நூறாண்டு நிறைந்த தேசியத் தமிழ் வளர்த்தத் திலகம்! 

அறிஞர் கு.ராஜவேலு நினைத்திருந்தால் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக அமர்ந்திருக்க முடியும். கருதியிருந்தால் கல்வியமைச்சராகப் பொறுப்பேற்பது அவருக்கு அப்போது எளிது.
நூறாண்டு நிறைந்த தேசியத் தமிழ் வளர்த்தத் திலகம்! 

அறிஞர் கு.ராஜவேலு நினைத்திருந்தால் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக அமர்ந்திருக்க முடியும். கருதியிருந்தால் கல்வியமைச்சராகப் பொறுப்பேற்பது அவருக்கு அப்போது எளிது. விரும்பியிருந்தால் இந்திய ஆட்சிப்பணிக்கு அவர் எப்போதோ தெரிவு செய்யப்பட்டிருப்பார்.
அனைத்தையும் விலக்கிவிட்டு மகிழ்ச்சியோடு குடந்தை அரசுக் கல்லூரியிலும், சென்னை கலைக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அரசின் செய்தித்துறையில் (1955) பணியாற்றிய  கு.ராஜவேலு,  இலக்கியச் சிகரத்திற்கு முதன்மை தரவேண்டும் என்பதற்காகவே மொழிபெயர்ப்புத் துறை சீரமைக்கப்பட்டு, தலைமைச் செயலகத்தில் இயக்குநரானார் (1968-1975).
பெருந்தலைவர் காமராசருக்குத் தொண்டராக, தோழராக,  கருத்தாளராக, நெருக்கமாக இருந்தவர் பேராசிரியர் கு.ராஜவேலு. மாணவராக பச்சையப்பன் கல்லூரியில் தன் கல்வி வாழ்வைத் தொடங்கியபோதே, தமிழ் முதுகலை (ஆனர்ஸ்) பயிலும்போது "காதல் தூங்குகிறது' என்ற புதினம் எழுதி, "கலை
மகள்' மாத இதழின் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார். 
"என்னைவிடத் தெளிவான தமிழ் எழுதும் வன்மை உடையவர் இவர். இவருடையது கவிதை நடை' என்று அறிஞர் மு.வரதராசனார்  பலமுறை கு.ராஜவேலுவின் பெயரைச்சொல்லி மதித்துப் போற்றினார்.
பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார் என்ற இருவர் தோள்களிலும் உரிமையோடு தோள் தொடும் பசுங்கிளியாக இருந்தார். 
1957-ஆம் ஆண்டில் இந்திய விடுதலைப் போரின் நூற்றாண்டு விழாவில், ராஜாஜி அரங்கத்தில் நடந்த அந்தப் பெருவிழாவில்  காமராசர் தலைமை தாங்க, இயலுக்கு அறிஞர் மு.வ. வையும், இசைக்கு "இசையரசி' கே.பி. சுந்தராம்பாளையும், நாடகத்துக்கு "நாடகத்தந்தை' பம்மல் சம்பந்த முதலியாரையும் அரசு பாராட்டச் செய்து விழா நடத்திய தனிப்பெருமை கு. ராஜவேலுவைத்தான் சாரும்.
"உங்களுக்கு வேண்டிய இவர் பெயரை ஏன் விட்டுவிட்டீர்கள்'? என்று ஒருமுறை பேராசிரியர் ஒருவர் கேட்டபோது, தன் அதட்டும் குரலில் "எவரை எங்கே வைப்பதென்று எனக்குத் தெரியும். என் தேர்வு எப்போதும் சரியான தேர்வு' என்று கு.ராஜவேலு துணிவாகச் சொன்னபோது "அவர் சொல்வதற்கு மேல் எதுவுமில்லை' என்று காமராஜர் கூறினார் என்று சொல்வார்கள்.
