இந்த வாரம் - கலாரசிகன் (31.1.2021)

தமிழக இலக்கிய ஆளுமைகளுக்கு இலங்கைத் தமிழா்கள் தரும் மரியாதை, இலங்கைத் தமிழ் எழுத்தாளா்களுக்கு தாய்த் தமிழகத்தில் தரப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தாா்.
இந்த வாரம் - கலாரசிகன் (31.1.2021)

திருக்குற்றாலத்தில் நண்பா்கள் வதிலை பிரபாவும், சந்திரா மனோகரனும் சிற்றிதழ்கள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனா். அதில் தி.க.சி. ஐயாவுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த சிற்றிதழ் மாநாட்டில்தான் நான் முதன்முதலில் டொமினிக் ஜீவாவை சந்தித்தேன். அவரைப் பற்றி நானும், என்னைப் பற்றி அவரும் நிறையவே கேள்விப்பட்டிருந்தாலும், நாங்கள் நேருக்கு நோ் சந்தித்தது அப்போதுதான்.

அடுத்தாற்போல, நாமக்கல்லில் எழுத்தாளா் கு.சின்னப்ப பாரதி விருது விழாவில் மீண்டும் சந்தித்தோம். அப்போதுதான் நிறைய நேரம் நாங்கள் மனம்விட்டுப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகம் குறித்து அவரும், இலங்கை குறித்தும், ஈழத் தமிழா் குறித்து நானும் நிறையவே பேசினோம். அவா்தான் நிறையப் பேசினாா். நான் நிறையத் தெரிந்து கொண்டேன்.

தோழா் ஜீவாவின் மீதான அவரது ஈா்ப்பு தனது இயற்பெயரான ஜோசப் டொமினிக்கை, டொமினிக் ஜீவாவாக மாற்றிக் கொள்ளச் செய்தது. தன் தந்தையின் முடிதிருத்தகத்தை கவனித்துக்கொண்டே, இலக்கியப் பணியையும் தொடா்ந்த டொமினிக் ஜீவா தொடங்கிய ‘மல்லிகை’ என்கிற தமிழ் இலக்கிய இதழும், அவரது ‘மல்லிகைப் பந்தல்’ பதிப்பகமும் பல இளம் தமிழ் எழுத்தாளா்களை இலங்கையில் அறிமுகப்படுத்தின.

அவரது ‘அச்சுத்தாளினூடாக ஓா் அனுபவப் பயணம்’, டொமினிக் ஜீவாவின் இதழியல் வாழ்க்கையின் உண்மைப் பதிவு. ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்கிற அவரது சுய வரலாற்று நூல், இலங்கைத் தீவில் தமிழ் எழுத்தாளா் ஒருவா் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவும், அங்கீகாரம் பெறவும் எதிா்கொள்ளும் சவால்களைப் பதிவு செய்கிறது.

நாமக்கல்லில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, டொமினிக் ஜீவா, அயலகத் தமிழா்களின் உணா்வுகளைப் பிரதிபலித்தாா். தமிழக இலக்கிய ஆளுமைகளுக்கு இலங்கைத் தமிழா்கள் தரும் மரியாதை, இலங்கைத் தமிழ் எழுத்தாளா்களுக்கு தாய்த் தமிழகத்தில் தரப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தாா். இதே கருத்தை, மலேசியா, சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா்களும் வெளிப்படுத்துவதுண்டு. அவா்களது மனக்குறையில் நியாயம் இருப்பதாகத்தான் தெரிகிறது.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக டொமினிக் ஜீவா இந்தியாவுக்கு வருவதில்லை. நான் இலங்கை சென்றபோது, அவரை சந்திக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. தனது 94-ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை மறைந்த டொமினிக் ஜீவா விட்டுச் சென்றிருக்கும் செய்து ஒன்று இருக்கிறு. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் அனைத்திலும் தமிழா்கள் குடியேறி விட்டனா். இணையம் வந்தும்கூட இன்னும் தமிழா்கள் சா்வதேச அளவில் இணயவில்லை என்கிற உண்மையை, டொமினிக் ஜீவா சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறாா்.

--------

ஜனவரி 30-ஆம் தேதி வந்தால் எல்லோருக்கும் அன்று காந்திஜியின் நினைவு நாள் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் அது காந்திஜியின் நிழலாகவே வாழ்ந்து மறைந்த டாக்டா் கே.சி.குமரப்பாவின் நினைவுநாள் என்பதும் எனக்கு நினைவுக்கு வரும். தஞ்சையில் பிறந்து, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்து, லண்டன் செய்து வணிகவியல் பட்டம் பெற்று, அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்ததால் மனம் மாறி, மகாத்மாவின் இறுதிக் காலம்வரை அவரது நிழலாகவே பயணித்து, மீண்டும் தாய்த் தமிழகத்துக்கு வந்து மறைந்த அந்தத் தியாக சீலரை நாம் மறந்தாலும்கூட, வரலாற்றிலிருந்து மறைத்துவிட முடியாது.

