எவ்வாறு பெற்றாரோ?

குறுந்தொகை இலக்கியம் மிகக் குறைந்த அடிகளில் உணர்ச்சிகள் கொப்பளித்துக் கொட்டும் சிற்றருவி என்றே கூறலாம்.
எவ்வாறு பெற்றாரோ?

குறுந்தொகை இலக்கியம் மிகக் குறைந்த அடிகளில் உணர்ச்சிகள் கொப்பளித்துக் கொட்டும் சிற்றருவி என்றே கூறலாம். பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது என்பது இப்பாடலுக்கான கூற்று. மதுரைச் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாலைத் திணைப் பாடல் இது. 

"தோழி! பாம்பினது சட்டை மேல் எழுந்தாற் போல வெயிலில் விளங்குகின்ற நண்பகலில் இரை தேட விரும்பிப் பறந்து சென்ற ஆண் புறாவை நினைத்து புள்ளிகள் பொருந்திய கழுத்தையுடைய குறுநடை நடந்து செல்லும் பெண் புறா, வெப்பத்தால் பொரிந்த அடியையுடைய கள்ளி மரத்தில் வெடித்த காயின் அழகிய கிளைப் பிரிவில் வருந்தி ஆண் புறாவை அழைத்துக் கூவும் அரிய இடத்தையுடைய காட்டுவழியைக் கடந்து, பிரிந்து சென்று நெடுந்தூரத்தில் தங்கியிருக்கும் வல்லமையை நம் தலைவர் எவ்வாறு பெற்றாரோ?' என்கிறாள் தலைவி.

கடும் வெயிலில் பெண் புறாவுக்காக இரைதேடிச் சென்ற ஆண் புறா கனல் ஆற்ற மாட்டாது துடிப்பதை அறிந்து பெண் புறா கள்ளிச்செடி நிழலில் காத்திருந்து, ஆண்புறாவைக் கூவி அழைப்பதைப்போல தலைவியும் தலைவனின் பிரிவால் ஆற்றமாட்டாது துயருறுகிறாள். 

யாங்குஅறிந் தனர்கொல் தோழி! பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்புஅவிர் அமையத்து,
இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம்கவட்டுத் 
தயங்க இருந்து புலம்பக் கூஉம்,
அருஞ்சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லு வோரே?  
(குறுந்.154)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com