இந்த வாரம் கலாரசிகன்

நான் சற்றும் எதிர்பாராமல் பொக்கிஷம் ஒன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன்


நான் சற்றும் எதிர்பாராமல் பொக்கிஷம் ஒன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது எனக்குக் கிடைத்த அந்தப் பொக்கிஷம், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. எழுதி, 1977-ஆம் ஆண்டு பூங்கொடி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "வந்தே மாதரம்' (வரலாறு) என்கிற 75 பக்கப் புத்தகம்.  தனது வாழ்த்துகளுடன் 27.06.1977-ஆம் ஆண்டு கையொப்பமிட்டு,  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்திக்கு ம.பொ.சி.யால் தரப்பட்ட புத்தகம் அது.

முனைவர் இ.சுந்தரமூர்த்தியிடமிருந்து படிப்பதற்காக இரவல் வாங்கியவர் நல்லவேளையாக அதைப் பழைய புத்தகக் கடையில் எடைக்குப் போட்டுவிடவில்லை என்கிற அளவில் ஆறுதல். பல கைகள் மாறி, அந்தப் "பொக்கிஷம்'  நண்பர் ஒருவரால் எனக்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்டிருக்கிறது.

சுந்தரமூர்த்தி ஐயா விழைந்தால் அதை அவரிடமே சேர்ப்பதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. நானே வைத்துக்கொள்ளப் பணித்தால், இரு பெரும் தமிழறிஞர்களின் நினைவாக நான் போற்றிப் பாதுகாப்பேன்.

"வந்தே மாதரம்' என்பது வெறும் கோஷமோ, அறைகூவலோ அல்ல. அது ஒரு பாசறை கீதம். இந்தியாவின் தேசிய கீதமாக இருந்திருக்க வேண்டிய உணர்ச்சி ததும்பும் பாடல்.

பங்கிம் சந்திரர் 1882-இல் தனது "ஆனந்த மடம்' நாவலை எழுதுவதற்கு முன்பே 1876-இல் "வந்தே மாதரம்' பாடலை இயற்றிவிட்டார். வங்கப் பிரிவினையின்போது இந்தப் பாடல்தான் மத வேற்றுமையின்றி வங்க மக்களை இணைத்தது. 1906-இல் விபின் சந்திர பாலர் "வந்தே மாதரம்' என்ற பெயரில் ஆங்கில நாளிதழை நடத்தினார். மேடம் பிக்காஜி காமா இந்திய விடுதலைக்காக "வந்தே மாதரம்' என்கிற பெயரில் பிரான்ஸிலிருந்து பத்திரிகை நடத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில், ஒரு கட்டத்தில்  மூவர்ணக் கொடியின் நடுவே "வந்தே மாதரம்' என்று எழுதப்பட்டிருந்தது. 

விடுதலைப் போராட்ட காலத்தில் தேசபக்தர்களின் தாரக மந்திரமாக ஒலித்தது "வந்தே மாதரம்' என்கிற கோஷம். ஒருவரை ஒருவர் கூப்பிடும்போது  "வந்தே மாதரம்' என்று சொல்லிக் கொள்வர். தமிழகத்தில் "வந்தே மாதரம்' என்கிற கோஷம் பரவுவதற்கு பாரதியாரும், வ.உ.சிதம்பரனாரும் முக்கியமானவர்கள்.

தூத்துக்குடி மக்கள்  வ.உ.சிதம்பரனாரை "வந்தே மாதரம் பிள்ளை' என்றுதான் அழைப்பார்கள். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறையில் தள்ளியதற்கு, "வந்தே மாதரம்' என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை கோஷமிட வைத்தார் என்று காரணம் கூறப்பட்டிருந்தது. ""சுதேசிக் கிளர்ச்சியின்போது தூத்துக்குடி நகரத்தில், வீடுதோறும்  "வந்தே மாதரம்' கோஷம் நாள்தோறும் ஒலித்தது'' என்று தனது சுயசரித்திரத்தில் எழுதுகிறார் "செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி.

""1905-ஆம் ஆண்டு முதல் 1912-ஆம் ஆண்டுவரை வங்கப் பிரிவினைக்கு எதிரான கிளர்ச்சி வங்காளத்தில் எழுந்தபோது, தேசம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள் எந்தவித முணுமுணுப்புமின்றி இந்து சகோதரர்களுடன் சேர்ந்து  "வந்தே மாதரம்' கீதத்தையும் போற்றினர். ஆனால்,  ஜனாப் ஜின்னா முஸ்லிம் லீகின்  தலைமையில் பாகிஸ்தான் கோரிக்கையை  எழுப்பியதன் பிறகுதான், அது தங்களது மத நம்பிக்கைக்கு எதிரானது என்று  எதிர்ப்புக் கிளம்பியது'' என்பதைப் பதிவு செய்கிறார் ம.பொ.சி.

