வேங்கடத்தில் ராசி நட்சத்திரத் தொற்று!

"அட்டப் பிரபந்தம்' என்றதும் திவ்வியக்கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே நினைவுக்கு வருவார்.
வேங்கடத்தில் ராசி நட்சத்திரத் தொற்று!


"அட்டப் பிரபந்தம்' என்றதும் திவ்வியக்கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே நினைவுக்கு வருவார். திருவரங்கத்தைத் தவிர்த்துப் பிற திருப்பதிகளைப் பாடாத விரதங் கொண்டிருந்த அவரைத் திருவேங்கடத்தான் சோதிக்க விரும்பி அவருக்குக் கண்டமாலை என்னும் வாத பித்த சிலேத்துமத் தொடர்பில் கெட்டியான மினுமினுப்புடன் கூடிய கட்டிகள் கழுத்தைச் சுற்றி வருவதான நோயைத் தந்தான். இந்நோய் நீங்கப் பாடியவையே "திருவேங்கட மாலையும்', "திருவேங்கடத் தந்தாதி'யும் ஆகும். இவை அட்டப் பிரபந்தத்துள் அடக்கம். 
யாப்பு வகையில் யமகம், திரிபு, சிலேடை என அணிநலம் கொழிக்கப்பாடும் ஐயங்கார் வேங்கடத்தை நூறு பாடல்களால் பாடி சேவித்தார். அவற்றுள் 16 முதல் 26 வரையான 11 பாடல்களை, ராசி நட்சத்திரங் கொண்டு கற்பனையுடன் சிலேடையாகப் பாடியுள்ளது சிந்தைக்கு விருந்து.

வேங்கடமலை வானமளவிற்கு உயர்ந்துள்ளது எனப் பாட வந்த ஐயங்கார், வானத்தில் தோன்றும் காட்சிகள் ராசிகளாக, நட்சத்திரங்களாகக் கற்பனையுடன் காணப்படுவதால் மலையிலுள்ள மக்களும் விலங்கு, பறவை போன்ற உயிரினங்களும் அவற்றைக் கண்டு மனம் மயங்கி ஏமாற்றம் அடைவதாகப் பாடியுள்ளார். 

மேகத்தில் துலாக்கோல் (துலாராசி) காட்சியைக் கண்ட குறவர்கள் தம் அணிகலன்களை "அத்தராசில் (துலாக்கோலில்) எடையிட்டுப் பார்ப்போமா!' என எண்ணி மயங்குகின்றனராம். குறவர் குலக்கன்னிப் பெண் ஒருத்தி மலையின் மூங்கில்களைப் பார்த்து தெருவில் கழைக்கூத்தாடும் தம் போன்ற கன்னியரோ (கன்னிராசி) என எண்ணினாளாம்.

சிம்மராசி போன்ற சிங்க உருவைப் பார்த்த பெண் யானை அச்சமுற்று ஆண் யானையைத் தேடியதாம். ஆடு போன்ற மேக வடிவத்தைப் பார்த்த புலி, வாலை உயர்த்தி ஆட்டை (மேடராசி) அடித்துத் தின்ன எண்ணி மயங்கியதாம். நண்டு போன்ற காட்சியைக் கண்ட குரங்குகள் நண்டுகள் (கடகராசி) தம்மை வந்து பற்றுமோ எனப் பயந்து ஓடினவாம். குரங்கிற்கு நண்டு பகையாகும்.

வானத்து நிலவின் களங்கத்தை மான் என மயங்கிய குறவர்கள் தினைப் புனத்தை மான் வந்து அழிக்காதபடி விரட்ட, வில்லை வளைத்து (தனுர் ராசி) மயங்கினராம். உயர்ந்த மூங்கிலில் கட்டிய தேன் கூட்டை வான் நிலவின் பிறைக் கூர்மை கிழித்ததால் தேன் உடைந்து குடத்தில் சொரிவதுபோல (கும்பராசி) இருந்ததைக் குறவர்கள் கண்டனராம். அத்தேன் கூட்டை நெருங்கும் விண்மீன்கள் மன்மதனின் மீனக்கொடி போல் மகர ராசியாய் இருந்ததாம் (மகரம் - ஒரு வகை மீன்).

மலையிலுள்ள வெண்ணிறக் கொக்குகள் விண்மீன் (நட்சத்திரம்) நிழலைக் கோனேரித் தண்ணீரில் மீன் எனக் கண்டு கொத்தித் தின்ன (மீன ராசி) மயங்கிற்றாம். இந்நிலையில் பெண் குரங்கு ஆண் குரங்கிடம் மண்ணில் உள்ள கிழங்குகளை எடுத்துத் தரும்படிக் கேட்டதை விண்ணிலிருந்து காது கொடுத்துக் கேட்ட மூல நட்சத்திரம் (மூலம் - கிழங்கு) நம்மைப் பறித்து விடுவார்களோ என அஞ்சினவாம்.

பொன்னாலான ஊஞ்சலில் ஆடும் பெண்கள் ஊஞ்சல் கட்டித் தொங்கவிடப்பட்ட அந்த விட்டத்தைத் தொடுவதுபோல விளையாடுவது அவிட்ட நட்சத்திரத்தை (அ - அந்த, விட்டம் - உத்திரம்) தொட்டும் தொடாததுமாய் விளையாடுவதான இடமாக வேங்கடம் இருந்ததாம். 

இப்படியாக இயற்கை சூழ்ந்த வேங்கடமலையை ராசியுடனும் நட்சத்திரத்துடனும் சிலேடை வகையாகப் பொருத்தி ஐயங்கார் மலையை அனுபவித்தாலும், வேங்கடவனையே அனுபவித்தார் என்பது கருத்து. இக்கருத்தினைச் சாரமாக உணரும் விதமாகவே ஒவ்வொரு பாடலிலும் வேங்கடவனின் வினோத, வித்தகக் கதைக்கூறுகள் விரும்பிப் படித்துத் துதிக்குமாறு பாடப்பட்டுள்ளன. பற்றித் தொடரும் வேங்கடவனின் பக்தித் தொற்றுக்குப் பலன் உண்டு என்பதே திருவேங்கடமாலையின் தொட்ட இடமெல்லாம் மணக்கும் துளசி மாமணமாம் என்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com