ஒரே ஒரு சொல்!

உயிரைவிட உயரியது புகழ். "தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பது தமிழ் மறை. இத்தகைய "புகழ்'  (தொடர் தன்மை - நிலைப்பாடு) என்ற ஒரே ஒரு சொல்லை கம்பர் (சு.கா.) எவ்வாறு வியக்க வைக்கிறார் தெரியுமா?
ஒரே ஒரு சொல்!


உயிரைவிட உயரியது புகழ். "தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பது தமிழ் மறை. இத்தகைய "புகழ்'  (தொடர் தன்மை - நிலைப்பாடு) என்ற ஒரே ஒரு சொல்லை கம்பர் (சு.கா.) எவ்வாறு வியக்க வைக்கிறார் தெரியுமா?

 "விண்ணவர் புகழை வேரோடும் தின்ற வல் அரக்கரின்' (பா.5628) அரசன் ராவணன்.  அளவேயில்லாத புகழைப் பெற்றவன் அவன். கம்பர் எண்ணற்ற பாடல்களால் இவனைப் புகழ்ந்து மகிழ்கிறார். எதுவரை? அவன் மன்னிக்கவே முடியாத குற்றமான மாற்றான் மனைவியை மாயையால் கவர்ந்த வரை. 

அதன் பின்னர் அது (புகழ்) அழியப்போவதை "ஊர் தேடு படலத்தில்' முதலாகக் குறிப்பிட்டார். அனுமன் இலங்கையை அடைந்தபோதே, அவன் ராவணனின் 
"புகழ் புகுந்து' உலாவினான் (4894) என்கிறார். மேலும் அனுமனே, ராமனின் புகழ் என்பதை, "அயோத்தி வேந்தன் புகழ்' (4934) என்று குறிப்பிட்டார். அறத்தின் புகழ் மறத்தின் புகழை அழிக்க வந்தது என்பதைச் சுட்டிக் காட்டினார். 

அனுமன் இலங்கையை அடைந்தபோது, "இராகவன் புகழைத் திருத்தினான்' (வளர்த்தான்-பா.4966) என்கிறார். அனுமன் இலங்கையினுள் அனைத்து இடங்களையும் தேடுகையில், "இராகவன் புகழ் எனும் நலத்தான்' (4967) என்று மறுபடியும் ராமனின் புகழே அனுமனது வடிவம் என்று வலியுறுத்துகிறார். அத்தோடு நிற்கவில்லை கம்பர். "அனுமன் உருவத்தில் வந்த ராமனின் அம்பு' என்று ஒரு படி மேலும் சென்றார். "இராகவன் சரம் என புகழோன்' (4978) என்றார்.

சீதையின் துணையில்லாமல் எதுவும் நடக்காதே! அதையும் கம்பர் குறிப்பிடத் தவறவில்லை. ராவணனது (குறைவான) புகழ் அழிய வேண்டுமானால் அதைவிட அதிகமான புகழ் படைத்தவராலேதானே முடியும்? இக்கருத்தை சீதையின் உரையாகவே "வான் உயர் பெரும் புகழ்க் குலத்தில் தோன்றினேன்' (5243) என்று வரவழைத்தார்.

மிதமான புகழைப் பெற்றவன் ராவணன். சீதையோ "பெரும் புகழுடன்' தோன்றியவள். சீதையின் புகழ் வளர்ந்து கொண்டும், ராவணன் புகழ் தேய்ந்தும் வருவதை  அனுமனின் பேருருவை வியந்து பாராட்டி தாயாரே  சொன்னது:   "பூண்டேன் எம்கோன் பொலங்கழலும், புகழேயன்றி புன்பழியும் தீண்டேன்' (5340). ராவணனின் புன்பழி நீண்டு, புகழைத் தேய்த்ததாம். 

சுவரில் தேய்க்கப்பட்டு அழிந்த தன் தம்பி அக்க குமாரனைப் பார்த்து இந்திரசித்தன் கதறினான்: "எம்பியோ தேய்ந்தான், எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது' (5721). இது ஒப்புதல் வாக்குமூலம். புகழை அடைவது கடினம். அதைவிடக் கடினம் பெற்றதை நிலைநிறுத்திக் கொள்வது. தவமும் அப்படியே. எனவேதான் அகத்தியரை, "நின்ற தவம்' (2680) செய்தவர்களினும் மேன்மையானவன் என ராமனே சொல்கிறான்.  

ஒரே ஒரு சொல்லினாலேயே தொடர்ந்து ஒரு கருத்தை அழகாகச் சொன்ன கம்பர் பெருமானை யாவராலும் வேண்டிய அளவு புகழ இயலாது என்பதால்,  "எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே' (5480) என்கிற கம்பரது சுந்தரகாண்டப் பாடலாலே நிறைவு செய்கிறேன்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com