இந்தவாரம் - கலாரசிகன் (18.4.2021) 

அறுபத்தெட்டு ஆண்டுகளான தொப்புள்கொடி உறவு சட்டென்று அறுந்துவிட்டது. தனது மரணத்தில்கூட துக்கத்தைத் தேக்கி வைத்துக்கொள்ள எனக்குக் கற்றுத் கொடுத்துவிட்டார்.
மீனாட்சி கிருஷ்ணன்
மீனாட்சி கிருஷ்ணன்


அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது என்பார்கள். ஆனால்  எனக்கு? அழ முடியாமல் தேக்கி வைத்துக் கண்கள் வறண்டுவிட்டன. உண்மை அதுதான்.

என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலியும் இல்லை, என் அளவுக்கு துரதிருஷ்டசாலியும் கிடையாது. இப்படி ஒரு தாயின் திருவயிற்றில் அவதரித்து, அவரது இறுதிக்காலம் வரை அவருடன் இருக்க முடிந்த அதிர்ஷ்டசாலி நான். ஆனால், அவர் மறைவுக்கு அழக்கூட முடியாத துரதிருஷ்டசாலியும் நானேதான்.

அம்மாவின் கவலை எல்லாம் எனது இடது கண்ணுக்கான கண்புரை அறுவை சிகிச்சை நடக்கவில்லையே என்பதாகத்தான் இருந்தது. பெங்களூருவிலிருந்த எனது ஒரே சகோதரியும் வந்திருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமைதான் இடதுகண் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கண்புரை அகற்றப்பட்ட நிலையில் பளிச்சென்று அம்மாவைப் பார்க்கக் கொடுத்து வைத்தது. அம்மாவுக்கும் எனது இரண்டு கண்களிலும் கண்புரை வெற்றிகரமாக அகற்றப்பட்டதில் மிகப்பெரிய ஆறுதல். அந்த மகிழ்ச்சி அடுத்த 24 மணி நேரம்கூட நிலைக்கவில்லை. 

வயது 90-ஐ எட்டி இருந்தாலும், வயோதிகத்தைத் தவிர, அம்மாவுக்கு நோய்நொடி என்று சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை.  புதன்கிழமை வழக்கத்தைவிட அம்மா தெம்பாகவே இருந்தார். காலை சுமார் 9.15 மணி இருக்கும். சகோதரியிடம் சொல்லி வெந்நீரில் உடலைத் துடைக்கச் சொன்னார். ஆடைகள் மாற்றினார்.  போன்விட்டா குடித்தார். சிகிச்சைக்குப் பிறகான சோதனைக்கு நான் மருத்துவமனைக்குக் கிளம்பும்போது, பத்திரமாகப் போய்வா என்று வழியனுப்பினார்.

கட்டிலில் சகோதரியின் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். பேசிக்கொண்டிருந்தார். மெதுவாகச் சரியத் தொடங்கினார். சகோதரியின் மடியில் சாய்ந்தவர் எழுந்திருக்கவில்லை. அவருக்கே தெரியாமல் அவர் நிரந்தரத் துயிலில் ஆழ்ந்திருந்தார்.

எந்தவித சிரமமும் படாமல், வேதனை இல்லாமல், மருத்துவமனைக்குப் போகாமல் தனது மரணம் நிகழவேண்டும் என்பதுதான் அம்மாவின் வேண்டுதலாக இருந்தது. அந்த "அனாயாசேன மரணம்' அவருக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுவிடக்கூடாதாம். அதனால் சிலருக்குக் கண் பார்வையேகூட பாதிக்கப்படுமாம். அது எனக்குத் தெரியாது. அம்மாவுக்குத் தெரிந்திருந்ததோ என்னவோ, யார் கண்டது?

அம்மாவின் அருகில் நான் இருந்திருந்தால் வெடித்துச் சிதறி இருப்பேன். கதறி இருப்பேன். தேம்பித் தேம்பி அழுதிருப்பேன். தனது மரணத்தின்போதுகூடத் தனது மகன் அழுவதை அந்தத் தாயால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அறுபத்தெட்டு ஆண்டுகளான தொப்புள்கொடி உறவு சட்டென்று அறுந்துவிட்டது. தனது மரணத்தில்கூட துக்கத்தைத் தேக்கி வைத்துக்கொள்ள எனக்குக் கற்றுத் கொடுத்துவிட்டார். என் தந்தையார் தனது 49-ஆவது வயதில் எங்களை எல்லாம் பிரிந்தபோது எனக்கு வயது 25. எனது சகோதரியின் வயது 20. அதற்குப் பிறகு எங்களுக்கு எல்லாமே அம்மாதான்.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள். எங்கள் வீட்டில் தாய் சொல்லை மீறிய சம்பவம் இல்லை. எங்கள் உலகம் அம்மாவைச் சுற்றிச் சுற்றிச் சுழன்றது. அம்மாவின் உலகம் எங்களைச் சுற்றிச் சுழன்றது.