காமராஜருக்கு மூன்று கண்கள் உண்டு என்பார்கள். ஒன்று, பெருந்தகை குழந்தைவேலு, இரண்டு, அறிஞர் கு.ராஜவேலு, மூன்றாவது, தலைமைச் செயலாளராக விளங்கிய திரவியம். தலைநிமிர்வோடு தன் ஆற்றல் முழுவதும் நிரம்பிய அடக்கத்தோடு, சிவந்த மேனியும், செம்மாந்த தோற்றமும்,  இருகை வீசி ஏறுபோல் நடந்து தன் சீருந்தைத் தானே செலுத்தும் பெருமிதமும் கொண்டவர் கு. ராஜவேலு.
கு.ராஜவேலு தலைமைச்செயலக மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர் அறையில் அமர்ந்திருக்கிறார் என்றால், அந்த மூன்றாம் தளத்தில் "ஊசி விழுந்தாலும் ஓசை கேட்காது'  என்பார்கள். எவரும் அவரிடம் நெருங்கிப் பேச முடியாது. பெரும்பாலும் அவருடைய தனிச் செயலாளர் மட்டுமே அறைக்குள் சென்று வருவார், காண வந்தவர்களுக்குக் கருத்தறிந்து அவரின் தனிச்செயலாளரே விடையும் தருவார்.
தமிழ் முழுதறிந்த தன்மை கொண்ட அவருக்குத் தோளாக வாழ்ந்த பெருந்தகைதான் ஆங்கிலப் பேராசிரியர் ஆர்.எஸ். தேசிகன். இருவரும் "தென்சொல் எல்லை கடந்தனர்', "ஆங்கிலத்துக்கு ஆழம் கண்டனர்' என்று சொல்வதற்கேற்ப கிரேக்க, ரோமானிய இலக்கியம், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் என ஒவ்வோர் இலக்கியத்திலும் இருவரும் மூழ்கித் திளைத்தார்கள்.
ஓய்வு பெற்ற பிறகும் ஈராண்டுகள் அரசின் தமிழ்ப் பண்பாட்டு இயக்ககத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் விளங்கினார்.
இவர் எழுதிய "சித்திரச் சிலம்பு' புதினத்தின் முன்னுரையில் அவர் குறிப்பிடுவதாவது: "1942-இல் வெள்ளையனே வெளியேறு என்று முழங்கும் விடுதலைப் போரை அண்ணல்  காந்தியடிகள் தொடங்கினார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, தஞ்சாவூர் சிறையில் ஓராண்டும், அலிபுரம் சிறையில் ஓராண்டும் என் இளமை நாட்கள் பிணியின் துணையோடு ஓடின. அக்காலத்தில், அரசியல் கைதிகள் சிறையில் படிப்பதற்காக இலக்கிய நூல்களை எடுத்துச் செல்லலாம். அரசியல் நூல்களை அனுமதிக்க மாட்டார்கள். இவ்விதிகளுக்கிணங்க, நான் சிறையில் படிப்பதற்காக எடுத்துச் சென்ற நூல்களுள் ஒன்று "சிலப்பதிகாரம்'.
 சிறையில் இருந்தபோது எனக்கு வயிற்றுவலி ஏற்படும்போதெல்லாம் இந்த "சிலப்பதிகாரம்' நூல்  குறிப்பாக அதில் இடம்பெற்றுள்ள "கானல் வரி'  எனக்கு அருமருந்தாக உதவியது. சிலப்பதிகாரத்தைப் பன்முறை படித்து இன்புறும் வாய்ப்பையும் எனக்கு சிறைவாசம் அளித்தது. அவ்வாறு படித்ததன் விளைவே இச்சித்திரச் சிலம்பு' என்று குறித்துள்ளார்.
மேலும் அவர், "ஓர் இலக்கியத்தைப் படித்தபின் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை அறிவாகிய விளக்கொளியின் உதவியால் - கருத்துக்களின் - மெய்மை - பொய்மையை ஆராய வேண்டும். மெய்யெனக் கண்ட உண்மையைத் தயங்காது உரைக்க வேண்டுமென்பதே என் கொள்கை'.  மிகப் பெரிய அறிஞர்களுக்கு எதிரான கருத்துகளை நான் கூறும்போது, அவர்களின் மேன்மைக்குத் தலை வணங்கிய பின்னரே என்னுடைய கருத்தைக் கூறியுள்ளேன்' என்றும் கூறியுள்ளார்.
