பாரதி காண விழைந்த திருக்கோலம்!

மகாகவி பாரதி "சுதேசமித்திர'னில் வெளிவந்த தனது முதல் கவிதையிலேயே பாரத மாதாவை நோக்கி, "கண்ணின் நீர் துடைப்பாய், புன்னகை கொள்வாய் பரதப் பெருந்தேவியே' எனப் போற்றிய வரலாறு தொடங்கிவிடுகிறது.
பாரதி காண விழைந்த திருக்கோலம்!


மகாகவி பாரதி "சுதேசமித்திர'னில் வெளிவந்த தனது முதல் கவிதையிலேயே பாரத மாதாவை நோக்கி, "கண்ணின் நீர் துடைப்பாய், புன்னகை கொள்வாய் பரதப் பெருந்தேவியே' எனப் போற்றிய வரலாறு தொடங்கிவிடுகிறது. இருபத்துமூன்றாம் வயதில் பாரதத் தாயைப் போற்றத் தொடங்கிய பாரதித் தனயனின் கவிதைப் பயணம் மண்ணுலக வாழ்விலிருந்து விடுபட்ட முப்பத்தொன்பதாம் வயதுவரை தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றது.

பாரதியின் இறுதிக் கவிதையாக "சுதேசமித்திர'னில் இடம்பெற்ற  "இந்தியாவின் அழைப்பு' கவிதையிலும் இந்தியாவைத் "தாயே' என விளித்தும் "மாதா' என மொழிந்தும் பாரத மாதாவைப் போற்றிய நிலையை நாம் காண்கின்றோம். எனினும்,  அந்த இறுதிக் கவிதை ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை என்பதால் பாரதியின் உள்ளத்துணர்வை உணரமுடிகின்றபோதிலும், அவர்தம் சொந்தக் குரலை நம்மால் அதில் கேட்க இயலவில்லை. இப்போது கண்டறியப்பட்டுள்ள புதிய செய்தியால், ஆதாரத்தால் பாரதியின் இறுதிக் காலத்தில் ஒலித்த சொந்தக் கவிதைக் குரலும் பாரத மாதாவை மையமிட்டதே என்னும் உண்மை வெளிச்சம் பெறுகின்றது.

வாழ்க்கைப் பரப்பெங்கும் பாரதி பாரத மாதாவின் பெருமையை இசைத்திருக்கின்றார். பாரத தேவியின் திருத்தசாங்கம், பாரத தேவியின் அடிமை, பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி, பாரத தேசம், பாரத நாடு, பாரத சமுதாயம், பாரத மாதா என்றெல்லாம் பாரதம் போற்றித் தன் "பா' ரதத்தைச் செலுத்தியிருக்கின்றார். பாரதியின் பத்தாண்டுகால புதுவை வாழ்க்கை புகலடைந்த வாழ்க்கை. புகழடைந்த படைப்புகளின் வாழ்க்கையும்கூட. காலங்கள் உருண்டோடப் புதுவையிலிருந்து வெளியேறினார் பாரதி. கடலூருக்கு அருகில் கைதானார்; விடுதலை பெற்றார்; வெள்ளை அரசாங்கத்தின் சில நிபந்தனைகளை ஏற்றார்; கடையம் உள்ளிட்ட சில இடங்களில் வசிக்கவும், தன் எழுத்துகளை வெளியிட அரசாங்கத்தின் ஒப்புதல் பெறவும் ஒப்புக்கொள்ளும் நெருக்கடி நேர்ந்தது. இது வரலாற்று உண்மை. ஆனால், சிலர் இதனையே வாய்ப்பாகக்கொண்டு கைதாகி விடுதலை பெற்றபின் பாரதி விடுதலைப்பண் பாடவில்லை; வீறுகொண்டு முழங்கவில்லை என எழுதுகின்றனர்; பேசுகின்றனர். 

இந்திய விடுதலைப் பொருண்மையில் கவிதைகள் படைத்தல் என்பது ஒருபுறமிருக்க, இந்தப் பிந்தைய காலகட்டத்தில்தான் பாரதி தமிழகம் தழுவிய நிலையில் பயணங்கள் பல மேற்கொண்டு தேசபக்தியை ஊட்டும் வகையில் - விடுதலை இயக்க உணர்வை வீறுகொள்ளவைக்கும்  நிலையில் கூட்டங்களில் பங்கேற்றுச் சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கின்றார்; உரைநடை எழுத்தோவியங்களைத் தீட்டியிருக்கின்றார். அவர் எழுதிய பாரத ஜனசபை என்னும் காங்கிரஸ் மகாசபையின் சரித்திர நூலின் இரண்டாம் பாகம் 1920-இல்தான் வெளிவந்தது.

