இறைவனை உண்ணலாம்!

இறைவனின் அருளை, அழகை அடியார்கள் எவ்வாறெல்லாம் நுகர்ந்து இன்புற்றார்கள் என்பதை அவர்களின் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
இறைவனை உண்ணலாம்!


இறைவனின் அருளை, அழகை அடியார்கள் எவ்வாறெல்லாம் நுகர்ந்து இன்புற்றார்கள் என்பதை அவர்களின் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. ஒரு பொருளை இத்தனை முறைகளில் துய்க்க முடியுமா என்றெண்ணும்பொழுது வியப்பாக உள்ளது.

இறையருளை அடியார்கள் ஐம்பொறிகள் வாயிலாகவும் துய்த்தனர். கண்களால் துய்த்ததை "படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே' என்ற ஆழ்வார் பாசுரக் கூற்றிலும்; செவியால் துய்த்ததை "ஏழிசையாய் இசைப் பயனாய்'என்ற சுந்தரர் மொழியாலும்; நாசியால் துய்த்ததை "கருப்புரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?'என்ற ஆண்டாள் வாக்காலும்; மெய்யால் துய்த்ததை "சோற்றுத் துறையார்க்கே புல்லி நீ பணிசெய் மட நெஞ்சே' என்ற திருநாவுக்கரசர் சொல்லாலும் அறியலாம்.

எஞ்சிய ஐந்து பொறிகளுள் ஒன்றான வாயால் துய்க்கும் வகைகளை அடியார்கள் பாடல்கள் வாயிலாகக் கற்கும்பொழுது உண்ணுதலில் இத்தனை முறைகளா என்று எண்ணி வியக்கத் தோன்றுகிறது. அந்தந்த முறைகளை அதற்குரிய அருஞ்சொல்லால் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது.

திருநாவுக்கரசர் இறைவனின் அருளை நீர்ம வடிவில் அருந்தித் துய்த்ததாகக் கூறியுள்ளார். "பாலாகித் தேனாகி பழமும் ஆகி பைங்கரும்பாய் அங்கருந்தும் சுவையானானை' (தேவா. 6985) என்பது அவர் வாக்கு.

மாணிக்கவாசகர் தாம் இறையருளை விழுங்கி உண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். "உன்னருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன்' (திரு- 415) திருவருளை உண்ண அடியாருக்கு ஆர்வமும்  அவசரமும் மிக்கிருந்தது என்பதை விக்கினேன்என்ற சொல்லாட்சி தெளிவுபடுத்துகிறது. மணிவாசகரே மற்றோர் இடத்தில் இறையருளை அது தீர்ந்துவிடுமோ, கிட்டாதோ என்ற ஐயத்தில் கிடைத்தவுடன் அதிகமாகப் பெற்று கடைவாயில் அடக்கிக் கொண்டு சிறிதுசிறிதாக உண்டு மகிழ்ந்ததாகக் கூறியுள்ளார். இச்செயல் குழந்தைகள் தின்பண்டங்களைக் கடைவாயில் அதுக்கிக் கொண்டு சிறிதுசிறிதாக உண்ணுகின்ற காட்சியை நினைவூட்டுகின்றது . "அச்சம் தீர்த்த நின் அருட்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்' (திரு- 405).

இறையருளை அருந்துவதையும், விழுங்குவதையும் தேக்கிவைத்து உண்பதையும் கூறிய அடியார்களைவிட ஒருபடி மேலேபோய் "இறைவனைக் கடித்துத் தின்பேன்' என்று கூறியுள்ளார் திருமூலர். இறைவனை உண்ணும் பல முறைகளையும் தேடி அவற்றில் தம் வேட்கை முழுமை பெறாது என்றறிந்து "இறைவனைக் கடித்துத் தின்பேன்'  (இறைவனை ஈசனை தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே' (2932) என்று கூறியுள்ளார். இது அடியார்க்கு இறைவன்பால் இருந்த அவா, வேட்கை, பக்தி எல்லாவற்றையும் கடந்த ஓர் உணர்ச்சியாகிய பித்து என்று கூறலாம்.

"பெருந்தேன் முகந்து கொண்டு உண்டு பிறிதொன்றில் ஆசையின்றிஇருந்தேன்' என்கிறார் பட்டினத்தடிகள் (திருமுறை 11, 864) இப்பாடலில் உண்டு என்று அடியார் கூறி இருந்தாலும் "நக்கிச் சுவைத்தேன்' என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் "உண்டு என்ற வினை எச்சத்திற்கு முன் பெருந்தேன்' என்ற சொல் வந்ததால் "தேனை நக்கினேன்' என்று சொல்லும் மரபுப்படி நக்கிச் சுவைத்தாகக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உண்ணலில் பல்வேறு நிலைகளை அறிந்து அவற்றிற்கேற்ற சொற்களை, வெல்லும் சொல் இன்மை அறிந்து கையாண்ட அருளாளர்களின் புலமைத்திறன் போற்றி வணங்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com