இவர் பதினான்கு வயதிலேயே சிறுகதைகள் எழுதிய சிந்தனையாளர், அண்ணல் காந்தியடிகள், நேரு பெருமகனார், ஜெயபிரகாஷ் நாராயண், நேதாஜி முதலிய தேசியத் தலைவர்களைக் கண்டு உரையாடிய வாய்ப்பினால் பதினொரு ஆண்டுகள் முழு நேர அரசியல் வாழ்க்கையும் ஈராண்டுகள் சிறைவாழ்வையும் கண்டவர். 
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் வளமனையில் அறிஞர்களின் அவையைக் கூட்டி, எளிமையாக புறநானூற்றுப் பாடங்களை விளக்கி நடத்திய வகுப்புகள் ஐம்பது வகுப்புக்களோடு நின்றன. 
அவருடைய ஆய்வுச் செறிவார்ந்த உரைவிளக்கந்தான் "புறநானூற்றுப் புதிய தளிர்கள்' என்ற நூலாக மலர்ந்தது. அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுதான் மகாகவி பாரதியாரின் "குயில்பாட்டை' மூன்று பிரிவாக ஆராய்ந்து "வான்குயில்' என்ற நூலாக வடிவம் 
பெற்றது.
புதினங்களோடு பெருந்தகை கு. ராஜவேலு எழுதிய கொடை வளம், சத்தியச் சுடர்கள், வைகறை வான் மீன்கள், வள்ளல் பாரி, அழகு ஆடுகிறது, காதல் தூங்குகிறது, வான வீதி, காந்த முள், மகிழம்பூ, தேயாத நிறை நிலா, இடிந்த கோபுரம், நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள் ஆகிய கருவூலங்கள் ஈடற்றவையாகும்.
அறிஞர் கு. ராஜவேலு இலக்கியப் படைப்புகளோடு, சிவாஜி கணேசன் நடித்த "ராஜபக்தி'  திரைப்படத்துக்கும் (1960) வசனமும் வரைந்துள்ளார்.   
சேலம் மாவட்டத்தில் போடிநாயக்கன்பட்டி என்ற சிற்றூரில் 29-1-1920 ஆம் நாளில் குருசாமி - குழந்தை அம்மாளின் தவப்புதல்வராகப் பிறந்தார். கு.ராஜவேலு -  பரமேசுவரி இணையரின் இல்லறச் செல்வங்களாக இரண்டு ஆண் மக்களும், மூன்று பெண் மக்களும் கொண்ட சீரார்ந்த குடும்பத்தில் டாக்டர் குழந்தை கஸ்தூரி,  குழந்தை இந்திரா, குழந்தை வளர்மதி, டாக்டர் திருமாவளவன், டாக்டர் பாரி வளவன் ஆகியோர் மக்கட் செல்வங்களாக மிளிர்ந்தார்கள். தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு தம் பாட்டியார் பெயரையும் இணைத்து அவர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பெருமகனாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசின் அஞ்சல் துறை, அஞ்சல்தலை வெளியிட்டு  சிறப்புச் செய்தது. பதின்மராகப் பெயரன் பெயர்த்திகள் அமைந்த புகழோங்கிய செந்தமிழ்க் குடும்பமாக சென்னையில் இன்றும் வாழ்கின்றனர். 
தங்கள் தாத்தா விடுதலைப் போராட்ட வீரர் - தேசியத் திலகம் கு. ராஜவேலு 101 வயது நிறைவில் பெருமகிழ்ச்சியில் உள்ளதைப் போல -  தமிழுலகமும் எந்நாளும் போற்றி மகிழ்கிறது.
ஆங்கிலத்தில் அறிஞர் கோல்டு ஸ்மித் எழுதிய கட்டுரையொன்றில், அறிஞர்களை ஏற்றிச் சென்ற புகழ்ப் பேருந்தில் இடமில்லை என்று தள்ளி விடுவார்களோ என்ற வேகத்தில் கட்டுரை ஆசிரியரும் உடனே தாவி ஏறிச் சென்றாராம். 
அவ்வகையில் பேராசிரியர் கு.ராஜவேலு, அறிஞர் ஒளவை நடராசன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன் அமர்ந்த மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் இருக்கையில் யானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com