ஆங்கிலேய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறவேண்டும் என்னும் கட்டுப்பாடு நீங்கியபின் ஆங்கிலேய அரசாங்கத்தின் விரோதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்று எண்ணாமல், இந்திய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் பாரதி பங்கேற்கத் தொடங்கினார். தேச விடுதலையை மையமிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மணலி குலோத்துங்கன் வாசகசாலையில் "இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலைமையும்' என்னும் பொருளில் இரண்டு மணிநேரம் பேசினார்.

சென்னைக் கடற்கரையில் கூடிய ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான கூட்டத்தில் பேசினார். கடலூரிலே "தற்கால நிலைமையும் நமது கடமையும்' என்ற தலைப்பிலே உரையாற்றினார். சென்னைக் கடற்கரையில் ஸ்வராஜ்ய வாரக் கொண்டாட்டக் கடைசி நாளில் நிறைவாகப் பேசினார். திருவண்ணாமலையில் முதல்நாள் "இந்தியாவின் எதிர்கால நிலைமை' பற்றியும், மறுநாள் "இந்தியாவின் தற்கால நிலைமை' பற்றியும், ஈரோட்டிலே "இந்தியாவின் எதிர்கால நிலை' பற்றியும் எனப் பல உரைகளை ஆற்றியிருக்கின்றார்.

1918 நவம்பர் 20-இல் கைதான பாரதி விடுதலை பெற்ற நாள் 1918 டிசம்பர் 14-ஆம் நாள் ஆகும். கவிதைப் படைப்பு முயற்சிகளைப் பொறுத்தவரை விடுதலை பெற்ற காலத்திற்குப் பின்  1919-ஆம் ஆண்டு பாரதியார் எட்டயபுரம் ஜமீன்தாருக்குச் சீட்டுக்கவிகள் எழுதுகின்றார்; 1917-ஆம் ஆண்டு வெளிவந்த "நாட்டுப் பாட்டு' நூலின் மறுபதிப்பு 1919-ஆம் ஆண்டு வெளிவருகின்றது. இந்த மறுபதிப்பிலே பாரத தேசத்தை மையமிட்டதாக ஒரு பாடலே புதிதாகச் சேர்ந்ததாக வரலாறு காட்டுகின்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பும் சீனி. விசுவநாதன் பதிப்பும் இந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புப் பாடலைத் தவிர வேறு பாடல்களைக் கால வரிசையில் காட்டவில்லை. காட்டும் வகையில் ஆதாரங்கள் பதிப்பித்தோருக்குக் கிட்டவில்லை. எனினும், இந்தக் காலப்பரப்பில் மகாத்மாவின் தமிழக வருகையை ஒட்டியும் ஒத்துழையாமை இயக்கத் தோற்றத்தை ஒட்டியும் எழுந்ததாக எண்ண இடம்தரும் "மகாத்மா காந்தி பஞ்சகம்' பாடலும், "பாரத மாதா நவரத்ந மாலை'  கவிதையும் காணக்கிடைக்கின்றன. 1920-இல்  திலகர் மறைவையொட்டி "வாழ்க திலகன் நாமம்' பாடல் எழுகின்றது. 

புதுவையிலிருந்து விடைபெற்ற பின்னர் பாரதி அதிகம் கவிதைகள் புனையவில்லை என்னும் உண்மை ஒருபக்கமும், எழுதிய கவிதைகளும் இந்திய விடுதலையை மையமிட்டனவாக அதிகம் காணப்படவில்லை என்னும் உண்மை மறுபக்கமுமாக வரலாற்றில் தோன்றுகின்றன. "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் இறப்பதற்கு முன் எழுதிய படைப்பாகிய பாரதியார் திரைப்படத்திற்கான கதை  உரையாடலிலே புதுவையிலிருந்து வெளியேறிய பின் சென்னை வாழ்க்கைக் காலத்தில் பாரதியார் அதிகம் கவிதைகள் புனையவில்லை என்னும் உண்மையை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார். 