நான் அலுவலகத்தில் இருந்து இரவில் வீடு திரும்பும்போது இரவு இரண்டு மணியாகிவிடும். அப்போதும்கூட அம்மாவின் கட்டில் அருகில் அடுத்த நாள் "தினமணி' நாளிதழை வைத்துவிட்டுத்தான் படுக்கப் போவேன்.  காலையில் எழுந்ததும் அம்மாவுக்கு "தினமணி' இருப்பதைப் பார்க்க வேண்டும். "எனது மகன் இரவில் என்னை வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறான்' என்கிற மகிழ்ச்சியில்தான் அம்மாவின் நாள் தொடங்கும்.

காலையில் தினமும் எனது தலையங்கத்தைப் படித்துவிடுவார். எனது முதல் வாசகி அம்மாதான். அதுகுறித்து விவாதிப்பார். சந்தேகங்களை எழுப்புவார். நான் விளக்கம் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் தலையங்கம் எழுதினால் ஒரு வெறுமை, விரக்தி மேலிடுகிறது. அதைப் படிக்க அம்மா இல்லையே என்று நினைக்கும்போது இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது.

அம்மா அடிக்கடி வேண்டிக் கொள்வார், "எனக்கு இனி ஒரு ஜென்மம் கூடாது கடவுளே....!' என்று. நான் அப்படியல்ல "அம்மா, எனக்கு இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும். அந்த ஜென்மத்திலும் நான் உங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...!'

எனது துக்கத்தையும் கண்ணீரையும் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். அது எப்போது வெடிக்கும் என்று தெரியவில்லை. "ஓ' வென்று கதறி அழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால் முடியாது... என்ன கொடுமை இது.... இப்படியும் ஒரு தண்டனையா, சாபமா?

*************************

அம்மாவைப் பற்றி நினைக்கும்போது எனக்கு மக்சீம் "கார்க்கி'யின் "தாய்' நாவல்தான் நினைவுக்கு வருகிறது. கல்லூரி மாணவனாக தொ.மு.சி.ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் முதன்முறையாகப்  படித்தது இப்போதும் நினைவிருக்கிறது. லெனினின் உற்ற தோழராக இருந்த "அலெக்ஸி' என்கிற மக்சீம் கார்க்கிதான் லெனினின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். 

உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல் "தாய்'. ருஷியப் புரட்சியின் பின்னணியில் புனையப்பட்ட புதினம் என்றாலும், அதில் இழையோடும் தாய்ப்பாசம் அந்த நாவலை அமர இலக்கியமாக மாற்றியிருக்கிறது. மிகயீல் விலாசவ் என்பவரின் மனைவி தனது மகன் பாவெல் விலாசவ்காக வாழ்ந்த வாழ்க்கைதான் "தாய்'. அந்த நாவலில் வரும் ஒரு காட்சிக்கான வசனங்கள் இவை - ""நன்றி அம்மா'' என்று தணிந்த குரலில் தழுதழுத்துக்கொண்டே தனது நடுங்கும் விரல்களால் அவளது கரத்தைப் பற்றி அழுகிறான் பாவெல்.

 ""அட கடவுளே, எனக்கு எதற்காக நன்றி கூறுகிறாய்?'' என்றாள் தாய்.

""நானும் என் தாயும் ஒரே மாதிரி உணர்ச்சி கொண்டவர்கள், ஒரே கொள்கை வசப்பட்டவர்கள் என்று ஒருவன் கூறிக்கொள்வது கிடைப்பதற்கரிய பேரானந்தம், அம்மா!''

அவள் மௌனமாக இருந்தாள்.

தாய் நாவலின்  தனிச்சிறப்பு என்ன தெரியுமா? அந்தத் தாயின் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவர் தாய் என்கிற  கதாபாத்திரமாகத்தான் உலா வருவார். அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஏதாவது ஒரு விதத்தில் அந்தத் தாயாகத் தனது தாயை உருவகப்படுத்திக் கொள்வர். அந்த வாசகர்களில் நானும் ஒருவன்.

*************************

என் தந்தையார் வெளியில் கிளம்பும்போது அம்மாவிடம் சொல்லிக் கொண்டுதான் கிளம்புவார். அதிலிருந்து தொடங்கிய பழக்கம், எங்கள் வீட்டில் யார் எங்கே வெளியில் போவதாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டுதான் கிளம்புவோம். பெயரக் குழந்தைகள் கூட அப்படித்தான்.
அதேபோல, நாங்கள் வீட்டுக்குத் திரும்பினால் நேராக அம்மாவிடம் சென்று வருகைப் பதிவு செய்து விடுவோம். நாங்கள் எப்போது திரும்புவோம் என்று அம்மா காத்திருப்பார்கள்.

புதன்கிழமை நான் மருத்துவமனைக்குப் போகும்போதுகூட அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் போனேன். அம்மாவின் பிரிவைத் தொடர்ந்து நான் எனது டைரியில் குறித்து வைத்திருக்கும் வரிகள் இவை-
நான் வெளியே போனபோதெல்லாம்
சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று எதிர்ப்பார்த்தாயே...
நீ
போனபோதுமட்டும்
சொல்லிக் கொள்ளாமலேயே
சென்றுவிட்டாயே அம்மா,
என்ன இது நியாயம்?

 அடுத்த வாரம் சந்திப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com