முறியைக் கிழித்ததே அநியாயம் கூகூ..

"கூகூ' எனக் கூச்சலிட்டு அழுதவர் யார் தெரியுமா? உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாகிய எம்பெருமானின் கூச்சல்தான் அது, கீழ்க்காணும் பாடலில் உள்ளது. 
முறியைக் கிழித்ததே அநியாயம் கூகூ..


"கூகூ' எனக் கூச்சலிட்டு அழுதவர் யார் தெரியுமா? உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாகிய எம்பெருமானின் கூச்சல்தான் அது, கீழ்க்காணும் பாடலில் உள்ளது. 

பிடித்திழுத்தான் முறியைப் பிடுங்கிக்
கிழித்தான் அடித்தான்காண் கூகூ
அடித்தாலு மாட்டும் முறியைக்
கிழித்ததே அநியாயம் கூகூ (பா.27)

நமது குறைகளை எல்லாம் களையும் இறைவன் யார்மீது இப்படிக் குறை சொல்லிக் கூச்சலிடுகிறான்?

மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர இப்புவியில் ஆரூரராக அவதரித்த சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள அடிமை ஓலையோடு பழைய மன்றாடியாக வருகிறார், எம்பெருமான்! சுந்தரர் அடிமை ஓலையைக் கிழித்தெறிந்து வாது செய்கிறார். அப்போது எம்பெருமான் இட்ட 
கூச்சல்தான், இது. இப்படியான கூச்சல் இடம்பெறும் நூல் "சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்' என்பதாகும்.

கீழ்த்திசைச் சுவடிகள் வெளியீடு எண்: 81 என்று குறிப்பிடப்பட்ட இந்நூல், 1995-ஆம் ஆண்டு முனைவர் எஸ்.செளந்திரபாண்டியனால் ஓலைச்சுவடியிலிருந்து எடுத்து நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

"சுந்தர விலாசம் சுபல நாடகத்தைக் கந்தவேள் அருளின் கழறியல்' (2) என ஆசிரியர் தாம் எழுதிய நூலுக்கு சுந்தரவிலாசம் எனப் பெயரிட்டுள்ளார். ஆசிரியர் பெயர் தெரியாத இந்நூல், கி.பி.1848-ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் எனப் பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார்.  மேலும் "சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை நாடகமாக நடித்துக்காட்ட விரும்புவோர் இந்நூலைப் பயன்படுத்தலாம்' எனக் குறிப்பிடுகிறார். 

மேடையில் - பொதுவெளியில் நிகழ்த்தப்படும் யட்சகானம் எனும் இக்கலை தெலுங்கிலும், கன்னடத்திலும் உள்ள ஓர் இசை நாடக வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தமிழ்த் தெருக்கூத்தின் ஒரு வடிவமே எனக் குறிப்பிடும் பதிப்பாசிரியர், கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தெலுங்கு யட்சகானமான "சுக்கிரீவ விஜயம்' நூலே நமக்குக் கிடைக்கும் யட்சகான நூலில் முதன்மையானது எனவும், "கிருஷ்ணார்ஜுனா யட்சகானம்' கன்னட மொழியின் முதல் யட்சகானம் எனவும் குறிப்பிடுகிறார்.

"திபதை' என்பது இரண்டிரண்டு அடிகளில் எதுகை பெற்று வந்து அடிக்கு நான்கு சீர்கள் கொண்டு நான்காம்சீர், பெரும்பாலும் ஈரசைச்
சீராக அமையும் ஒரு யாப்பு வடிவமாகும். மேலும், யட்சகான நூலில் உள்ள திபதை என்ற யாப்பில் அமைந்த பாக்களே, யட்சகானம் என்ற வடிவை, பிற தமிழ்க் கூத்துக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன எனவும் பதிப்புரையில் குறிப்பிடுகிறார்.