தன் நண்பர் காசி ஈ.லக்ஷ்மண் பிரசாத் நடத்திய "கற்பகம்' பத்திரிகைக்காகப் பாரதியின் புகைப்படத்தைப் பெற்றுச்செல்ல சென்னை வந்த பாரதிதாசன், பாரதியாரோடு தான் பேசுவதாக அமைந்த உரையாடலில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சுப்பு: புதுவையை விட்டு நீங்கள் சென்னைக்குப் போனவுடன் கவிதைகளை எழுதிக் குவிப்பீர்கள். அவை புத்தகமாக வெளிவந்துகொண்டிருக்கும் என்று எண்ணி மகிழ்ந்திருந்தேன். இவ்வளவு காலமாயிற்று. நீங்கள் சென்னைக்கு வந்து எழுதிய கவிதைகள் மிகச் சில!

பாரதி: ஏன் வந்தோம் புதுவையை விட்டு என்று நான் ஒவ்வொரு நிமிஷமும் எண்ணி வருந்துகிறேன்.

(பாட்டுப் பறவைகள்: பாரதி - பாரதிதாசன் (விளக்கநூல்))

இந்தக் குறிப்பு உணர்த்தும் செய்தி உண்மைதான். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போல இலக்கியங்களையோ, அதிகம் தனிப்பாடல்களையோ அவர் பிந்தைய வாழ்க்கையில் படைக்கவில்லைதான்.

இப்போது கவனம்பெற்றுள்ள ஒரு செய்தியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஓர் ஆதாரமும், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலைபெற்றதன் பின்பு இறப்பு வரையிலான காலத்தில் இந்திய விடுதலையை மையமிட்டு அதிகம் கவிதைகள் படைக்கவில்லை என்றபோதிலும், தமிழ் இலக்கிய மரபில் "நூல்' எனவும், "பிரபந்தம்'  எனவும் கொள்ளப்பெறும் படைப்பொன்றையே இந்திய விடுதலையை மையமிட்டு பாரதியார் இயற்றியிருக்கின்றார் என்னும் உண்மையைப் புலப்படுத்தியுள்ளன. 

இப்பொழுது நம் கைகளில் புழங்கும் பாரதியார் பாடல் தொகுதிகளில் ஒரு கவிதை என்ற அளவில் காட்சி தருவது "பாரத மாதா நவரத்ந மாலை' என்னும் படைப்பாகும். இந்தக் கவிதை எழுதப்பட்ட காலம் இதுவரை பாரதியியலில் உறுதி செய்யப்படவில்லை. எனினும் பாரதியோடு இளவயதில் புதுச்சேரியில் பழகிய ஸ்வாமிநாத தீக்ஷிதரின் மகன் குஞ்சிதபாதம் என்பவர் 1921-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி பாரதியாரின் கையொப்பத்துடன் "ஸ்ரீபாரத மாதா நவரத்ந மாலை' வெளிவந்தது என்னும் செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த அரிய செய்தி பாரதியியலில் உரிய கவனத்தைப் பெறவில்லை. இந்தச் செய்தியின் அடிப்படையில் மேற்கொண்ட தேடலின் விளைவாக  "ஸ்ரீ பாரத மாதா நவரத்ந மாலை'யின் மூலவடிவம் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மூலவடிவத்திலிருந்து இப்போதுள்ள பதிப்புகள் அனைத்திலும் இடம்பெற்றுள்ள பாடலின் சில இடங்கள் மாறி, பிழையாக இடம்பெற்றுள்ளன. இவையெல்லாம் எதிர்காலத்தில் சரிசெய்யப்பட வேண்டும். இந்த மூலவடிவம் பாரதியார் உயிரோடு இருந்த காலத்திலேயே பிரசுரமாகியுள்ளது. நூலுக்குள் ஒருமுறையும் அடிக்குறிப்பில் ஒருமுறையுமாக இருமுறை பாரதியார் இதனை "நூல்' என்றே குறிப்பிட்டுள்ளார். "சென்னை 1921 ஜூலை' என்னும் இட, நாள் குறிப்போடும், "சி. சுப்பிரமணிய பாரதி' என்னும்  பெயர்ப்பொறிப்போடும் இதனை பாரதி வெளிவரச் செய்திருக்கின்றார்.

