ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பு

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று கூறும் தொல்காப்பியர், சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டாகப் பகுத்து, இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இவற்றின் இடமாகத் தோன்றும் என்றுரைக்கிறார்.
ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பு

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று கூறும் தொல்காப்பியர், சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டாகப் பகுத்து, இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இவற்றின் இடமாகத் தோன்றும் என்றுரைக்கிறார். மேலும், செய்யுள் இயற்றுதற்குரிய சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நான்காக வகைப்படுத்தி, செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த பன்னிரு நாடுகளிலும் வழங்கும் சொற்கள் திசைச்சொற்களென்று இலக்கணம் கூறியுள்ளார். 


தொல்காப்பியர் குறிப்பிட்ட திசைச்சொற்களை வட்டார வழக்குச் சொற்களாகக் கருதலாம். வட்டார வழக்குச் சொற்கள் என்பவை அந்தந்த வட்டாரத்திற்கே உரிய சொற்களாகும். அச்சொற்கள் வட்டாரத்திற்கான சிறப்புச் சொற்களாகவும், அவ்வட்டாரத்தில் மட்டும் வழங்கும் இயல்புடையதாகவும் அமையும். வட்டாரத்திற்கென்று உள்ள சிறப்புச் சொற்கள் நேரடியாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளதென்பது அரிதான ஒன்று. செவ்விலக்கியச் சொற்களுள் சில, செவ்வியல் காலப் பொருளுடன் வழக்கில் வழங்கி வருகின்றன. 


சான்றாக, செவ்விலக்கியங்களில் முழு நிலவைக் குறிக்கும் "மதியம்' என்ற சொல் (தண்கதிர் மதியம் போலவும்-புறம். 56; 24, எழுதரு மதியங் கடற்கண் டாஅங்கு - குறுந். 315;1) அப்பொருளுடன் கொங்கு வட்டாரத்தில் இன்றளவும் வழங்கி வருவதையும்,  சிறுபெட்டியைக் குறிக்கக்கூடிய "வட்டி' என்ற செவ்விலக்கியச் சொல் (விதைக்குறு வட்டி போதொடு பொதுள- குறுந். 155; 2, அகன்பெரு வட்டி நிறைய மனையோள் - ஐங். 47; 2) அப்பொருளில் இன்றளவும் நாஞ்சில் வட்டாரத்தில் வழங்கி வருவதையும் அறியலாம்.  

செவ்விலக்கியச் சொற்கள் சில தன் வடிவில் திரிந்தோ, பொருள் வேறுபட்டோ வழக்கில் வழங்கி வருவதைக் காணலாம். அவ்வகையில் "அசும்பு' என்ற சொல்லானது செவ்வியல் இலக்கியங்கள் நாற்பத்தொன்றில் அகநானூறு, புறநானூறு, பரிபாடல், மணிமேகலை ஆகிய நான்கு இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. 


இச்சொல்லானது தன் வடிவத்திற் திரிந்து, அதாவது நிலைமொழியின் முதலில் உள்ள அகரம் ஒகரமாகத் திரிந்து, "ஒசும்பு' என்ற வடிவில் இலக்கியப் பொருளுடன் கொங்கு வட்டாரத்தில் பயன்பாட்டிலுள்ளது. 


அதிக மழை பெய்யும் காலங்களில் தாழ்வான நிலப்பகுதியில் ஏற்படும் நீர்க்கசிவையும், மழை நீரால் நிரம்பிய ஏரி, குட்டை போன்ற நீர்த்தேக்கங்களுக்கு அருகிலிருக்கும் தாழ்வான வயல்களில் ஏற்படும் நீர்க்கசிவையும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. 

ஈங்கிவ ளின்னண மாக இருங்கடல்
வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத் 
தத்துநீ ரடைகரைச் சங்குழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு
விரைமர முருட்டுந் திரையுலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்  
(மணி.8; 1-6)

"பெரிய கடலின் வளைந்த அலைகளால் சூழப்பட்டது மணிபல்லவத் தீவு. இத்தீவு சங்குகளால் உழுது விதைக்கப்பட்ட முத்துக்கள் விளையும் வயல்களை உடையது. வளைந்த, சிவந்த பவளங்களுடன் சந்தனம், அகில் முதலிய நறுமணமுடைய மரங்களை உருட்டுகின்ற அலைகள் உலவும் கடற்கரைப் பரப்பின் நீர்க்கசிவுடைய தாழ்ந்த நிலப்பகுதியில் ஞாழல் மரங்கள் வளர்ந்துள்ளன' என்பது இப்பாடலடிகளின் பொருள். 


மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விடுத்துச் செல்லும்பொழுது அத்தீவின் சிறப்புகளைக் கூறும் இப்பாடற்பகுதி "மணிபல்லவத்துத் துயருற்ற காதை' யின் தொடக்கமாக அமைந்துள்ள பாடலடிகளாகும். இப்பாடலடிகளில் மணிபல்லவத்தீவின் நீர்க்கசிவுடைய தாழ்ந்த நிலப்பகுதியில் ஞாழல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தது கூறப்படுகின்றது. அசும்பிற்கு "நீர்க்கசிவுடைய நிலம்' என்று பொ.வே.சோமசுந்தரனாரும், "சேறு' என்று உ.வே.சாமிநாதையரும் பொருளுரைக்கின்றனர்.


தமிழ்ப் பேரகராதி அசும்பு என்ற சொல்லுக்கு ஊற்று, கிணறு, நீர்ப்பொசிவு, சேறு, சிறுதிவலை ஆகிய பொருள்களையும்; தமிழ் - தமிழ் அகரமுதலி கிணறு, சேறு, நீர்ப்பொசிவு, சிறுதிவலை, வழுக்குநிலம், அசைவு, ஒளிக்கசிவு, பற்று, குற்றம், களை ஆகிய பொருள்களையும் குறிப்பிடுகின்றன.  


மூங்கில்கள் ஒலிக்கும் மலைப்பகுதியில் சுரபுன்னை மரங்களோடு வாழையும் ஓங்கி வளர்ந்திருந்த தாழ்ந்த இடத்தையுடைய நீர் அறாக்குழியில் களிறொன்று அகப்பட்டதாக அகநானூற்றுப் பாடலொன்று கூறுகின்றது. யானை மென்று போட்ட கவளத்தினது கோதுபோல மது பிழிந்து போட்ட கோதுகளிலிருந்து சிதறும் மதுவால் சேறாகும் முற்றத்தையுடையது பாரியின் பறம்பு மலையென்று புறநானூற்றில் பறம்பு மலைச் சிறப்பை கபிலர் பாடுகின்றார்.


கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்  


(அகம்.8: 9)


ஈண்டுநின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை
சென்றுநின் றோர்க்குந் தோன்று மன்ற
களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே
 

(புறம்.114; 1-6) 

"அசும்பு' என்ற செவ்விலக்கியச் சொல் அச்சொல்லுக்கான பொருளுடன் தன் வடிவிற்திரிந்து இன்றளவும் மக்களிடையே வழங்கிவருவது சிறப்பிற்குரியது. செவ்விலக்கியச் சொற்கள் தம் வடிவம் அல்லது பொருளில் மாறுபட்டாலும் நம்மிடையே காலந்தோறும் வழங்கிவருவதைக் காணமுடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com