அரிது... அதனினும் அரிது...!

பழந்தமிழகத்தில், தம் மனைவியரை விடுத்துக் கணவன்மார்கள் பரத்தையருடன் வாழும் வாழ்க்கையை சான்றோரும், கற்பறம்பூண்ட பெண்களும் ஆகாத செயல் என்றே வெறுத்தனர்.
அரிது... அதனினும் அரிது...!

பழந்தமிழகத்தில், தம் மனைவியரை விடுத்துக் கணவன்மார்கள் பரத்தையருடன் வாழும் வாழ்க்கையை சான்றோரும், கற்பறம்பூண்ட பெண்களும் ஆகாத செயல் என்றே வெறுத்தனர். இப்படிப்பட்ட சூழலில் தலைவன் ஒருவன் தலைவியை விடுத்து கூடாவொழுக்கத்தில் பரத்தையுடன் வாழ்ந்து வந்தான்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தலைவியின் நினைவு அவனுக்கு வந்தது. தன் பிரிவால் தலைவி எவ்வளவு துயருற்றிருப்பாள் என்பதை எள்ளளவும் நினையாமல், தலைவியின் தோழியை அணுகி, தன் தவறை மறந்து தன்னை அவளுடன் சேர்த்துவைக்க வேண்டும் எனக் கேட்கிறான்.

தலைவன் மேல் தோழிக்குக் கடும் சினம் ஏற்படுகிறது. உடனே அதை வெளிப்படுத்தக் கருதாது அவனுக்குப் புத்திமதி (கூறுவதாக அமைந்த பாடல்) கூறுகிறாள்.

"... ... ...
யாணர் ஊர! நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும், அவர்தம்
புன்மனத்து உண்மையோ அரிதே, அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் அரிதே!' ( நற். 330)

புதிய வருவாயினையுடைய ஊரில் வாழுகின்ற தலைவனே! உன்னுடையவராய்த் திகழும் அணிகலன்களை அணிந்த மகளிரை எமது இல்லத்திற்கு அழைத்து வந்து, அவர்களைத் தழுவிக்கொண்டு வாழ்ந்தாலும், பிறரிடம் செல்வத்தையே அதிகம் விரும்பும் அப்பெண்களுடைய அற்ப மனத்திலே உண்மைக் காதல் பிறப்பது மிகவும் அரிது.

அவர்கள் பொன்னால் ஆகிய அணிகளை அணிந்த புதல்வியர், புதல்வர்களைப் பெற்று, எம்போன்ற கற்புப் பொருந்திய மகளிரை ஒத்து அமைதல் அதனினும் அரிதாகும் என்கிறாள்.

பொருளை மட்டும் எதிர்பார்க்கும் விலை
மகளிரிடம் உண்மையான காதலை எதிர்பார்ப்பது இயலாததாகும்.

அவர்கள் கற்பறம் போற்றும் பெண்களுடன் ஒத்துவாழ மாட்டார்கள்; குழந்தைகளைப் பெற்று, கற்புடன் வாழ்வதையும் விரும்பமாட்டார்கள் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறாள்.

இவ்வாறு தலைவனிடம் தோழியோ, தலைவியோ பலவாறு இடித்துரைத்துக் கூறினாலும், இறுதியில் குற்றமுணர்ந்து வரும் தலைவனை ஏற்றுக்கொள்ளவும் தலைவி "உடன்படுவாள்' (மன்னித்து ஏற்றுக் கொள்வாள்) என்பதையும் அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com