திபதை இலக்கணம் பொருந்த இரண்டு அடிகளில் அடிக்கு நான்கு சீர்கள் அமைய "திபதை' என்ற தலைப்பில் இசைப் பாடல்கள் இந்நூலில் உள்ளன. கண்ணி எனும் இரண்டடி அமைப்பின்றியும், தொடர்ந்த முறையிலும் திபதைகள் அமைந்துள்ளன. 

கிழவேதியரின் வழக்கினைக் கேட்டுக் 
கொதித்துப் போய் சுந்தரர்,
அடித்தே னென்றார் பிடித்தே னென்றார்
குடித்தன மாயிருந்த எங்கள் 
குடிவாழ்க்கை குலைக்க வந்தார்!
காலம் வந்தால் கறுப்பு வந்தால் 
காவலர்கள் தெண்டங் கொண்டால்
ஏலங்கூறி எனது பாட்ட
ஏதுக்காய் விலைப்பட்டான்? (35)

எனப் புலம்புகிறார். இப்புலம்பலில், "தேவைகள் இருப்பின் மக்கள் அடகு வைப்பர்' என்ற உண்மை பொதிந்துள்ளது.

சுந்தரர் பின்தொடர, திருவெண்ணெய்நல்லூர்க் கோயிலை நோக்கிச் செல்லுகிற கிழவேதியரைப் பார்த்து வீதியில் நிற்கிற ஜனங்கள்,
மெத்தத் துள்ளி யிவன்வீண் சண்டை யிட்டிழுத்த
கைத்தலத்துக் கெந்நாளும் கப்பரை வாராதோ?
காயமிகு கூறாகிக் கண்கள் நெருப் பாயெரிந்து
மாயனிவன் இருகாலும் வாதமா காதோ?
துடித்து வருமிவன் வீடுசுட்ட காடாகி
அடுத்தபொழு தாகாச மாகிப் போகானோ?  (44)

என்று சாபமிடுகின்றனர். கிழவேதியரின் இரு கால்களும் விளங்காமல் போகட்டும்; கண்கள் நெருப்பாய் எரிந்து போகட்டும்; இவன் வீடு சுடுகாடாகட்டும் என்றெல்லாம் சாபமிடுகின்றனர். மிகச் சாதாரண ஜனங்களின் மனநிலையும், சுந்தரர் மீதான அவர்களது அன்பின் மிகுதியையும் வெளிப்படுத்தும் இப்பகுதி சேக்கிழார் படைப்பில் இடம்பெறவில்லை. 
சடங்கவியார் மகளோடு திருமணம் நடக்கும் தருணத்தில் சுந்தரரது தோழராக விப்பிரவித்திரன் அறிமுகமாகின்றான். 

தடித்த காதுங் தொள்ளக் காதுஞ்
சடிச்ச முகமும் வெள்ளிக் கண்ணும்
அழகான விப்பிரவித்திரன் வந்தானய்யா!  (4)
என்ற பகுதி, தெருக்கூத்தில் வரும் கோமாளி என்ற விதூஷகனையே நம்முன்  காட்சிப்படுத்துகின்றது. இந்நூலில் நூற்றி நாற்பத்தாறு செய்யுள்கள் உள்ளன.  இந்நூலின் நிறைவுப் பகுதியில்,

வாழி திங்கள்மும் மாரி பெய்திட
வாழி வையக மனைத்து மோங்கிட
வாழி சைவமும் நீறும் வீறிட
வாழி யாகம வேதமும் வாழி! வாழி!  (145:26)

என வாழியும், மங்களமும் இடம்பெறுகின்றன. "திருப்பாட்டு' எனப் போற்றப்படும் ஏழாந்திருமுறை ஆசிரியராகவும், திருத்தொண்டர் புராணம் எனப் பெயருடைய சைவ வழிபடு நூலுக்கு மூலவித்திட்ட வித்தகராகவும் உள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு பொதுவெளியில் வெகுஜனங்களின் முன்னே நாட்டுப்புற நிகழ்கலை வடிவமாக ஆக்கப்பட்டுள்ளமை இந்நூலின் பெருஞ்சிறப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com