ஈயார் இருந்தென்ன? போயென்ன?

உலகத்தில் உபயோகமற்றவை என்று ஒன்றுமில்லை. உபயோகமில்லாப் பொருள் ஒன்றுதான். அது அஃறிணையன்று, உயர்திணை. உலோபி ஒருவன்தான் யாருக்கும் பயனற்றவன்.
ஈயார் இருந்தென்ன? போயென்ன?

உலகத்தில் உபயோகமற்றவை என்று ஒன்றுமில்லை. உபயோகமில்லாப் பொருள் ஒன்றுதான். அது அஃறிணையன்று, உயர்திணை. உலோபி ஒருவன்தான் யாருக்கும் பயனற்றவன். தானும் அனுபவிப்பதில்லை, பிறர்க்கும் அனுபவிக்கத் தருவதில்லை. ஆதலால் தனக்கும் அவன் பயன்படாதவன்; பிறருக்கும் பயன்படாதவன். "ஈயாத மனிதனை ஏன் படைத்தாய்?' என்று இறைவனைப் பார்த்துக் கேட்கிறார் பட்டினத்தடிகள். 

ஓர் உலோபி செய்த தந்திரம் இங்கு அறியத்தக்கது. ஓர் ஊரில் உலோபி ஒருவன் இருந்தான். பசியால் களைத்து வாடிய பிச்சைக்காரன் ஒருவன் அந்த உலோபி வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்கிறான்.  

அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தராத அந்த உலோபி வெளியே வந்து, "கடவுள் ஏழைகளைத்தான் சோதிக்கிறார். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதோ தெரிகின்ற கடைக்குப் போய் ரொட்டி வாங்கி வந்து இருவரும் உண்டு பசியாறலாம் வா' என்று அவனை அழைத்துக்கொண்டு போய்க் கடைக்காரனைப் பார்த்து, "ஐயா, நல்ல ரொட்டி இருக்கிறதா?' என்று கேட்டான்.

கடைக்காரன், "முதல் தரமான ரொட்டி இருக்கிறது. வெண்ணெய் போல் மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்கும்' என்கிறான்.

"உவமானத்திலும் உவமேயம் உயர்ந்தது அல்லவா? அன்னக் குவியல் மலைபோல் இருந்தது என்றால், அன்னக் குவியலைவிட மலை பெரியது என்றுதானே பொருள். அதுபோல் ரொட்டி வெண்ணெய் போல் இருக்குமென்று இவன் சொல்வதிலிருந்து ரொட்டியைக் காட்டிலும் வெண்ணெய் உயர்ந்ததென்று தெரிகிறது. அதனால் நாம் வெண்ணெயை வாங்கிக் கொள்ளலாம் வா' என்று கூறி வெண்ணெய்க் கடைக்கு அந்தப் பிச்சைக்காரனை அழைத்துச் சென்றான் அந்த உலோபி.

"நல்ல வெண்ணெய் இருக்கிறதா?' என்றான். "கடைக்காரர், "ஐயா, புதுவெண்ணெய். பாருங்கள்... பனிக்கட்டியைப் போல் குளிர்ச்சியாக இருக்கிறது' என்றான்.

உலோபியோ, "இவன் சொல்வதிலிருந்து வெண்ணெயைவிடப் பனிக்கட்டி உயர்ந்ததென்று தெரிகிறது. அதனால்,  அந்தக் கடைக்குப் போகலாம் வா' என்று பிச்சைக்காரனை அந்தக் கடைக்கு அழைத்துப்போய் "பனிக்கட்டி (ஐஸ்) இருக்கிறதா?' என்றான்.

கடைக்காரரோ, "நல்ல பனிக்கட்டி இருக்கிறது. தண்ணீரைப் போல் நன்றாகத் தெளிந்திருக்கிறது' என்றான்.  உலோபி பிச்சைக்காரனைப் பார்த்து, "கேட்டாயா? இவன் சொல்வதிலிருந்து தண்ணீரே உயர்ந்தது என்று தெளிவாகத் தெரிகிறது. வீட்டுக்குப் போகலாம் வா' என்று கூறி, அவனை வீட்டுக்கு அழைத்து வந்து தண்ணீரைக் கொடுத்து, "நல்ல தண்ணீர் குடித்து பசியாறு' என்றான்.

"என்ன ஐயா இது... ஊரையெல்லாம் சுற்ற வைத்துவிட்டு இப்போது தண்ணீரைத் தருகிறீர்களே... இந்தத் தண்ணீர் குளத்தில் கிடைக்காதா?' என்று சலித்துக் கொண்டான் பிச்சைக்காரன். 

உலோபியோ, "கோபிக்காதே, நீ சொல்வதும் சரிதான். இது நேற்றுக் கொணர்ந்த தண்ணீர், சுத்தமான தண்ணீர் குளத்திலிருந்தே வேண்டுமளவும் நீ குடிக்கலாம். இந்தத் தெருக்கோடியில்தான் குளம் உள்ளது. தாமதிக்காமல் போய் அங்கே தண்ணீரைக் குடி' என்று அனுப்பிவிடுகிறான்.

இத்தகைய உலோபிகள் இருப்பது நிலத்துக்குச் சுமைதானே? அதனால்தான், "தம்மை யண்டினார்க்கொன்று / ஈயார் இருந்தென்ன போயென்ன காண்கச்சி யேகம்பனே' } என்று கேட்கிறார் பட்டினத்தடிகள். மேலும் ஒரு பாடலில்,
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே! 
என்கிறார். திருவள்ளுவரும்,

 "ஈத்துவக்கும் இன்ப மறியார்கொல் தாமுடையமை
வைத்திழக்கும் வன்க ணவர்' (228)

என்கிறார். தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவாமல் இழந்துவிடும் கொடியவர்கள் பிறருக்குக் கொடுப்பதால் ஏற்படும் உயர்ந்த இன்பத்தை அறியமாட்டார்களாம். ஆனால், இப்படிப்பட்டவர்களின் செல்வம் என்னவாகும் தெரியுமா? "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்கிறார் ஒளவையார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com