற்போல நின்றது என்பது பரிமேலழகர் விளக்கம்.

திருக்குறளில் "எனப்படுவது' என்ற சொல்லாட்சி 291, 324, 591, 801, 844 ஆகிய ஐந்து குறள்களில் இடம்பெற்றுள்ளது. 291-ஆவது குறள் வாய்மைக்கு இலக்கணம் கூறியுள்ளது. வாய்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்று கேட்டால், அது பிறர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதலாகும்.

பொதுவாக உள்ளதை உள்ளதாகவும் இல்லாததை இல்லாததாகவும் சொல்வதே வாய்மை என்கிறோம். இருப்பினும் பிறர்க்குத் தீங்கு பயப்பதாயின் அது வாய்மையாகாது. இதனால் நிகழ்ந்தது கூறுதலென்பது நீக்கப்பட்டது. தீங்கு பயவாதாயின் அது வாய்மையாகும். தீங்கு பயப்பதாயின் அது பொய்ம்மையாகும். இங்ஙனம் திருவள்ளுவர் வாய்மைக்குப் புது இலக்கணம் வகுத்துள்ளார்.

"நல்ல வழி' என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது எது என்றால், அது எந்த ஓர் உயிரையும் கொல்லா திருப்பதை வழக்கமாகக்கொண்டு வாழும் நெறியாகும். இதை, 324-ஆவது குறட்பாவில் குறிப்பிட்டுள்ளார். கொல்லாமையே அறங்கள் எல்லாவற்றிலும் சிறப்புடையது என்று வரையறை செய்துள்ளார். இன்னாத செயல்களுள் கொலை முதன்மையானது. எனவேதான் "இன்னா செய்யாமை' அதிகாரத்திற்குப்பின் இவ்வதிகாரத்தை வைத்தார். இக்குறளில் "யாரையும்' என உயர்திணையில் கூறவில்லை. "யாது ஒன்றும்' என அஃறிணையில் கூறிய நுட்பம் உணரத்தக்கது. எனவே, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமையே "நன்னெறி' என்பதை உணரவைத்தார்.

கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலால் மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ்ந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாள் டரசு (ஏலாதி-42)

கொல்லாமையால் வரும் பான்மை மேன்மையை இப்பாடல் உணர்த்துகிறது. "பழைமை' என்பதற்குத் திருவள்ளுவர் புதுமையான விளக்கமளித்துள்ளார். நட்பில் ஒருவர் ஏதேனும் பிழை செய்யின், அதனைப் பொறுத்துச் கொள்வதே பழைமை என்றார் (801). பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால், நண்பர் உரிமையால் செய்தவற்றை, இகழாமல் பொறுத்துக்கொண்டு தொடர்வதேயாகும்.

"பழைமையாவது காலம் சென்றதன்று. இப்பெற்றித்தாய நட்பு என்பது கூறப்பட்டது' என்ற பரிமேலழகர் விளக்கம் எண்ணத்தக்கது. நண்பர் உரிமையால் செய்வன:  செயல் செய்ய முற்படும்போது கேளாமல் செய்தல், கெடுவன செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், அடக்கம் அச்சமின்மை, சிதைத்தல், விலக்கல் முதலியனவாகும். எனவே இவற்றைப் பொறுத்து, நட்பைத் தொடர்வதே பழைமையாகும்.

பழைமை கடைப்பிடியார் கேண்மை பாரார்
கிழமை பிறிதொன்றும் கொள்ளார்

என்ற நீதிநெறி விளக்கப் பாடல் (பா:47) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. சிற்றறிவுடையோர், தம்மைப் பேரறிவுடையோராகத் தருக்கிக் கூறிக் கொள்வது "புல்லறிவாண்மை' எனப்படும். இதன் இயல்பை,

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு (844) 

என்பதில் உணர்த்தினார். புல்லறிவு எனப்படுவது எது என்றால், அது தாம் எல்லாம் அறிந்தவர் என்று எண்ணும் ஆணவமேயாகும். அறிவுடையாரை "ஒளியார்' என்றும், அறிவற்றவரை "வெளியார்' என்றும் திருவள்ளுவர் முறையே ஒண்மை, வெண்மை என்ற சொற்களால் குறிப்பிட்ட நுட்பம் உணரத்தக்கது. "சிறிய கேள்வியர் கழியவும் செருக்குடையோர்' என்ற திருவிளையாடல் புராணக்கூற்று இங்கு எண்ணத்தக்கது. "வெளியார் முன் வான்சுதை வண்ணம் கொளல்' (714) என்ற குறளும் இங்கு ஒப்பு நோக்கவுரியது.

அடுத்து, உடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர் யாரெனின் ஊக்கம் உடையவரே, ஊக்கமின்றிப் பலவற்றை உடையவராயினும் அவர் உடையவர் ஆகமாட்டார் (591).  ஊக்கமில்லாதவர் முன்பே பொருள்கள் பல பெற்றிருந்தாலும், அவற்றைத் காக்கும் வலிமை இலராதலால், உடையார் என்று சொல்லத்தக்கவர் அல்லர்.

இவ்வாறு திருவள்ளுவர் ஐந்து குறள்களில் "எனப்படுவது' என்ற சொல்லாட்சியை எடுத்தாண்டுள்ளார். அதன் வாயிலாக ஒவ்வொன்றின் வரையறையைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். திருவள்ளுவர் குறிப்பிட்ட வரையறையைப் போலவே கலித்தொகையிலும் "எனப்படுவது' என்ற சொற்றொடர் "பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் (133)' என்ற பாடலில் இடம்பெற்றுள்ளது. சோழன் நல்லுருத்திரன் கூறியுள்ள வரையறைகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

"செறிவெனப்படுவது நெகிழிசை இன்மை' (நூ:116); "தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே' (நூ:117) என்ற தண்டியலங்கார இலக்கணச் செய்திகளையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com