இந்தக் கவிதை இன்று தனிக் கவிதையாகக் கருதப்பட்டாலும் இது பாரதி படைத்த ஒரு பிரபந்த இலக்கியமாகும். நவமணிமாலை என்னும் பிரபந்த இலக்கியமே பாரதியாரால் "நவரத்ந மாலை' என அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன் பாரத மாதாவின் மேல் இயற்றப் பெற்றிருக்கின்றது. இதற்கு முன்பும் பாரதியார் பாரத மாதாவைப் போற்றி இருபத்தாறாம் வயதில் "பாரத தேவியின் திருத்தசாங்கம்' என்னும் பிரபந்தத்தையும் இருபத்தெட்டாம் வயதில் "பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி' என்னும் பிரபந்தத்தையும் பாடியிருக்கின்றார்.

புதியனவற்றில் கண்செலுத்தியபோதிலும் பாரதி பண்டைய தமிழ்க் கவிதை மரபுகளைக் கைநெகிழ்த்துவிடவில்லை என்பதற்கு இந்தப் படைப்பும் ஓர் அரிய சான்றாகின்றது. பழைய பிரபந்த முறையிலே இந்திய விடுதலையை மையமிட்டு, பாரத மாதாவைப் போற்றி இதனை பாரதியார் படைத்திருக்கின்றார். இந்த "நவரத்ந மாலை' என்னும் சிறு நூலை, கணபதி காப்பு வெண்பா நீங்கலாக ஒன்பது பாடல்களால் இயற்றியுள்ளார். ஒன்பது பாடல்களும் ஒன்பது யாப்பு வடிவங்களில் அமைந்துள்ளன.

இந்தப் பிரபந்த வகையின் தலைப்புக்கேற்ப நவ மணிகளின் பெயர்களையும் அதே பொருளிலும், சிலேடைப்பொருளிலும் பாரதியார் பயன்படுத்தியிருக்கின்றார். இது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூலின் பாடல்கள் அந்தாதியாக அமைக்கப்பெற்றுள்ளமை மேலும் ஒரு சிறப்பாகும்.

பாரத மாதாவைப் போற்றும் இச்சிறு நூலில் காந்தியடிகளின் புகழ் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது. தாகூர் காந்தியடிகளைக் குறித்து "புவி மிசை இன்று மனிதர்க்கெல்லாம் தலைப்படு மனிதன், தர்மமே உருவாம், மோஹன தாஸ கர்ம சந்த்ர காந்தி' என்று போற்றியதை பாரதி எடுத்துக்காட்டுகின்றார். காந்தியடிகள் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கத்தை இந்நூலிலே "தீது சிறிதும் பயிலாச் செம்மணி மாநெறி கண்டோம்' என்று போற்றுகின்றார்.

பாடலில் இடம்பெறவில்லை எனினும், "செம்மணி மாநெறி' என்பதற்கு அடிக்
குறிப்பில் "ஒத்துழையாமை' என்று விளக்கத்தைத் தந்திருக்கின்றார் பாரதி. காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தைப் போற்றும் நோக்கத்தை இச்சிறு நூல் முதன்மையாகக் கொண்டுள்ளது.

ஒத்துழையாமை இயக்கம் தமிழ் மண்ணில் பேரியக்கமாக உருவெடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பாரதியார் தன் சொற்பொழிவுகளால், உரைநடை எழுத்துகளால், கவிதைப் படைப்பால் என முப்பரிமாண நிலையில் முன்னின்று செயல்பட்டிருக்கின்றார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன. 

"ஒத்துழையாமை இயக்கத்தில் உள்ளூர ஈடுபாடு இல்லாததுபோல் காணப்படும் "சுதேசமித்திர'னில் இந்தச் சமயத்தில் நெடுங்காலத்துத் தேசாபிமானியாகிய நீர் வேலையில் சேர்ந்தது நியாயமா?' எனக் கேட்ட நண்பர்களுக்கு விடையளித்து 30.11.1920-இல் எழுதிய கட்டுரையில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான இருதரப்பு எண்ணங்களையும் விரிவாக அலசிய பாரதியார், "பாரத மாதாவின் ராஜரீக விலங்குகளை நீக்கி, விடுதலை யேற்படுத்திக் கொடுக்கப் போகிற ஸதிதினம் - நல்ல நாள் - எப்போது வரப்போகிற தென்பதை ஒவ்வொரு நிமிஷமும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறேன்' என இந்தியாவின் விடுதலை நாளை எதிர்பார்த்து, தான் காத்திருப்பதை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். 