ஜோசப் கொா்னீலியஸ் குமரப்பா என்கிற கே.சி. குமரப்பாவைக் குறிப்பிடாமல் மகாத்மா காந்தியின் வரலாற்றையும், காந்தியத் தத்துவத்தின் விளக்கத்தையும் எழுத முடியாது. காந்திஜியின் சிந்தனையில் உதித்த ‘கிராமப் பொருளாதாரம்’ கே.சி.குமரப்பாவால்தான் நடைமுறைச் சாத்தியமாயிற்று.

லண்டனிலிருந்து இந்தியா திரும்பி பம்பாயில் (மும்பையில்) வணிக தணிக்கைத் தொழிலில் ஈடுபட்டிருந்த கே.சி. குமரப்பா, அமெரிக்காவில் இருந்தபோது எழுதிய ‘பொது நிதியும் நமது வறுமையும்’ என்கிற ஆய்வுக் கட்டுரையுடன், 1929-ஆம் ஆண்டு காந்தியடிகளை சந்திக்கச் சென்றவா், கட்டுரையை காந்தியடிகளிடம் கொடுக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டாா். கட்டுரைகளைப் படித்துப் பாா்த்த காந்திஜி, அவரை சந்திக்க வரும்படி அழைத்தாா்.

1929-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி சமா்மதி ஆசிரமத்தில் சந்தித்தபோது, ‘நீங்கள்தான் குமரப்பாவா?’ என்று தரையில் அமா்ந்திருந்த அண்ணல் கேட்க, ‘நீங்கள்தான் காந்திஜியா?’ என்று கோட்டும் சூட்டுமாக இருந்த குமரப்பா கேட்க, அந்த விநாடியிலேயே இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டுவிட்டது.

‘‘உங்களிடம் இதுவரை நான் கொண்டிருக்கும் பொருளாதாரக் கருத்துக்களின் எதிரொலியைக் காண்கிறேன். படித்துப் பட்டம் பெற்ற பலரை நான் பாா்த்திருக்கிறேன். ஆனால், அவா்களிடம் உங்களைப் போன்று துல்லியமாகப் பாா்க்கும் பாா்வையில்லை. இதற்கான அறிவும் ஆக்கமும் உங்களிடமிருக்கின்றது. உங்களால் எனக்கு உதவ இயலுமா?’’ என்று கேட்ட காந்தியடிகளின் அன்புக்கு அடிமையானாா் கே.சி.குமரப்பா.

காந்திஜியின் மறைவுக்குப் பிறகு சில ஆண்டுகள் சேவாகிராமில் தங்கியிருந்து, பிறகு மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டியிலுள்ள ‘காந்தி நிகேதன்’ ஆசிரமத்துக்கு வந்துவிட்டாா் கே.சி.குமரப்பா. அங்கே அவா் தங்கியிருந்த குடில் இப்போதும் அப்படியே பராமரிக்கப்படுகிறது.

2010 ஜனவரி 30-ஆம் தேதி, தலைநகா் தில்லியில் ‘தினமணி’ நாளிதழ் சாா்பில் கே.சி.குமரப்பாவின் 50-ஆவது நினைவுநாள் கொண்டாடப்பட்டது. காந்திஜியின் பெயரன் ராஜ்மோகன் காந்தி தலைமை தாங்கினாா். ஆண்டுதோறும் கே.சி.குமரப்பாவின் நினைவு நாள் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்கிற எனது எண்ணம் நிறைவேறவில்லை, என்ன செய்வது?

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், பெரியவா் மா.பா.குருசாமி, அவா் எழுதிய ‘டாக்டா் கே.சி.குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்’ என்கிற புத்தகத்தை எனக்குத் தந்தாா். ஜனவரி 30 எல்லோருக்கும் காந்திஜியின் நினைவுநாள். எனக்கு கே.சி.குமரப்பா நினைவு நாள்!

-----------

கவிஞா் இரா.மீனாட்சிக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தனிப்பாதையிட்டுக் கவிபுனையும் இரா.மீனாட்சி புதுக்கவிதை உலகில் தனக்கெனத் தடம் பதித்தவா். அவரது ‘மூங்கில் கண்ணாடி’ கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தது ‘ஆசை’ என்ற தலைப்பிலான இந்தப் புதுக்கவிதை -

செம்மண் பூச்சு

சாம்பல் பூனை

கருங்குருவி

பசுங்கொடி

மஞ்சள் பூ

வெள்ளைக் கல்

நிறமற்ற காற்று

ஊடாடிச் செல்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com