அ. சுப்ரமண்ய பாரதியின் "ஸ்வயம்ப்ரகாச விஜயம்'!

சுவாமி துரியானந்தா என்பவரால் வெளியிடப்பட்டது "ஸ்வயம்ப்ரகாச விஜயம்' என்னும் நூல். இவர் ஸ்வயம் ப்ரகாச ஸ்வாமிகளின் சீடர்.
அ. சுப்ரமண்ய பாரதியின் "ஸ்வயம்ப்ரகாச விஜயம்'!


சுவாமி துரியானந்தா என்பவரால் வெளியிடப்பட்டது "ஸ்வயம்ப்ரகாச விஜயம்' என்னும் நூல். இவர் ஸ்வயம் ப்ரகாச ஸ்வாமிகளின் சீடர். இந்நூலை எழுதியவர் அக்காலத்தில் (1935) பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல பாட நூல்களையும், மத சம்பந்தமான பல நூல்களையும், சில நாடகங்களையும் படைத்துதவிய வரகவி. அ.சுப்ரமண்ய பாரதி.
இவர் (1880-1955) மகாகவி பாரதியாரின் சமகாலத்தவர். இவரும் அக்காலத்தில் "சுதேசமித்திரன்' நாளிதழில் பணியாற்றியுள்ளார். "பாலவினோதினி' என்ற குழந்தைகளுக்கான மாத இதழை சொந்தமாக நடத்தி வந்தவர். இவரது பிரம்மாண்ட படைப்பாக ஜடாவல்லபர், ஸ்வயம்ப்ரகாச விஜயம், ஸ்ரீமத் பாகவதத்தின் தமிழாக்கம், ஆனந்தராமாயணத் தமிழாக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர் இயற்றிய பல நூல்களின் பிரதிகள் கைவசம் இல்லை. சில அச்சேறாமல் உள்ளன. ஆனால், இவரது வேல் வணக்கம், ஆஞ்சநேய ஸ்தோத்திரம், சில முருகன் பாடல்கள் இன்றும் பலரால் பாடப்பட்டு வருகிறது. இவர் 25.3.1955 அன்று தனது 75-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இவர் சேலம், ஸ்ரீதத்தகிரி குகாலயத்தில் எழுந்தருளிய அவதூத ஸ்ரீமத் ஸ்வயம்ப்ரகாசப் பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளைப் பற்றி, அவர்களுடன் சில நாள்கள் தங்கி, பல்வேறு உபதேசங்கள், வாழ்க்கை அனுபவங்களை நேரில் கண்டு உணர்ந்து எழுதியுள்ளார்.
இந்நூலுக்கு முன்னுரையை சுவாமி துரியானந்தாவும், முகவுரையை வரகவி  அ.சுப்ரமண்ய பாரதியும், சிறப்புரையை "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திவான் பகதூர் கே.சுந்தரம் செட்டியாரும் எழுதியுள்ளனர். 560 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1935-ஆம் வெளியிடப்பட்டது.
சுவாமிகளின் உபதேசங்களில் துறவறத்தைக் கைக்கொள்ள விரும்புபவன் எப்படி இருக்க வேண்டும் என்று இந்நூலில் போதிக்கிறார். மேலும்,  மாதா, பிதா, குரு  இவர்களில் பிதாவே முதலில் கெளரவிக்கத்தக்கவர்; அவர் உண்டாக்கியவர். மாதா இரண்டாவதாக கெளரவிக்கத்தக்கவர்; அவள் காப்பாற்றியவள். மூன்றாவதாக குரு கெளரவிக்கத்தக்கவர்; குரு கற்பித்தவர். ஆதலின் முதலில் பிதாவை கண்ணியப்படுத்து. இச்சமயம் ஸ்ரீராமபிரானுடைய சரித்திரத்தை சிந்தித்துக் கொள். பெரியோர்களுடைய ஆசீர்வாதத்துக்குப் பாத்திரமாயிரு. அந்த ஆசீர்வாதம் உனக்கு சகல சித்திகளையும் கொடுக்கும்'' என்கிறார்.
