வரவேற்பிலும் வேறுபாடு!

வரவேற்பிலும் வேறுபாடு!

நம் வீடுகளில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு சுற்றத்தார்கள், நண்பர்கள்,  தெரிந்தவர்கள் என அனைவரையும் அழைத்து, அவர்கள் வரும்போது மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

நம் வீடுகளில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு சுற்றத்தார்கள், நண்பர்கள்,  தெரிந்தவர்கள் என அனைவரையும் அழைத்து, அவர்கள் வரும்போது மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அந்த வரவேற்பு அவரவர் தகுதிக்கேற்ப வேறுபாடு உள்ளதாக உள்ளது.

இந்த வேறுபாடு பண்டைய காலங்களில்கூட அதிலும் தேவர்களிடம்கூட இருந்துள்ளது என்பதைப் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

பிறவா யாக்கைப் பெரியோனான பிறைசூடிய பெருமான்,  மதிக்கொழுந்தை மணிமுடியில் அணிந்தவராகிய சிவபெருமானுக்குத் திருமணம் ஏற்பாடானது. திருமணக் காட்சியைக் காண தேவலோகமே திரண்டு வந்தது. அவர்களை சிவபெருமான் வரவேற்றார். அந்நிகழ்வில் மகாவிஷ்ணு வந்து வணங்கியபோது, அகமும், முகமும் மலர செவ்வாம்பல் பூப் போன்ற திருவாய் மலர்ந்து "வருக... வருக...' என்று வரவேற்றார்.

தாமரைப் பூவில் வாசம் செய்பவராகிய நான்முகன் வந்து வணங்கியபோது, ரத்தினக் கிரீடம் இழைத்த முடியை சற்று அசைத்து வரவேற்றார்.

தேவர்களுக்கு அரசனாகிய இந்திரன் வந்து வணங்கியபோது புன்முறுவலால் வரவேற்றார். தேவர்கள் அனைவரும் வந்து வணங்கியபோது, அவர்களைக் கண்ணாலேயே வரவேற்றார்.

இந்நிகழ்வை எல்லப்ப நாவலர் என்ற புலவர் தாம் இயற்றிய "அருணாசல புராணம்' பகுதி ஒன்றில் (பா.237) மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறார்.

குலவுமால் அணுகிப் போற்றக்
குமுதவாய் மலர்ந்தான்; கஞ்ச
மலரினான் வணங்கச் சற்றே
மணிமுடி அசைத்தான்; விண்ணோர்
தலைவனார் எதிர்நின்று ஏத்தத்
தனிநகை புரிந்தான்; தேவர்
பலரும் வந்துஇறைஞ்சி ஏத்த
அவர்க்கெல்லாம் பார்வை ஈந்தான்!

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி: இராமனின் திருமணத்திற்கு தசரதன் தன் பரிவாரங்களோடு மிதிலைக்கு வந்தான். அவன் வந்ததை அறிந்த சனகன் எதிர்கொண்டழைக்க தன் பரிவாரங்களோடு எதிர் சென்றான். பரிவாரங்கள் பின்னே வர தான் மட்டும் தேரைவிட்டு இறங்கி தசரதனை வரவேற்றான். 

தசரதன் தன் தேரில் ஏறும்படி கூறினான். ஏறி அமர்ந்ததும் தசரதன் அகமகிழ்ந்து தழுவி அவனின் சுற்றத்தாரை வரிசை முறைப்படி நலம் விசாரித்தான். இந்நிகழ்வை கம்பர் பாலகாண்டத்தில் (பா.995) மிக அழகாக நம் கண்முன் கொண்டு வருகிறார்.

தழுவிநின்று அவன்இருங் 
    கிளையையும் தமரையும்
வழுஇல் சிந்தனை யினான் 
    வரிசையின் அளவளாய்
எழுகமுந் துறஎனா இனிது
    வந்து எய்தினான்
உழுவைமுந்து அரிஅனான் 
    எவரினும் உயரினான்

கம்பர் ரத்தினச் சுருக்கமாக "வழுஇல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்' என்று ஒரேவரியில் கூறுகிறார். இக் காட்சிகளைக் காணும்போது,
நன்றாற் றலுள்ளுந் தவறுண் டவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை (469)
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்(528)
என்னும் குறள்கள் நினைவிற்கு வருகிறதல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com