இந்த வாரம் கலாரசிகன் - (12-12-2021)

இப்போது, அப்போது என்று தள்ளிப் போய்க்கொண்டிருந்த "இந்த வாரம்' தொகுப்பு அச்சுக்குப் போக தயாராகிவிட்டது.
இந்த வாரம் கலாரசிகன் - (12-12-2021)

இப்போது, அப்போது என்று தள்ளிப் போய்க்கொண்டிருந்த "இந்த வாரம்' தொகுப்பு அச்சுக்குப் போக தயாராகிவிட்டது. ஆறு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் கலாரசிகனின் "இந்த வாரம்' தொகுப்புக்குத் தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியம், தமிழண்ணல், தெ.ஞானசுந்தரம், "சிலம்பொலி' செல்லப்பன், இரா. இளங்குமரனார், ஒளவை நடராசன் ஆகியோர் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்திருக்கிறார்கள். 

தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை "தமிழ்மணி' பகுதியில் வெளிவந்த "இந்த வாரம்' பகுதியின் தனிச்சிறப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட புதிய இளம் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருப்பது. எனது எழுத்துலகப் பணியின் தலைசிறந்த பங்களிப்பு என்று அதைத்தான் நான் கருதுகிறேன்.

ஆறு தொகுதிகள் கொண்ட தொகுப்பாக மட்டுமே "இந்த வாரம்' விற்பனை செய்யப்படுகிறது. தனித்தொகுதியாக விற்பனை இல்லை. ஆறு புத்தகங்கள் அடங்கிய தொகுப்பின் விலை ரூ.2,400. இப்போது முன் வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் சலுகை விலையாக ரூ.1800-க்கு வழங்கப்படுகிறது. "தினமணி' நாளிதழில் வெளிவரும் விளம்பரங்கள், "மீனாட்சி பப்ளிகேஷன்ஸ்' என்கிற முகநூல் பக்கம், 9095626320 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணில், முன்பதிவு செய்வது குறித்த விவரங்களைப் பெறலாம்.

இத்தனை நாள்கள் தள்ளிப்போடப்பட்டு வந்த "இந்த வாரம்' தொகுப்பு குறித்த அறிவிப்பு, பாரதியாரின் பிறந்த நாள் அன்று வெளிவந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும். எட்டயபுரம் செல்ல முடியவில்லை என்கிற ஆதங்கத்துக்கு இது வடிகால்.

------------------------------------------------------------------------

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தெரியும். அதேபோல, "ஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்' என்கிற அமைப்பு இருக்கிறது என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பே தன்னுடைய பெயர்த்தி திருமணம் குறித்து பிரபல ஜோதிடர் பெரியவர் ஏ.எம்.ராஜகோபாலன் எனக்குத் தெரிவித்திருந்தார். அவரைப் பொறுத்தவரை நான் அவருடைய மகன்களில் ஒருவன். என்னை அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் கருதுவார்கள். 

அதிகாலை நேர முகூர்த்தம் என்றால், என்னால் குறித்த நேரத்துக்கு வர முடியாது என்று என்னைத் தெரிந்தவர்கள் மத்தியில் புரிதல் இருப்பதால், தாமதமாக நான் போனாலும் யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த வகையில் நான் அதிருஷ்டசாலி. ஏ.எம்.ஆர். இல்லத் திருமணத்துக்கும் அப்படித்தான் என்பதை சற்று நாசூக்காகத் தெரிவிக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஏ.எம்.ஆர். நரசிம்மனின் மகள் பவித்ரா - ஸ்ரீராமன் திருமண நிகழ்வுக்குப் போயிருந்தபோது, மணமகனின் தந்தை வந்திருந்த முக்கியமான நண்பர்களுக்கு ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கிக் கொண்டிருந்தார். அடியேனுக்கும் அந்தப் புத்தகம் வீரராகவாசாரியரால் தரப்பட்டது. அந்தப் புத்தகத்தின் பெயர் "108 வைணவ  திவ்யதேச ஸ்தல வரலாறு'. அந்தப் புத்தகம் ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கும் அந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தை எழுதித் தொகுத்திருப்பவர்  டாக்டர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் என்பவர். அவர் பத்திரப் பதிவுத் துறையில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் என்று மணமகனின் தந்தை என்னிடம் தெரிவித்தார். ஆழ்வார்கள் வரலாறு, திருப்பாவை விளக்கம், இராமானுஜரின் மகிமை, திருக்கோட்டியூர், திருநாங்கூர் 11 திவ்ய தேசம் முதலிய புத்தகங்களையும் அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப் புத்தகம் சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் திவ்ய தேசங்கள் பற்றி மட்டுமல்ல, வைணவம் குறித்தும், வைணவ வாழ்க்கை முறை குறித்தும், வைணவ வழிபாட்டு முறைகள் குறித்தும் தெளிவுபடுத்துகிறது என்பதுதான் சிறப்பு. "தூய வைணவர்கள் பத்துப்பேர் குழுமியிருக்கும் இடம் ஒரு திவ்ய தேசத்துக்கு சமம்' என்பார்கள். 108 திவ்ய தேசம் குறித்த புத்தகம் இருக்கும் இடமும்கூட அப்படியே என்று சொல்லத் தோன்றுகிறது.