1938-இல் ஜின்னாவுடன் சமரசம் பேச விரும்பினார் காந்தியடிகள். அவரும், அப்போது காங்கிரஸ் மகாசபைத் தலைவராக இருந்த "நேதாஜி' சுபாஷ் சந்திர போஸூம் ஜின்னாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். அந்த சந்திப்புக்கு ஜின்னா விதித்த மூன்று நிபந்தனைகளில்,  காங்கிரஸின் தேசியகீதமாக "வந்தே மாதரம்' பாடப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதும் ஒன்று. அதை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். காந்தியடிகளும் அதை வழிமொழிந்தார்.

அரசியல் சாசன சபையில் நடந்த விவாதம், ஏன்  "வந்தே மாதரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு "ஜன கண மன' தேசிய கீதமானது, 1939 தமிழக சட்டசபையில் "வந்தே மாதரம்' குறித்த சர்ச்சை, அரவிந்தர் எழுதிய ஆங்கில மொழியாக்கம், பாரதியாரின் பாடல்கள் என்று  "வந்தே மாதரம்' தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கியஅற்புதமான ஆவணப் பதிவு ம.பொ.சி. எழுதியிருக்கும் 
புத்தகம்.

"சிலம்புச் செல்வர்' எழுதிய புத்தகம் குறித்து எழுதிய கையோடு நான் இரண்டு வாரம் முன்பு படித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு குறித்தும், அந்த எழுத்தாளர் குறித்தும் பதிவு செய்ய விரும்புகிறேன். சிலம்புச் செல்வரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட  பல ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்.

கடந்த 2020, கவிஞரின் பிறந்த நூற்றாண்டு.  அதையொட்டி கவிஞர் கு.மா.பா.வின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகன் கு.மா.பா. திருநாவுக்கரசு "நினைவு முகம்' என்கிற பெயரில் புத்தகமாக்கி இருக்கிறார். கூடவே அவரது சிறுகதைகளையும் தொகுத்து  புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். 

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பல திரைப்படப் பாடல்கள் இப்போதும்கூட முணுமுணுக்கப்படுகின்றன. ஆனால் அவை, அவர் எழுதியவை என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. "உன்னைக் கண்தேடுதே... உன் எழில் காணவே..' (கணவனே கண்கண்ட தெய்வம்), "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே...' (அம்பிகாபதி), "யாரடி நீ மோகினி, கூறடி என் கண்மணி' (உத்தம புத்திரன்), "சித்திரம் பேசுதடி' (சபாஷ் மீனா), "சிங்கார வேலனே தேவா' (கொஞ்சும் சலங்கை) என்று அவர் எழுதிய எத்தனையோ திரைப்பாடல்கள் ரசிகர்களைக் கொள்ளை கொண்டவை.

ம.பொ.சி.யின் "தமிழ் முரசு' பத்திரிகையில் உதவியாசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, அவருடன் தமிழரசுக் கழகத்தில் இணைந்து, பல போராட்டங்களில் பங்குபெற்று, பின்னாளில் தமிழரசுக் கட்சி சார்பில் மேலவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, தமிழரசுக் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார். 1989-இல் திமுக ஆட்சி அமைந்தபோது இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கவிஞரின் ஏற்ற இறக்கங்கள் கொண்ட வாழ்க்கைப் பயணமும்,  அவர் எழுதிய சிறுகதைகளும் சுவாரசியமானவை.

மகாகவி பாரதியைத் தனது ஞானகுருவாகக் கொண்டு கவிப் பயணம் நடத்தும் இளவல் கிருங்கை சேதுபதி "பனித்துளிக்குள் உறையும் காலம்' என்கிற கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதிலுள்ள கவிதை ஒன்றிலிருந்த சில வரிகள் இவை - இருப்பதையெல்லாம் கொடு என்று கத்தியைக் காட்டி மிரட்டிய வழிப்பறிக்காரனிடம் மடி உதறிக் காட்டிவழிப்போக்கன் சொன்னான்: "அனுபவத்தைத் தவிர வேறெதுவுமில்லை ஐயா!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com