இறந்து போதலே இன்பம்! 

தலைவியைத் துய்த்த தலைவன், பரத்தை ஒழுக்கம் பற்றினான். தலைவி வருத்தமுற்றாள்.
இறந்து போதலே இன்பம்! 


தலைவியைத் துய்த்த தலைவன், பரத்தை ஒழுக்கம் பற்றினான். தலைவி வருத்தமுற்றாள். அது தொடர்பாகத் தலைவிக்கும் தோழிக்கும் இடையே ஓர் உரையாடல். அதனை ஓர் அழகிய பாடலாக விரிக்கிறார் இக் குறுந்தொகைப் (நெய்தல் திணை) பாடலாசிரியர் புலவர் சாத்தனார். 

நெய்தல் நிலம். அந்த நெய்தலின்கண் ஓர் அழகிய நாரை. அந்த நாரை கடற்கரை எக்கரில் (இடுமணல்) படர்ந்துள்ள அடும்பங் கொடிமீது (அடம்பங்கொடி என்றும் கூறுவர்) அமர்ந்து மலரைச் சிதைத்து மீனை உண்ணுகிறது. இதுதான் பாடல் படம்பிடிக்கும் காட்சி. 
அடும்பங்கொடி என்பது தலைவி. அதில் பூத்துள்ள அழகிய மலர் என்பது அவளது அழகு. மலரைச் சிதைத்து நாரை மீனை உண்ணுதல் என்பது, தலைவன் தலைவியின் அழகைச் சிதைத்து இன்பம் துய்த்தல். இதுவே இக்காட்சியிலிருந்து நாம் பெறும் உள்ளுறை. 
மீனைத் தின்ற நாரை வேறிடம் செல்லுதல் என்பதும், மீனுண்டு மீளுதல் என்பதும் இயற்கை. அதனைப் போன்று தலைவியிடத்து இன்பம் துய்த்த தலைவன், பரத்தையின்பாற் சென்று மீண்டும் தலைவியிடம் வந்து நிற்கிறான். அண்மைத்து நிற்கும் அவன் கேட்கும் பொருட்டு, அவன் வரவை உணராதவள் போன்று, தலைவி தோழிக்குக் கூறுகிறாள். 
தலைவி: "நம்மை நாடிவரும் தண்ணந்துறைவனை வழிமறித்துக்கொண்டு கேட்பதாகச் சொன்னாயே... என்ன கேட்பாய்?' 
தோழி: "உன்னால் சிதைக்கப்பட்ட எம் தலைவியின் அழகினைத் தா!' என்று கேட்பேன். 
தலைவி: "சரி! அப்படியே கேட்போம்! அவ்வாறு கேட்பது நமக்கழகா? அது பாவம் இல்லையா? நம்மிடம் வந்து அழகினைத் தா!' என்று இரந்து நின்றார். நாமும் இரக்கமுற்று நம் அழகினைத் தந்தோம். இடருற்றாருக்குத் தக்க வேளையில் உதவிய பொருளை, நாம் இடருறும்போது திருப்பிக் கொடு! என்று கேட்பது எப்படி அறமாகும்? இரந்தவர்க்குக்  கொடுப்பதுதானே கொடை! கொடையைத் திருப்பிக் கொடு என்று கேட்பது கொடையாளன் குணமில்லையே... அவ்வாறு கேட்கும் இழிவைவிட இறந்து போதலே இன்பம்' என்று தோழியை மறுத்துரைக்கும் தலைவியின் பண்பு பாராட்டிற்குரியது.
இடர்ப்பட்ட தலைவி முதலில் "கொள்வாம்' என்று உடன்பட்டு,  பின்னர் மறுத்துரைப்பது தலைவியின் "அறிவும் அழகு' என்பதை உணரமுடிகிறது. பரத்தமை ஒழுக்கத்தால் துன்புறுத்திய தலைவனின் பிழையைக் கடிதல் தலைவிக்குத் தகுதியன்று என்பதை இப்பாடல் நமக்குக் கருத்தாகத் தருகிறது. 

அடும்பவிழ் அணிமலர் சிதைஇய மீன்அருந்தும்
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணந்துறைவற் தொடுத்து நம்நலம்
"கொள்வாம்' என்றி தோழி, கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து "அவை தா' என் சொல்லினும்
இன்னாதோ நம் இன்னுயிர் இழப்பே?  

(குறுந்-349)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com