1995-இல் முதற்பதிப்பு கண்ட "108 திவ்ய தேச ஸ்தல வரலாறு' இதுவரை 11 பதிப்புகள் கண்டுவிட்டது. சிறந்த ஆன்மிக நூலுக்கான தமிழக அரசின் முதல் பரிசையும் இது பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு வைணவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது என்பதைவிட, வைணவம் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பதுதான் சரியாக இருக்கும். 

எந்தவொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு என்பார்கள். பவித்ராவின் திருமண நிகழ்வுக்கு நான் தாமதமாகப் போனதற்கு ஒரு காரணம் இருந்திருக்கிறது - எனக்கு ஆ. எதிராஜனின் "108 திவ்ய தேச ஸ்தல வரலாறு' 
புத்தகம் கிடைத்தது!

 ------------------------------------------------------------------------

ஈரானில் உள்ள நிஷாபூரில் 1048-ஆம் ஆண்டு பிறந்த "அபுல் ஃபத்தஹ் உமர் இப்னு இப்ராஹீம் அல்கய்யாம்' என்றால் அவரை யாருக்கும் தெரியாது. ஆனால், "உமர் கய்யாம்' என்றால், அவரைப் படித்திராதவர்கள்கூட "பாரசீகக் கவிஞர்' என்று அடையாளம் காண்பார்கள். 

தமிழில் "நாலடியார்' போல பாரசீகத்து நாலடியார்தான் உமர்கய்யாம் எழுதிய "ருபாயியாத்'. ஏறத்தாழ 100 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த உமர்கய்யாமை மதுவும் மங்கையுமாக உலவிய உல்லாசக் கவிஞர் என்று நினைத்தால், அது அவரது கவிதைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் தத்துவங்களைப் புரிந்து கொள்ளாத குற்றமே தவிர, அவருக்கு  அதனால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. 

அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் ருபாயியாத்தை "மதுஷாலா' என்ற பெயரில் இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். உமர்கய்யாமின் "ருபாயியாத்' ஏன் தமிழில் சரியான மொழியாக்கத்துடன் வெளிவரவில்லை என்றால், அதற்கான நபரை ஆண்டவன் அனுப்பாமல் இருந்ததுதான். தமிழ், ஆங்கிலம், அரபு, பாரசீகம், உருது ஆகிய ஐந்து மொழிப் புலமை பெற்ற நாகூர் ரூமிக்காக அது காத்திருந்தது. இப்போது வெளியாகியிருக்கிறது.

நாகூர் ரூமியின் 58-ஆவது நூல்; அவர் தமிழாக்கம் செய்யும் 11-ஆவது நூல். எட்வர்டு ஃபிக்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழியாக்கத்தை சாராமல் உமர்கய்யாமின் ருபாயியாத்தை  பாரசீகத்திலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் நாகூர் ரூமியால் அதன் ஜீவனை உணர முடிந்திருப்பதுதான் அவரது வெற்றி!

------------------------------------------------------------------------

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது கீதாபிரபுவின் "பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை -  "நிறைவு'.

பஞ்சு மிட்டாயில்
மனம் பூரித்துச் சிரிக்கும்
ஏழை மழலையின் முன்
தோற்றுவிடுகிறது...
பணக்காரர்களின்
பர்கர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com