ஒரே பாடலில் ஒரு நாடகம்!

"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என சிறப்புப் பெயர் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். இசை நாடகப் புலமை பெற்று 68 நாடகங்களுக்கு மேல் எழுதி, இயக்கி, நடித்தும் வந்துள்ளார்.
ஒரே பாடலில் ஒரு நாடகம்!


"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என சிறப்புப் பெயர் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். இசை நாடகப் புலமை பெற்று 68 நாடகங்களுக்கு மேல் எழுதி, இயக்கி, நடித்தும் வந்துள்ளார்.

குறவஞ்சி நாடகம் முதல் வள்ளித் திருமணம் இசை நாடகம் வரை இன்றளவும் தமிழ் மக்களால் தமிழர் வாழிடங்களில் நடித்துக் காட்டப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. சங்கரதாஸ் சுவாமிகளின் இலக்கண, இசைப் புலமையை வள்ளித் திருமண நாடகத்தில் கழுகாசலக் காட்சி,  முருகன்-நாரதர் சந்திப்பில் பாடப்பெறும் பாடலில், ஒரே பாடலில் வள்ளித் திருமணத்தை நுட்பமாகச் சொல்லி விடுகிறார்.

மாங்கனிக்கும் தேன்கதலி வன்கனிக்கும் மேலினிக்கும் 
பூங்கனியைக் கண்டு மனம் பூரித்தேன் - நான் கனிந்தேன்
அக்கனியை இக்கணமே கொய்யாமல் கொய்தனைத்துக்
கொள்வீர் அய்யா... முருகையா...!

சிலேடை நயமிக்க இப்பாடற் பொருள் பின்வருமாறு:

மாங்கனிக்கும்: சுவைமிக்க மாங்கனிக்கும் மேலான மா + கனிக்கும் (மான் பெற்ற மகள்) மா -  விலங்கு (மான்), கனிக்கும் - ஈன்ற, பெற்ற.

தேன்கதலி: தேன் அன்ன சுவையுடைய கதலி (கற்பூரவள்ளி) வாழைப்பழம்; தேன் அன்ன இனிமையான சொற்களைப் பேசும் (முருகனின் காதலி -கதலி) பெண் இனிமையாக "ஆலோலம்' என்று குரலெழுப்பிக் கதறுபவள் வள்ளி.

வன்கனிக்கும்:  வல்லிய (பெரிய) கனியாகிய பலாக்கனி  வன் + கனி = வல்லியாகிய கனி வல்லிய வேடர்குலம் பெற்றெடுத்த தலைவி.

மேலினிக்கும்:  மா, வாழை, பலா ஆகிய முக்கனிகள் தரும் சுவையைக் காட்டிலும் இனிமை தரும்; பரண்மேல் நின்று பறவைகள் ஓச்சும் இவளது (வள்ளி) மேலானது (உடம்பு) ஐம்புலன்களுக்கும் சுவைதரும்.

பூங்கனி: (பூ + கன்னி) பூவுலகோர் போற்றுங்கனி வள்ளி.  ஈண்டு, கன்னி இடைக்குறையாகிக் கனியானது. பூப்போன்று சிரித்த முகத்தினள். (பொய்க்கனி விடுத்த அறிவியல் உண்மை புலப்படுத்தும் மெய்யாகிய பூங்கனி).

பூரித்தேன்:  உள்ளம் நெகிழ்ந்தேன். இவள் பேசும் சொற்கள் தேன் சுவை மிகுவன.

நான் கனிந்தேன்: நான் மகிழ்ந்தேன், நான் இவள் மீது இரக்கப்பட்டேன்.  அத் தேன்மொழி மங்கையை (வள்ளி) நான் என் மகளாகப் பெற்றதாக நினைக்கிறேன்.

அக்கனியை : வள்ளியாகிய அக் க(ன்)னியை இக்கணமே இப்பொழுதே, இவள் குலத்து வேடனாகவே (கணம் - கூட்டம், குலம்) சென்று;

கொய்யாமல்: மிரட்டும் சொற்களை விடுத்து இனிய சொற்களைப் பேசி கொய்து அவள் இதயத்தில் இடம்பிடித்து, வாரியணைத்து அவளை (வள்ளியை) மனம் புரிந்து கொள்வீர்... ஏற்றுக்கொள்வீர் ஐயா... முருகையா...  முருகப் பெருமானே!

மேற்கண்ட பாடல் வரிகளுக்கு விளக்கமாகவும், இதே காட்சியில் தொடர்ச்சியாக வரும் முருகன் - நாரதர்  தருக்கப் பாடல் அமைந்துள்ளது. இது சுவாமிகளின் புலமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

முருகன்: சிலாக்கிய மென்ன முனியே? கனியின் சிலாக்கியமென்ன முனியே? வருகிற மார்க்கத்தில் கண்ட கனிதனக்கேயுற்ற சிலாக்கியமென்ன முனியே! சிலாக்கியமென்ன முனியே?... முனியே?

நாரதர்: சுவைதரும் தீங்கனியே! சுவை தரும் தீங்கனியே! அதை நோக்கும்பொழுதே ஐம்புலன்களுக்கெல்லாம் சுவைதரும் தீங்கனியே சுவைதரும் தீங்கனியே! சுவை தரும் தீங்கனியே! கனியே!

முருகன்: பட்சிகள் கண்டால் இந்நேரம் அதைப் பற்றி பட்சித்திடாதோ சொல்வீர்?

நாரதர்: பட்சிகள் கண்டால் பறந்தோடும் மாகையால் பட்சமுடனே செல்வீர்?  
முருகன்: எட்டாத கொம்பினில் இருந்திடும் அக்கனியை எப்படிக் கொய்திடலாம்?

நாரதர்: எட்டும்படிக்கிரு கொம்புண்டு அதைப்பற்றி ஏறிப் பறித்திடலாம்! (கொம்பு - குலம், சாதி)

முருகன்: மிக்க மேன்மையுள்ள அக்கனிக்கு எவ்விதம் மேவும் குறிகள் உண்டோ?

நாரதர்: குளிர்ந்த முகம் உண்டு! கொங்கைகள் இரண்டுண்டு! கோதிலாக் கண்கள் ரெண்டுண்டு!

இப்பாடலில் "எட்டாத கொம்பு என்ற சொல்லை சுவாமிகள் கையாளுகின்றார். வள்ளி குறக்குலப் (கொம்பு) பெண். முருகனோ தேவர் (தெய்வ) பிறப்பு. இரு குலத்தாருக்கும் ஒத்து வருமா என்ற முருகனின் கேள்விக்கு நாரதர் பதிலாக, "எட்டும்படிக்கு இரு கொம்பு(குலம்) உண்டு அதைச் சொல்லி அவளை மணக்கலாம் தாங்கள்' என்கிறார். 

அதாவது, ஆதியிலே தேவேந்திரன் மகள் வள்ளி, தற்போது மான் வயிற்றிலே சிவமுனிவர் அருளால் உண்டாக்கப்பெற்ற பிள்ளை. கிழங்ககழ் பள்ளத்திலே கிடந்த குழந்தை. இவளை வேடர்கள் வளர்க்கிறார்கள். இந்த இரண்டு வழிகளையும் (கையாண்டு) பற்றித் தாங்கள் அவளை மணக்கலாம் என்கிறார் நாரதர்.

ஒரே பாடலில் வள்ளித் திருமண நாடகம் முழுமையும் பாடிய சுவாமிகளின் தமிழ் இலக்கண, இலக்கிய, இசைஞானப் புலமையை என்னவென்பது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com