புலவர்களின் "கவி' விளையாட்டு!

"தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலில் புலவர்கள் பலர் பாடிய வியக்கத்தக்க பாடல்கள் உள்ளன.
புலவர்களின் "கவி' விளையாட்டு!

"தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலில் புலவர்கள் பலர் பாடிய வியக்கத்தக்க பாடல்கள் உள்ளன.  ஒற்றெழுத்தின்றி பாடல் புனைவது,  குறில் எழுத்துகளாலேயே பாடல் புனைவது,  மாலை மாற்றுப் பாடல்,  நெடில் எழுத்துகளைக் கொண்டே பாடல் புனைவது என்று கவி விளையாட்டு விளையாடுவதில் கைதேர்ந்தவர்கள் நம் தமிழ்ப் புலவர்கள். 

ஒற்று எழுத்தும், துணைக்கால் எழுத்துமின்றி குறில் உயிர்மெய் எழுத்துகளாலேயே புனையப்பட்ட பாடல் இது:

அமல  லகல   மகல லபய
கமல   பவன  மவள
வமல  டமர  வளக
வதன  மடர  மதன

எனும் இப்பாடலை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. இதன் பொருளாவது: மன்மதன் நிகர்த்த அபயச்சோழ மன்னனே! பரந்த தோள்களையுடயவன் நீயே; தாமரை மலரை இடமாகக் கொண்ட திருமகளைப் போன்ற கருமை படர்ந்த, சிறப்புமிக்கக் கூந்தலை உடைய இவளின் அழகிய முகம் வாடாதிருக்கப் பார்த்துக் கொள்வாயாக! மேற்கண்ட நான்கு வரிகளில் எங்குமே ஒற்றெழுத்தோ, துணைக்கால் எழுத்தோ இல்லை என்பதுதான் இச்செய்யுளின் சிறப்பு.

அடுத்து, எல்லா எழுத்துகளும் நெடிலாகவும், துணைக்கால் பெற்றும், ஒற்றெழுத்தில்லாமலும் அமைந்துள்ள பாடல் வருமாறு:  

தாயா யாளாரா யாடாமா றாதாரா
யாமாரா வானாடா மாதாமா - வா வா
யாவாகா லாகாவாகா காணா நாமா
மாலாறா மாநாதா வா!

இப்பாடலின் பொருள்: விண்ணுல நாட்டினை ஒத்த புகழ்பெற்ற நாட்டினை உடையவனே! இங்குள்ள மாதானவளின் (மாது-பெண் ஆனவள்) துன்பத்தைத் தாயானவள் அறியவில்லை. அவளின் இணையான நீ வந்தால் அவளுக்குக் கிடைக்காதது ஏது? அவள் துன்பத்தைப் போக்கி எங்களைக் காப்பாற்றுவாயாக! நீ வரும்போது காலாறி, இளைப்பாறி வருக. எங்களுக்கு அச்சமும், மயக்கமும் உண்டாகா வண்ணம், காக்கும் பெருமைக்குரிய இறைவனே நீ வருவாயாக! இப்பாடல் முழுதும் நெடில் எழுத்துகளாலேயே அமைந்துள்ளது.

தனிப்பாடல் திரட்டில் புலவர்கள் பலருடைய பெயர்கள் காணப்படவில்லை. ஆனால், வியக்கத்தக்க வகையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு நுட்பமான பாடல்களைப் படைத்துள்ளனர். இப்பாடல்கள் நமக்குக் கிடைத்தப் "பாட்டுப் புதையல்' என்றே கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com