அடுத்த இரு மாதங்களில் 31.01.1921-ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் ஒத்துழையாமை இயக்கப் பெருங்கூட்டம் கூடியபோது, பத்தாயிரம் மக்கள் மத்தியில் பாரதியார் சுயராஜ்யம் கிடைக்க வேண்டுமென உருக்கமாகவும் வீராவேசத்துடனும் கர்ஜித்திருக்கிறார் என்பது சுதேசமித்திரன் பதிவு. 

அடுத்த ஐந்து மாத நிறைவில் 08.07.1921-இல் ஒத்துழையாமையைச் செவ்விய, அழகிய, பெரிய நெறி என்றும்  கெடுதலில்லாத கிளர்ச்சி என்றும் "பாரத மாதா நவரத்ந மாலை'யில் கொண்டாடி வரவேற்று முன்னெடுக்கின்றார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் மெல்ல மெல்லத் தலைப்பட்டு, பாரதி முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளுகின்ற வரலாற்றை இந்தச் செயல்பாடுகளெல்லாம் உறுதி செய்கின்றன. திலகர் யுகத்தில் மலர்ந்த ஆவேசக் கிளர்ச்சிக் கவிஞர் காந்தி யுகத்தின் கனிந்த முன்னோடிக் கவியரசராக வடிவம் கொள்கின்றார் என்பதை இந்த வரலாற்றில் நாம் தரிசிக்கின்றோம்.

தன் கவிதைப் பயணத்தில் "முப்பதுகோடி வாய் முழங்கவும்' (வந்தே மாதரம்), "முப்பதுகோடி முகமுடையாள்', "முப்பதுகோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுஉடைமை' என்றெல்லாம் பாடிவந்த பாரதியார் இந்த நூலில் பாரத நாட்டு மக்களின் எண்ணிக்கையை முப்பத்திரண்டுகோடி எனக் குறிப்பிட்டிருக்கின்றார். "வீரர் முப்பத்திரண்டு கோடி விளைவித்த பாரத மாதா' என்று அவர் குறிப்பிடுவது மக்கள்தொகைப் பெருக்கத்தையும் கவனத்தில் கொண்ட குறிப்பு என்று கூறல் தகும். 

"வேதனைகள் இனி வேண்டா விடுதலையோ திண்ணமே', "திண்ணம் விடுதலை திண்ணம்', "காண்பார் விடுதலை கணத்தினுள்ளே', "நாட்டினர்க் கெல்லாம் துயர்கெட விடுதலை அருளி' என்றெல்லாம் விடுதலையை மையமிட்டே பாரதி இந்நூலில் முழங்குகின்றார். பாரதியின் இறுதிக்கால வரலாற்றில் கூடுதலான கவனத்தைப் பெறவேண்டிய கவிதை இலக்கிய ஆவணம் இச்சிறுநூல். காலமும் மூலமும் இப்போது கண்டறியப்பட்டுள்ளதால், பாரதிய வரலாறு மேலும் துலக்கம் பெறுகின்றது.

இச்சிறு நூலின் நிறைவுப் பாடலில் பாரத தேவியின் திருக்கோலத்தை தான் கண்டு மகிழ்ந்திடுமாறு, பாரத மாதாவைக் கண்முன்னே வருமாறு பாரதி வேண்டுகின்றார். கவிதை வாழ்வின் தலைநாள்களில் பாரத தேவியை நோக்கி, "புன்னகை கொள்வாய்' என மொழிந்தவர், இறப்பதற்கு இரு மாதங்கள் முன்பும் காண விழைந்த கோலமும் மணிநகை புரியும் விடுதலைபெற்ற பாரத தேவியின் திருக்கோலமே.

புதுவையைவிட்டு வெளியேறியபோது கைதான சூழலில் ஆங்கிலேயராட்சிக்கு எழுதிக்கொடுத்த ஒப்பந்தம் என்னும் தற்காலிகத் தடையால் இந்திய விடுதலை என்னும் தன் வாழ்நாள் லட்சியத்தை விட்டுக்கொடுத்து விடாமல் தொடர்ந்து இறுதிவரை பாரதி விடுதலைமுரசு கொட்டியிருக்கின்றார் என்பதைக் கிடைத்துள்ள புதிய ஆதாரங்களும் வரலாற்றின் பக்கங்களும் உறுதிசெய்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com