1920-ஆம் ஆண்டு திருக்கோவிலூர் சப்மாஜிஸ்டிரேட் கிருஷ்ணய்யர், அப்போது அங்கு வந்திருந்த ஸ்வயம்ப்ரகாச சுவாமிகளிடம் சரணடைந்து, தனக்கு விருத்தாசலத்துக்கு மாற்றலாகிவிட்டது. எனக்கு அங்கு போவதில் சில கஷ்டங்கள் உள்ளன என்று வேண்டினார்.
சுவாமிகள் விபூதி மந்திரித்தளித்து ""இதனைத் தரித்துக்கொண்டு கலெக்டரைப் பாரும். கலெக்டர் உனக்கு சாதகமாய் உத்தரவு தருவார்'' என்று கூறியனுப்பினார்.
அவரும் அவ்வாறே விபூதி தரித்துக்கொண்டு சென்று கலெக்டரைக் கண்டார். கலெக்டர் எல்லோரும் ஆச்சரியம் அடையும்படி முன் அனுப்பிய தமது உத்தரவை மாற்றி, மீண்டும் திருக்கோவிலூரில் இருக்கும்படி செய்தார்.
மணலூர்பேட்டையில் அன்பர் ஒருவர் சுவாமிகளிடம் ஏதேனும் மந்திரோபதேசம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். சுவாமிகள் நின்ற நிலையில் அவரை கருணையுடன் நோக்கி, ஒரு துண்டுக் காகிதத்தில் "ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே... ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்னும் மந்திரத்தை எழுதிக் கொடுத்து இதை தினமும் ஆயிரம் தடவை சொல்லி ஜபம் செய்யும்'' என்றார். 
இதனால் நீர் பல நன்மைகளை அடைவீர் என ஆசீர்வதித்தார். 
அந்த அன்பர், அந்த மந்திரத்தைப் பலமுறை சொல்லி உருவேற்றி, பின்பு அந்த அன்பர் தன்னை அண்டி வந்த நோயாளிகளுக்கு, இம்மந்திரத்தைச் சொல்லி விபூதி அளிக்க, அவர்கள் நோய் குணமாகிவிடுகிறது என்று சொன்னாராம். 
சுவாமிகள் தம்மை நாடி வரும் சிஷ்யகோடிகளுக்குக் கூறும் உபதேசங்களைத் தொகுத்து மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளில் எழுதிப் படிக்கச் செய்தார்கள். அதில் தெய்வ வணக்கம், ஆலய வழிபாடு, என்ற தலைப்பில் விக்ரஹ ஆராதனம், ஆலயம் என்றால் என்ன? அதன் வடிவம், மஹான்களின் நிலை, விபூதி,  உருத்திராக்கம், ஐந்தெழுத்து மந்திரம் (பஞ்சாட்சரம்) ஆகியவற்றின் மகிமையையும் விளக்கினார்.
""பக்தியின் ஆரம்பமே ஞானம்; முடிவே மோட்சம். ஆகையால் முக்தி அடைய இச்சை கொள்பவர்களுக்கு பக்தியே முதன்மையாகும். ஞானம் என்பது பற்றற்று இருப்பது. பக்தியோ
வெனில் இடைவிடாத அன்பு பிரியாமலிருப்பது. ஆகையால் பக்தினால் கடவுளை சீக்கிரம் அடையலாம். ஞானத்தால் நெடுநாள்கள் செல்லும். ஞானம் புருஷன் போன்றது, பக்தி ஸ்திரி போன்றது. ஞானம் கடவுள், பக்தி கடவுளின் சக்தி. ஞானம் மாறும், பக்தி மாறாது. ஞானத்தைக் காட்டிலும் பக்தியே சிறந்தது. கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர், கோபிகா ஸ்திரீகள், ஆஞ்சநேயர், சபரி, விபீஷணன், ராதை, விதுரன், ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலானோர் பக்தியினாலேயே முக்தி அடைந்தனர்'' என்கிறார்.
நல்லொழுக்கம், குரு வழிபாடு, வந்தனம் செய்வதன் வகைகள், துயில் எழுதல், குளித்தல், சாப்பிடும் முறை, குரு உபதேசத்தின் அவசியம், கல்வியின் மேன்மை முதலியவை குறித்தும் ஸ்வயம்ப்ரகாச சுவாமிகள் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com