இந்தியச் சரித்திரக் கும்மி!

"கும்மி' எனும் பாடல் வகை, 19-20-ஆம் நூற்றாண்டுகளிலும், பின்பும் பல்கிப் பெருகி வளர்ந்திருந்ததை அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம்.
இந்தியச் சரித்திரக் கும்மி!

"கும்மி' எனும் பாடல் வகை, 19-20-ஆம் நூற்றாண்டுகளிலும், பின்பும் பல்கிப் பெருகி வளர்ந்திருந்ததை அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம். பாமர மக்களும் அறிந்து, பாடி மகிழும்வண்ணம் அமைந்துள்ளவை கும்மிப் பாடல்கள்.

யோகி சுத்தானந்த பாரதியார் பாடியுள்ள "இந்தியச் சரித்திரக் கும்மி' எனும் நூல், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, அதாவது பிப்ரவரி 1947-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. அவர், 

இந்தியாவின் பூகோளத்தையும், சரித்திரத்தையும் இனிய சந்தநயம்மிக்க கும்மிப் பாடல்களாகப் பாடியுள்ளார். சில நயமான பாடல்களைக் காண்போம்.
புண்ணிய பூமி, புராதன பூமி, புலவர்கள் போற்றிப்புகழ் பூமி,
.........    .........    .........
பாரத பூமியில் நம்மைப் படைத்த
பரமனைப் பாடிக் குதித்திடு வோம்!
என்று பாரத பூமியின் சரித்திரத்துடன் தொடங்கும் இது, நாட்டின் மலைகள், ஆறுகள், பேசப்படும் மொழிகள், கவிஞர்கள், முக்கியமான ஊர்களை வகைப்படுத்திப் பாடிய பின், இந்திய மரபையும், நாட்டின் தொன்மையையும் போற்றுகிறது. 

பின்னர் தமிழர் வரலாற்றைச் சொல்கிறார் ஆசிரியர். தமிழகத்தின் ஒரு பகுதியை, "வெள்ளக்கடல் விம்மி வீறிப்புயலடித்தே அள்ளி விழுங்கியதே நம் அருமைத் தமிழகத்தை' எனக்கூறி, 

புகழ்மிகு பாண்டியர் புதிய மதுரை கட்டி
மகிழ்வுடன் ஆண்டுவந்தார்  .....
வீர நெடுஞ்செழியன் வெல்லுந் திருவளவன்
சேரன் செங்குட்டுவன்போல் தங்கமே 
சிறந்த நல் வேந்தர்கள் யார்? 

எனக்கூறி மகிழ்கிறார். பின் "வேத பாரதம்' எனும் தலைப்பின்கீழ், பழைய பாரத பூமியின் வரலாற்றை இங்கு வாழ்ந்த கவிகளாகிய வியாசர், சுகர், வால்மீகி, சங்கரர், காளிதாசன், வள்ளுவர், கம்பர் என வரிசைப்படுத்தி, அரசாண்ட மன்னர்களையும், தேசங்களையும், மரபுகளையும் பாடிப் பரவுகிறார். 

தரும விஜயர்- கண்ணன்- சாரதியாக
திருவிலிக் கெளரவர் தீமையைப் பல்லாண்டு
பொறுமையாய்ப் பொறுத்தபின்
போர்செய்து வென்றதைப்
புகலுவோம் தோழீ!

பெளத்த இந்தியா, சந்திரகுப்த ராஜ்யம், இந்து மன்னர்கள், கனிஷ்கர் முதலானோரைக் கூறி, இஸ்லாமிய ஆட்சியின் இந்தியாவையும் விவரிக்கிறார். சரித்திரமல்லவா? 

உண்மைகளை விட்டுவிடக் கூடாதல்லவா?
சந்திரகுப்தன் மகன்-பிந்து
சாரன் புகழ்சிறந்தான்
வந்தனன் அவன் மகனாம்-அசோகன்
வளர்பிறைச் சந்திரன்போல்...
என்றும்; கலைகளும் அறிவும் வளர்ந்து சிறந்திருந்ததை,
விலையில்லா ஞானவெள்ளம்-இந்த
வித்தக நாடெங்கும் விளங்கியதே-சகி!'

என்கிறார். பாரத வீரர் பற்றிய பாடல்கள் மனத்தில் வீரத்தையும் பெருமிதத்தையும் உண்டு பண்ணுகின்றன. வீர சிவாஜியையும், குரு கோவிந்த சிங்கையும் பற்றிய வருணனைகள் ஒவ்வோர் இந்தியரையும் பூரிக்க வைக்கும்.

வீர சிவாஜியென்றால்- சுதந்தர
வேகம் பிறக்குதடீ- சகியே' 
குரு கோவிந்த் சிங்கைப் பற்றி,
தியாகக் கனலினிலே-தெறித்த
தீப்பொறி மின்னலென
வேகமுள்ள குருவின்-சக்தி
வீரத்தை வாழ்த்திடுவோம்! 

எனப் பாடியுள்ளார். மீண்டும் தென்னாட்டுப் பெருமைகளைக் கூறி, விடுதலை தினம் நெருங்கியதென்று உணர்ந்தோ என்னவோ, கும்பினி இந்தியாவின் துயரங்களையும், (அன்றைய) காங்கிரஸின் செயல்பாடுகளையும் கூறுவதுடன், "பூரண சுதந்திரம் புன்னகை புரிகின்ற / பாரத தேசத்தினை - சகியே / பாரெல்லாம் போற்றுதடீ!'  என்று இந்தக் கும்மிப் பாடல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

"இந்தியச் சரித்திரக் கும்மி' எனும் இந்நூலை கவியோகி சுத்தானந்த பாரதியார் மக்களிடையே "தமது ஒன்றுபட்ட பெரிய தாய்த் திருநாடு' தொடர்பான சரித்திர அறிவினை உண்டாக்கவே இயற்றினார் என ஊகிக்க முடிகிறது. ஆகஸ்ட் 15, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், தீர்க்கதரிசி போல முன்கூட்டியே இந்நூலை வெளியிட்டுள்ளது வெகு சிறப்பு.

இந்நூல் மறுபதிப்புக் காணவில்லை எனத் தெரிகிறது. இந்நூல் தமிழ் இணைய நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com